சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிக்கையில்
தென்மேற்கு பருவமழை, தெற்கு அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று முதல் துவங்கியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தென் மேற்கு பருவமழை, தெற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், குமரி கடல், மாலத்தீவு, தெற்கு வங்க கடல் பகுதியில் துவங்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.தென்மேற்கு பருவமழை துவங்குவதை முன்னிட்டு, குமரி கடல் கேரளா கர்நாடக கடற்கரை பகுதிகளில் லட்சத்தீவு பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும். கடல் சீற்றத்துடன் காணப்படும். மீனவர்கள் குமரிக்கடல், லட்சத்தீவு பகுதியில் கர்நாடகா கேரளா கடல் பகுதிகளில் மே 30 வரை செல்ல வேண்டாம்.
மழைக்கு வாய்ப்பு
தமிழக பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், கடந்த 24 மணி நேரத்தில் அனேக இடங்களில் இடியுடன் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவையாறில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.அடுத்த 2 நாட்களை பொறுத்தவரை தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனக் கூறினார்.