Skip to content

அமெரிக்க விவசாயத்துக்கு அணில்களின் தொல்லை!

அமெரிக்காவிலிருக்கும் நியூ இங்கிலாந்துப் பகுதி விவசாயிகளுக்கு அணில்களால் பிரச்னை வந்திருக்கிறது. ஆப்பிளும் பூசணிக்காயும் அதிகம் விளையும் இப்பகுதி விளைநிலங்களில், இந்த ஆண்டு அணில்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

இந்த அணில்கள், ஆப்பிள் மற்றும் பூசணிக்காய் ஆகியவற்றைக் கடித்துச் சேதப்படுத்தி விடுவதால், அவற்றை விற்பனை செய்ய முடியாமல், விவசாயிகள் தவிக்கின்றனர். இதற்கு முன்னர் இவ்வளவு அணில்களை ஒரே இடத்தில் பார்த்தது இல்லை என்கிறார்கள், நியூ இங்கிலாந்து விவசாயிகள். திடீரென அணில்கள் பெருகியதற்கான காரணம் பற்றி உள்ளூர் நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது. விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுப்பது பற்றியும் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

அமெரிக்க மக்கள் தொகை சுமார் 31 கோடி. இங்குள்ள மொத்த நிலப்பரப்பில் 44 சதவிகித நிலமானது விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுவதாக உலக வங்கி சொல்லியிருந்தது. விவசாய உற்பத்தியில் உற்பத்தித்திறன் அதிகமாகக் கொண்ட நாடுதான் அமெரிக்கா. அதாவது, ஒவ்வொரு சராசரி விவசாயியும், 155 அமெரிக்கர்களுக்கு உணவளிக்கிறான்.

சமீபத்திய ஆய்வுகளின்படி, 1950 ஆண்டின் வேளாண்மை உற்பத்தியை ஒப்பிடும்போது, 250 மடங்கு விவசாயம் வளர்ச்சி கண்டுள்ளது. பிறதுறைகளைச் சார்ந்து இருக்கும் அமெரிக்கா, விவசாயத்தில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. பயிர் சுழற்சி உயிரித் தொழில்நுட்பம் மூலமாக இந்நாடு வெற்றியைக் கண்டுள்ளது.

 

அமெரிக்காவில் சோளம், ஆப்பிள், திராட்சை, பருத்தி, சோயா, பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் கோதுமை, ஆரஞ்சு, தக்காளி, உருளைக் கிழங்கு ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. அமெரிக்க நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருள்களில் 23 சதவிகிதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தன் மொத்த வருமானத்தில் 13.5 லட்சம் கோடி ரூபாய் வருவாயை விவசாயம் மூலமாக ஈட்டுகிறது.

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj