தமிழகத்தில் இருந்து உற்பத்தியாகும் மஞ்சள் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி அதிகரிப்பால், ரூ.1,000 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது,இச்செய்தியை மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இந்திய அளவில் பிப்ரவரி முதலே புதிய மஞ்சள் வரத்து இருப்பினும், ஏப்ரல்., 14க்குப்பின், புதிய மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளது. விரலி மஞ்சள், குவிண்டால், 7,000 ரூபாய் முதல், 9,000 ரூபாயை கடந்துள்ளது. ஈரோடு மார்க்கெட்டுக்கு, கர்நாடகா மஞ்சள் வரத்து முடிந்து, தற்போது தர்மபுரி பகுதியில் இருந்து புதிய மஞ்சள் வரத்தாகிறது.
அதேநேரம், நிஜாமாபாத், சாங்ளி மார்க்கெட்களில் ஜனவரி முதல், மார்ச் மாதம் வரையிலும், மஹாராஷ்டிரா மாநிலத்திலும், அதிக அளவில் புதிய மஞ்சள் வரத்தானது. இதனால் விலை குறையும் என எதிர்பார்த்தனர். அதேநேரம், வளைகுடா நாடுகள், சிங்கப்பூர் உள்ளிட்ட தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளுக்கு, அதிகமாக மஞ்சள் ஏற்றுமதியானது. அத்துடன், மஞ்சள் விளையாத பிற மாநிலங்களுக்கும், அதிகமாக மஞ்சள் ஏற்றுமதியானது.மேலும், ‘ஆன்லைன்’ வர்த்தகம் மூலம் மஞ்சளை அதிகமாக கொள்முதல் செய்து, இருப்பு வைக்கின்றனர்.
கடந்த, 20 நாட்களில், மஞ்சள் விலை படிப்படியாக, 1,000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.இதே நிலை, இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும். தவிர, புதிய மஞ்சள்இருப்பு அதிகம் உள்ளதால், விலை குறைய வாய்ப்பில்லை.வரும் ஆண்டில், புதிய மஞ்சள் சாகுபடி செய்வதற்கு ஏற்ப, விலையில் மாற்றம் ஏற்படலாம்.