கடலோர மாவட்டங்களில் வாழும் விவசாயிகள் ‘உயிர்நீர்’ எனும் ஒரு திரவத்தை ஆங்காங்கே பயிர்களுக்குப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். பஞ்சகவ்யாவைப் போல இதுவும் பயிர் வளர்ச்சி ஊக்கிதான். மனிதர்கள் சத்துப் பற்றாக்குறையால் அல்லது நோய் காரணமாக சோர்வடைந்தால் அவர்களுக்கு குளுக்கோஸ் கொடுப்பதைப் போல பயிர்கள் வாடும் நேரங்களில் இந்த ‘உயிர்நீர்’ தெளித்தால் நல்ல பலன் கிடைப்பதாக சொல் கிறார்கள். பாண்டிச்சேரியில் இதை ‘அக்ரிஸ்பான்’ என்ற பெயரில் லிட்டர் 50 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். கடலோர மாவட்ட விவசாயிகள் தாங்களே இதைத் தயாரித்துக் கொள்ள முடியும். கோழிக்கோட்டுப்பொத்தைக் கிராமத்தில் இதைத் தயாரித்து பயன்படுத்தத் தொடங்கியிருகிறார்கள்.
தயாரிப்பது எப்படி: கடல்நீர் 15 லிட்டர் அளவுக்கு ஒரு பாத்திரத்தில் எடுக்கவும். மற்றொரு பாத்திரத்தில் 100 கிராம் பசும்சாணத்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்துக்கொள்ளவும். மூன்றாவதாக ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் நீரில் 10 கிராம் அளவுக்கு ஈஸ்ட் (பேக்கிரிகளில் கிடைக்கும்) கலந்துகொள்ளவும். பிறகு, மூன்று திரவங்களையும் ஒரே பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கலக்கிவிட்டு வெள்ளைத் துணியைக் கொண்டு பாத்திரத்தின் வாயை மூடிவிட வேண்டும். ஒரு வாரம் கழித்து, இந்தக் கரைசலை பத்து லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்ற அளவில் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.
இந்த ஊக்கியை யாரேனும் பயன்படுத்தியிருந்தால் அவர்களின் அனுபவங்களை எங்களுக்குத் தெரிவிக்கலாம்
நன்றி பசுமை விகடன்