தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில் உற்பத்தி செய்யப்படும் ஏலக்காய் முதல் காய்கறிகள் வரையிலான பொருள்கள் சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் விற்பனைக்குக் கிடைக்கும். இதற்கான விற்பனை தொடக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் தமிழக அரசின் புதிய முயற்சியைத் தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை, விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைப் பொருள்களை சந்தைப்படுத்த ஒரு புதிய முயற்சியாக சமையலுக்கு நறுமணமூட்டும் பொருள்கள் அடங்கிய பாக்கெட்டுகள், உலர் பழங்கள் பாக்கெட்டுகள் மற்றும் நீரா சர்க்கரை குறைந்த விலையில் நுகர்வோர் பயனடையும் வண்ணம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.300 பாக்கெட்: ஏலக்காய் (50 கிராம்), மிளகு (50 கிராம்), கிராம்பு (50 கிராம்), ஜாதிக்காய் (30 கிராம்), ஜாதிபத்திரி (20 கிராம்), லவங்கப்பட்டை (25 கிராம்) ஆகிய ஆறு வகையான நறுமணமூட்டும் பொருட்கள் அடங்கிய பாக்கெட் ரூ.300-க்கு பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது
மேலும், தமிழகத்திலேயே உற்பத்தி செய்யப்பட்டு, மதிப்பு கூட்டப்பட்ட சுவையூட்டப்பட்ட முந்திரி, மா, அன்னாசி, நெல்லி, பலா போன்ற பதப்படுத்தப்பட்ட பழங்கள் போன்றவற்றையும், தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் நீரா சர்க்கரை மற்றும் நீரா கருப்பட்டி போன்றவையும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செம்மொழிப் பூங்கா: சென்னை செம்மொழிப் பூங்காவில் உள்ள தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் விற்பனை மையத்தில் இதற்கான விற்பனையை வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் என்.சுப்பையன் மற்றும் தோட்டக்கலைத் துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பொருள்களை அதிகளவில் வாங்க விரும்புவோர் 9942835261 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது dd.dohpc.chn@tn.gov.in  மின்னஞ்சல் முகவரியில் முன்பதிவு செய்தோ பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், விவரங்களை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் இணையதளம்  tnhorticulture.tn.gov.in&மூலமாகவும் @thottakalai என்ற சுட்டுரை கணக்கின் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழக அரசின் இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து நீடிக்கவேண்டும். அதே சமயம் முயற்சியால் நடைபெற்றுவரும் எல்லா பணிகள் தொய்வின்றி தொடர அரசு முயலவேண்டும் என்பதே விவசாயிகளின் ஆவல்