பஞ்சகவ்யா மூலப்பொருட்கள் மற்றும் அது தயாரிக்கும் முறைகள் குறித்து டாக்டர். நடராஜன் சொன்ன விஷயங்கள் இங்கே…
ஆரம்பத்தில் பசுமாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது பஞ்சகவ்யா. தொடர்ந்து செய்யப்பட்ட பல்வேறு வயல்வெளி ஆராய்ச்சிகளின் முடிவில் இப்போது கூடுதலாக சில பொருட்களை சேர்த்துள்ளோம்.
இது 20 லிட்டர் பஞ்சகவ்யா தயாரிப்புக்கானது
தேவையான மூலப்பொருட்கள்:
பச்சைப்பசுஞ்சாணம் – 5 கிலோ
பசுமாட்டு சிறுநீர் – 3 லிட்டர்
காய்ச்சி ஆறவைத்த பசும்பால் – 2 லிட்டர்
பசு மாட்டுதயிர் – 2 லிட்டர்
பசு நெய் – 500 கிராம்
நாட்டுச் சர்க்கரை – 1 கிலோ
இளநீர் – 3 லிட்டர்
கனிந்த வாழைப்பழம் – 12
தென்னங்கள் – 2 லிட்டர்
(தென்னங்கள் கிடைக்காதவர்கள் வேறு ஒரு எளிய வழி மூலம் கள் தயாரிக்கலாம். 2 லிட்டர் இளநீரை காற்றுப் புகாமல் பாட்டில் அல்லது கேனில் ஊற்றி மூடி வைத்து பிறகு ஒருவாரம் கழித்து திறந்து பார்த்தால் அது நொதித்து, கள்ளாக மாறியிருக்கும். அதை பஞ்சகவ்யா கரைசல் தயாரிக்க பயன்படுத்தலாம்.)
முதல் நாள் செய்யவேண்டியது
5 கிலோ பசுமாட்டு சாணத்துடன் 500 கிராம் நெய்யை கலந்து நன்றாக பிசைந்து உருண்டை சேர்த்து 30-50 லிட்டர் அளவு கொண்ட பீப்பாய்க்குள் வைத்து மூடவேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் சாணம் நெய் கலவை பீப்பாய்க்குள் இருக்கும்.
நான்காவது நாள் மூடியை திறந்து பால், தயிர், இளநீர், பிசைந்த வாழைப்பழம், ஆகிய நான்கு பொருட்களை சாணம், நெய் கலவையினுள் சேர்த்துக் கலக்கவேண்டும். 3 லிட்டர் தண்ணீரில் கலந்து சர்க்கரைத் தண்ணீராக மாற்றி பீப்பாய்க்குள் ஊற்ற வேண்டும். நாட்டுச் சர்க்கரையை நேரடியாக சேர்க்கக் கூடாது. தொடர்ந்து 10 வது நாள் வரை தினமும் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகள் பீப்பாய்க்குள் இருக்கும் கரைசலை திறந்து கலக்கி விடவேண்டும் கலக்கிய பின் மூடிவைக்கவேண்டியது முக்கியம்.
11-வது நாளில் கள்ளை பீப்பாய் கரைசலுக்குள் ஊற்றி தொடர்ந்து 7 நாட்கள் இருவேளை கலக்கி வரவேண்டும்.
19 வது நாளில் பஞ்சகவ்யா தயார்.
நன்றி
பசுமை விகடன்