குறைந்த நாட்களில் வளர்ந்து பூமியை கவர்ந்து கொள்ளும் இத்தாவரமானது பருப்புவகை தாவரங்களுள் ஒன்றாகும். மேலும் இது விளை நிலங்களில் சுயமாக வளரும் தன்மை கொண்ட தாவரம் ஆகும். மண் அரிப்பை தடுப்பதற்கும் மிளகு, தென்னை போன்ற தோட்டங்களில் வளரும் அருவருப்பான களைகளை மேலாண்மை செய்யவும் உள்ள விலை மலிவான மற்றும் பயனுள்ள தாவரம் இதுவாகும். பல்லாண்டு வாழும் இத்தாவரமானது கொடிவகையைச் சார்ந்தது. கால்நடைகள் விரும்பி உண்பதில்லை. 16 வாரங்களில் 2.5 மீட்டர் நீளம் வரை வளரும் தன்மை கொண்டது. வேர்கள் முழுவது 25க்கும் மேற்பட்ட வேர் முடிச்சிகளை உடையது. தாவரத்தின் 50 சதவிததுக்கும் மேற்பட்ட முடிச்சிகள் வேர்களிலே உள்ளன.
மிகவும் குறைந்த நாட்களில் வளரும் இத்தாவரமானது கோடை காலங்களில் சரகுகள் உதிர்ந்து காணப்படுவதோடு நிலதிற்கு மூடாக்காகவும் பயன்பட்டு மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாப்பதுடன் அவையே மக்கி பயிர்களுக்கு நல்ல உரமாகவும் மாறுகிறது. கோடைக்காலங்களில் இலை தழைகள் உதிர்ந்தாலும் மழைக்காலங்களில் இத்தாவரம் நங்கு வளர தொடங்கிவிடுகிறது. ஒருமுறை விதைத்தாலே பலவருடங்கள் விதைகள் மண்ணில் இருக்கும். கோடை மழையின் போது அந்த விதைகள் மீண்டும் உயிர்பித்து நன்கு வளர தொடங்குகின்றன. முதல்முறை ஒரு ஹெக்டேருக்கு 10 கிலோ விதை விதைத்தால் 5000 கிலோ பசுந்தாள் உயிரி உரங்கள் கிடைக்கின்றது. இத்தகைய சிறப்புடைய இத்தாவரத்தின் அறிவியல் பெயர் காலபோனியம் மியூக்கினாயிட்ஸ் ஆகும்.
எ.செந்தமிழ்,
இளம் அறிவியல் வேளாண்மை,
அக்ரி சக்தியின் விழுது பத்திரிக்கையாளர்.