கிருஷ்ணகிரி: பாளேகுளி ஏரியில் இருந்து, சந்தூர் ஏரிக்கு, கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை இடதுபுறக்கால்வாயின் கடைமடை ஏரியான, பாளேகுளி ஏரியில் இருந்து, கால்வாய் மூலம் தண்ணீர், சென்றாம்பட்டி ஏரி, அரசமரத்து ஏரி, செல்லம்பட்டி ஏரி, நாகரசம்பட்டி ஏரி வழியாக சந்தூர் ஏரி உள்ளிட்ட, 27 ஏரிகளுக்கு செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் இருந்து, தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி, கே.ஆர்.பி., அணை இடதுபுற நீட்டிப்பு பாளேகுளி-சந்தூர் பயனாளிகள் சங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, நேற்று, பாளேகுளி ஏரியில் இருந்து, சந்தூர் ஏரிக்கு, கிருஷ்ணகிரி அணை உதவி செயற்பொறியாளர் நடராஜன் தண்ணீரைத் திறந்து வைத்தார். இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அனைத்து ஏரிகளும் நிரம்ப வேண்டும் என்பதற்காக, சுழற்சி முறையில் தண்ணீர் விடப்படுகிறது, என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்