‘லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்டு ட்ரோபிகல் மெடிசின்’ (London School of Hygiene and Tropical Medicine) என்ற ஆராய்ச்சி நிறுவனம், உலக அளவில் நிகழும் காலநிலை மாற்றத்தை ஆய்வு செய்து அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில், ‘உலகளாவிய காய்கறி விநியோகம் 2050-ம் ஆண்டில் மூன்றில் ஒரு பங்குக்குமேல் வீழ்ச்சியடையக்கூடும். இன்றளவில் காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற பொதுவான பயிர்களே பெரும்பாலான மக்களின் உணவாக இருக்கின்றன. உலகளாவிய காய்கறிகளின் சராசரியான மகசூலானது, புவி வெப்பம் மற்றும் நீர் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக மூன்றில் ஒரு பங்காகக் குறையும்’ என்று எச்சரித்துள்ளது.
மேலும் பருவநிலை மாற்றத்தால் தெற்காசியாவில் உள்ள நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் வாழ்க்கைத் தரமும் குறைந்துவிடக்கூடும் என உலக வங்கியின் புதிய அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விவசாயத்துறையை சாராத தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல், சந்தை வாய்ப்புக்களை மேம்படுத்துல், கல்வி வாய்ப்புக்களை மேம்படுத்துதல் போன்றவற்றின் ஊடாக, காலநிலையுடன் நெருங்கிய தாக்கத்தை கொண்டிருக்காத துறைகளில் வாய்ப்புக்களை உருவாக்குவதன் மூலம், அதிக அபாயத்தை எதிர்கொள்ளும் தரப்பினரின் வாழ்க்கைத் தரத்தை, காலநிலை தாக்கங்களின் பாரதூரம் பாதிக்காமல் காக்க முடியும் என ஆய்வுகள் கோடிட்டுக்காட்டுகின்றன.
நமது அரசாங்கங்கள் நீண்ட கால நோக்கில் இப்போதிருந்தே இதற்கான தீர்வை நோக்கி பயணிப்பது அவசயமாகிறது