அக்ரிசக்தியின் என்னாப்பு குழுவில் ( வாட்ஸ்சப்) ஒரு கீழேயுள்ள செய்தியை கொண்ட ஒரு செய்தி பகிரப்பட்டது. அந்த செய்தியின் தன்மை குறித்து ஒரு சிறிய விவாதம்
//ஆடி பட்டம் தேடி விதைச்சுட்டு ஐப்பசி மழை நேரத்தில் பட்டாசு வெடிக்கும்போது ( பட்டாசில் கந்தகம், பாஸ்பரஸ், பொட்டாசியம் கலந்து இருக்கும்) , அந்த புகை மழை மேகத்தில் கலந்து மழையாய் பயிர் மேலே விழும். அந்த மழை நீரில் பொட்டாசியக்கலவை ( உரம்) கலந்து இருக்கும், அதற்குத்தான் பட்டாசு வெடிப்பது//
என்ற என்னாப்பு(வாட்சப்)செய்தி வதந்தியா அல்லது உண்மையா என்று பார்த்தால் நிச்சயம் அது வதந்திதான்.
இதுபற்றி விவசாய மாணவர் திரு.செந்திமிழ்
“ஒவ்வொரு சத்தும் ஒவ்வொரு வினைகூறுகளாகதான் பயிர்களுக்கு தேவைப்படுகின்றது (எ.கா நைட்ரஜன் NH+ என்ற முறையில் நெற்பயிர் எடுத்துக்கொள்ளும்.) ஒவ்வொரு சத்தும் ஒவ்வொரு வகையில் வினைபுரியும், அவ்வாறு வினைபுரியும் பொழுது சுற்றுச்சூழலுக்கு சீர்கேடே தவிர பயிர்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடையாது வாட்சஸ் செய்தியில் கூறியபடி பொட்டாசியக் கலவை மழை நீரோடு சேர்ந்தாலும் அது வேறு வினையாகதான்(chemical) மாறுமே தவிர அவர்கள் சொல்லும் சத்தாக(nutrient) பயிருக்கு இருக்காது. இது நிச்சயம் வதந்தீதான்” என்கிறார்.
அதோடு ”ஆடிப்பட்டத்தில் விதைத்தால் ஐப்பசி மாதத்தில் அறுவடைக்கு வந்துவிடும் பயிர்களுக்கு நாம் இப்போது பொட்டாஷ் அளித்தால் எந்த பயணும் கிடையாது. P.K நாம் விதைக்கும்பொழுதே கொடுத்துவிடவேண்டும்” என்றும் தெரிவித்தார்.
முதுநிலை படித்துவரும் திரு.ஜெயராஜ்
”பாஸ்பரஸ், கந்தகம், பொட்டசியம் என எரியும் தன்மை கொண்ட எந்த பொருளையும் எரியவிட்டு புகையாகும்போது அதனுடையே தன்மையே முழுவதுமாக மாறி நமக்கு சீர்கேட்டையே விளைவிக்குமே தவிர இதனால் நமக்கு எந்தவிதமான நன்மையும் கிடையாது” என்றார்
எனவே உங்கள் சமூக தளங்களில் வரும் எல்லா செய்திகளிலும் உண்மை தன்மை அறியவேண்டியது அவசியம். குறிப்பாக விவசாயம் , மருத்துவம், உணவு குறித்து வரும் செய்திகளில் உண்மை தன்மையை அறிந்தபின் பயன்படுத்தவேண்டியது மிக அவசியம்