Vivasayam | விவசாயம்

மார்ச் 3 – உலக வன உயிரின தினம் (வாகன ஓட்டிகளின் கனிவான கவனத்திற்கு)

 

 


ஒரு தீண்டப்படாத, தொன்னலம் வாய்ந்த வனப்பகுதியை வெகு விரைவில் சீர்குலைக்க வேண்டுமெனில், செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் – அதன் குறுக்கே ஒரு சாலையை அமைத்தால் போதும். கொஞ்சம் கொஞ்சமாக அவ்வனப்பகுதி அதன் இயற்கைக் தன்மையை இழந்துவிடும். சாலைகள் மட்டுமல்ல காட்டில் தீ பரவாமல் இருக்க நீளவாக்கில் மரங்களையும் தாவரங்களையும் அகற்றி ஏற்படுத்தும் தீத்தடுப்பு வெளிகள் (Fire lines), மின் கம்பிகளின் கீழேயும், கால்வாய்கள், இரயில் பாதைகள், பிரம்மாண்டமான தண்ணீர் குழாய்கள் முதலியவை உயிரினங்களின் வாழிடங்களை இரண்டு துண்டாக்கும் இயல்புடையவை. இவற்றை ஆங்கிலத்தில் Linear intrusion என்பர்.

காட்டின் குறுக்கே செல்லும் சாலைகளிலும், இரயில் பாதைகளிலும் அடிபட்டு சின்னஞ் சிறிய பூச்சி, தவளையிலிருந்து உருவில் பெரிய யானை, புலி என பல உயிரினங்கள் அடிபட்டு பரிதாபமாக உயிரிழக்கின்றன. அது மட்டுமல்ல, சாலையோரங்களில் களைகள் மண்டி காட்டுத்தீ பரவுவதற்கும், இக்களைச்செடிகள் அங்குள்ள மண்ணுக்குச் சொந்தமான தாவரங்களை வளரவிடாமலும் தடுக்கின்றன.

இதைத் தடுப்பதற்குச் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன?

ஒரு வனப்பகுதிகளின் வழியே செல்லும் சாலைகளில் பயணிக்கும் போது நம்மை அறியாமலேயே நாம் செல்லும் வண்டிச் சக்கரத்தால் அரைத்து, அடித்து பல உயிர்களை சாகடிக்கின்றோம். காடுகளின் வழியாகச் செல்லும் சாலைகள் மனிதர்களுக்கு மட்டுமே இல்லை அங்கு வாழும் உயிரினங்களுக்கும் சேர்த்து தான் என்பது அவ்வழியே பயணிக்கும் பொதுமக்களும், சுற்றுலாவினரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வகையான உயிரிழப்பை தடுக்க பொதுமக்களின், சுற்றுலாவினரின் உதவியும், ஒத்துழைப்பும் பெருமளவில் தேவைப்படுகிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்

1. காட்டுப்பகுதியில் வேகத்தைக் கட்டுப்படுத்தி மெதுவாகச் செல்வது,

2. வழியில் தென்படும் குரங்குகளுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் தின்பண்டங்களை கொடுக்காமல் இருப்பது,

3. உணவுப் பண்டங்களை, பிளாஸ்டிக் குப்பைகளை சாலையோரத்தில் தூக்கி எறியாமல் இருப்பது, வன விலங்குகலின் உயிரை பரிக்கும் ” மதுபான பாட்டில் களை ” வனப் பகுதியில் வீசாமலும் இருப்பது,

காடுகளின் வழியாகச் செல்லும் சாலைகளை அளவிற்கு அதிகமாக அகலப்படுத்தக் கூடாது. சாலையின் இருபுறமும் மரங்கள் இருத்தல் குரங்கு, அணில் முதலிய மரவாழ் (arboreal) உயிரினங்களின் இடம்பெயர்வுக்கு இன்றியமையாதது. சாலைகளில் உயிரினங்களின் நடமாட்டத்திற்கு ஏற்ப தகுந்த இடைவெளியில் வேகத்தடைகள் இருப்பதும் அவசியம். இவ்வகையான இடங்களில் நெடுஞ்சாலைத் துறையினரும், வனத்துறையினரும், ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து கருத்துகளைப் பரிமாரி செயல்படுதல் அவசியம்.

#அனைத்து ஓட்டுநரின் கவனத்திற்கு

இறைவன் படைப்பில் விலங்குகளும் சுதந்திரமாக உயிர் வாழ உரிமை உண்டு

நாட்டில் நிகழும் சாலை விபத்துக்களில் பலியாவது மனித உயிர்கள் மட்டுமல்ல ,
வன விலங்குகளும்தான் .

சில ஆண்டுகளாக சாலைகளில் உயிரிழக்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மிகவும் மன வேதனையை தருகிறது , வன விலங்குகள் அதிகளவில் சாலைகளை கடக்கும் இடங்களில் வாகன ஓட்டுனர்கள் மிகவும் கவனமாகவும் பொருமையுடனும் வாகனத்தை ஓட்ட வேண்டும் .
” நமது வனங்களும் வன உயிரினங்களும் மதிப்பு மிக்கவை , அவற்றை அழியாது பாதுகாப்போம் ”

Thanks to 😛 Jeganathan

Exit mobile version