பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுப்பதில் முக்கியப் பங்காற்றிவந்தவர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த ‘நெல்’ ஜெயராமன். நம்மாழ்வாரின் இளைஞர் குழுவில் பயிற்சிபெற்ற ஜெயராமன், அவரின் வேண்டுகோளுக்கிணங்க பாரம்பர்ய நெல் ரக உற்பத்தியைப் பெருக்கிவந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய ரகங்களை மீட்டிருக்கும் நெல் ஜெயராமன், ஒவ்வொர் ஆண்டும் திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதிரெங்கம் கிராமத்தில் தேசிய அளவிலான நெல் திருவிழாவை 2006-ம் ஆண்டு முதல் நடத்திவந்தார்.
இரண்டு ஆண்டுகளாகத் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுவந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.10 மணியளவில் நெல் ஜெயராமன் காலமானார்.
12 ஆண்டுகளாக நெல் திருவிழாவை நடத்திவந்த தேசிய விருது, மாநில விருது எனப் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். 50 வயதாகும் இவருக்கு சித்ரா என்ற மனைவியும், 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், இயற்கை ஆர்வலர்கள், விவசாய பெருமக்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினர் நெல் ஜெயராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அக்ரிசக்தியின் சார்பிலும் அனைத்து விவசாயிகளின் சார்பிலும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்
அதே சமயம் நெல் ஜெயராமன் அவர்கள் முன்னெடுத்த நெல் திருவிழா தொடர்ந்து நடைபெறுவதை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் எந்த ஊரில் நெல் திருவிழா நடைபெற்றாலும் அக்ரிசக்தியின் சார்பில் சிறு தொகையை நெல் திருவிழாவிற்கு வழங்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்.