நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஒருங்கிணைந்த இயற்கை விவசாயி வீராச்சாமியின் தோட்டம். நாம் சென்றவுடன் மிகவும் உபசரிப்புடன் நம்மை வரவேற்ற அவர் முதலில் தான் பின்பற்றும் இரண்டு கொள்கைகளை நம்மிடம் கூறினார். இயற்கை விவசாயி தனக்கு தேவையான இடுபொருட்களை வெளியில் இருந்து வாங்க கூடாது என்பதே அவருடைய முதல் கொள்கை. ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு என்பதே அவருடைய கொள்கை. கிராம நிர்வாக அலுவலராக இருந்து ஓய்வு பெற்ற அவர் தான் பணியில் சேர்வதற்கு முன்னரே நிலம் வாங்கி விவசாயம் செய்ய தொடங்கொயுள்ளார். அவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி ஆகும்.
19 வருடங்களாக ரசாயன உரங்கள் இந்த மண்ணிற்கு வந்ததில்லை என்று கூறும் அவர் தன் நிலத்திற்கு தேவையான அங்கக இடுபொருட்களை தன் பண்ணையிலேயே உற்பத்தி செய்து கொள்கிறார். மாந்தோப்பு, நாட்டுகோழிப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, வாழை மரங்கள், மீன் குட்டைகள் என்று நான்கரை ஏக்கரில் பரந்து விரிந்து இருக்கிறது அவரது ஒருங்கிணைந்த பண்ணை. பஞ்சகவ்யா, மண்புழு உரம், பூச்சி விரட்டிகள், அசோலா, பயிர் வளர்ச்சி ஊக்கிகள், கோழிக்கு தேவையான மருந்துகள் ஆகியவற்றை தனக்கு மட்டும் தன் தோட்டத்தில் தயாரித்து கொள்ளாமல் தன்னிடம் அவற்றை கேட்டு வருபவர்களுக்கும் கொடுக்கிறார்.
தொடர்ந்து 8 வருடங்களாக அசோலா உற்பத்தி செய்து இதுவரை 1500 பேருக்கு இலவசமாக அசோலா கொடுத்துள்ளார். கோழிகளுக்கு தினசரி தீவனமாக அசோலா கொடுக்கிறார். திரிகடுகம் என்ற மூலிகை பொடியை வீட்டிலே தயார் செய்கிறார். தன் மீன் குட்டையில் 7 வகையான மீன்களை வளர்க்கிறார். ஒரு மீன்குஞ்சினை இரண்டு ரூபாய்க்கு வாங்கும் அவர் சரியான எடை வந்தவுடன் கிலோ 160 ரூபாய் வரை விற்பனை செய்கிறார். தான் உற்பத்தி செய்யும் அனைத்தையும் நேரடியாகவே நுகர்வோருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று கூறும் அவர், தன் நிலத்தினை இதுவரை 15000 மேற்பட்டோர் பார்வையிட்டு சென்றிருந்தாலும் தனக்கு நிலையாக 15 நுகர்வோர்கூட இல்லை என்று மிகவும் வருத்ததுடன் கூறுகிறார்.
தேனீ வளர்ப்பு மூலம் மாதத்திற்கு ஒருமுறை ஒரு தேனீ பெட்டியில் இருந்து இரண்டு கிலோ வரை தேன் எடுக்கிறார்.
மீன் குட்டைக்கு நடுவில் கோழிகளுக்கு கூடாரம் அமைத்துள்ளர். ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு என்பதற்கு ஏற்ப கோழிகளின் கழிவு மீன்களுக்கு உணவாகிவிடுகிறது. மீன்குட்டையினை சுற்றி வாழைமரங்கள், கிளைரிசிடியா, சூபாபுல், வேம்பு போன்ற 700 மரங்களை வளர்த்து வருகிறார். மாப்பிளைச்சம்பா, பூங்கார், சிவப்புகவுணி போன்ற பாரம்பரிய நெல் ரகங்களையும் பயிரிட்டுள்ளார். சானஎரிவாய்களன் அமைத்துள்ளார். தன் குடும்பத்துடன் சேர்ந்து முழு நேர பணியாக தன் பண்ணையை பராமரித்து வருகிறார்.
இயற்கையில் விளையும் உணவு பொட்களை அதிகம் விரும்பும் நாம் அவற்றினை கடைகளின் கண்ணாடிகளுக்குள் தேடாமல் நேராடியாகவே விவசாயிகளிடமிருந்து வாங்கினாலே வீராச்சாமி போன்ற விவசாயிகள் தங்களுடைய முயற்சிக்கேற்ற லாபத்துடன் வெற்றி பெறலாம்.
எ.செந்தமிழ்,
அங்கக உழவன்,
நான்காம் ஆண்டு இளம் அறிவியல் வேளாண் மாணவர்,
அண்ணாமலை பல்கலைக்கழகம்.
மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வீராச்சாமி
மீன் குட்டை
மண்புழு உர கொட்டகை
மீன் குட்டையின் மீது நாட்டுக்கோழி வளர்ப்பு