டெல்டா மாவட்டங்களில் ஏரி, குளங்களை துார்வாரும் பணி காலதாமதமாக துவங்கியதால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கும் நீரை, விவசாயி்கள் முழுமையாக பாசனத்திற்கு பயன்படுத்தவும், சேமித்து வைக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளை விரக்தியில் ஆழ்த்தி உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து, ஆண்டுதோறும் ஜூன், 12ல் திறக்கப்படும் நீரின் மூலம், 12 டெல்டா மாவட்டங்களில், 4 லட்சம் ஏக்கரில் குறுவை, 13.10 லட்சம் ஏக்கரில், சம்பா சாகுபடி மேற்கொள்ளப்படும்.
பருவமழை தீவிரம்
இதில், குறுவை சாகுபடிக்காக ஆயத்த பணிகள், ஜூன், 15 முதலும், சம்பா சாகுபடி ஆயத்த பணிகள், ஆகஸ்ட், 15க்கு பின்னும் துவங்கும். பாசனத்திற்கு நீர் திறக்க, மேட்டூர் அணையில் குறைந்தபட்சம் நீர்மட்டம், 90 அடியாகவும், நீர் இருப்பு, 52 டி.எம்.சி.,யாகவும் இருக்க வேண்டும். நீர்மட்டம் குறைவாக இருந்ததால் கடந்த, 2012 முதல், 2017 வரை, ஆறு ஆண்டுகள் மேட்டூர் அணையில் தாமதமாக நீர் திறந்ததால், டெல்டாவில் குறுவை சாகுபடி பாதித்தது. கடந்த ஜூன், 12ல் மேட்டூர் அணை நீர்மட்டம், 40 அடியாக இருந்ததால், தொடர்ந்து ஏழாவது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு நீர் திறக்கவில்லை. நடப்பாண்டு கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதியில், முன்னதாக தீவிரம் அடைந்த தென்மேற்கு பருவமழையால், கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பின.
அந்த அணைகளில் திறக்கப்படும் உபரி நீர், தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால், நேற்று மேட்டூர் அணை நீர்மட்டம், 90 அடியாக உயர்ந்தது. நேற்று வினாடிக்கு, 90 ஆயிரம் கன அடி நீர் வந்த நிலையில், மொத்த கொள்ளவான, 120 அடியை ஒரு வாரத்தில் எட்டி, மேட்டூர் அணை நிரம்பும் என எதிர்பாக்கப்படுகிறது. இதற்கிடையே, அணையில் இருந்து வரும், 19ல் டெல்டாவிற்கு நீர் திறக்க, தமிழக முதல்வர் பழனிசாமி உத்தர விட்டுள்ளார். ஆனால், டெல்டா மாவட்டங்களில் பாசன கால்வாய், ஏரி, குளங்கள் இன்னமும் துார்வார படாததால், திறக்கப்படும் நீர் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளை விரக்தியில் ஆழ்த்தி உள்ளது.