தமிழக அளவில், அனைத்து வட்டாரங்களும் பயன்பெறும் வகையில், பிரதமரின் விவசாய நீர்பாசன திட்டம் மற்றும் நுண்ணீர் பாசன திட்டம் மற்றும், பாசன கட்டமைப்பு உருவாக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில், பாசன கட்டமைப்பு உருவாக்க, மானிய உதவி வழங்கப்படுகிறது. நுண்ணீர்பாசனம், சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழை துாவுவான் அமைக்கும் விவசாயிகள், 50 சதவீத மானியத்தில், மின்மோட்டார் அமைத்து கொள்ளலாம். மின்மோட்டர் அல்லது டீசல் பம்ப் செட் அமைக்க, அதிகபட்சம், 15 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
பாசனத்துக்கு தண்ணீரை குழாய் மூலம் கொண்டு செல்ல, 10 ஆயிரம் ரூபாய், நீர் சேமிப்பு தொட்டி அமைக்க, 40 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக சொட்டுநீர் பாசன கட்டமைப்பை நிறுவும் விவசாயிகள், இத்திட்டங்களிலும் மானியம் பெறலாம்.
மாவட்ட அளவில், நிலத்தடி நீர் அதிகம் கிடைக்கும் பகுதியில், குறைந்த ஆழம் உள்ள ஆழ்குழாய் கிணறு அல்லது சிறிய கிணறுகள் அமைக்க, 25 ஆயிரம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும். நடப்பு ஆண்டில் இருந்து, இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பதிவு செய்துள்ள விவசாயிகள், முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். கட்டமைப்பை நிறுவிய பிறகு, பின்னேற்பு மானியத்தை பெற்று கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்து கொள்ள, வட்டார வேளாண் மை அல்லது தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்,’ என்றனர்.