விவசாயத்துக்கு அடிப்படையான மண்ணின் தன்மைக்கேற்பவே என்ன விவசாயம் செய்யலாம் என்பதை முடிவு செய்ய இயலும். பொதுவாக ஒரு ஊரில் உள்ள மண்வளமானது அனைத்து வயல்களிலும் அதே தரமானதாகவோ, தன்மை உடையதாகவோ இருக்க முடியாது. ஒவ்வோர் வயலிலும் மண்ணின் தன்மையில் மாற்றம் இருக்கும். அதனைக் கண்டறிந்து அதற்கேற்ப பயிர் செய்வதே சிறந்ததாகும். மண்ணின் வளத்தை எவ்வாறு கண்டறிவது என்பதற்கு, ஒவ்வோர் மாவட்டத்திலும் வேளாண்மை உதவி இயக்குநரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மண்பரிசோதனை நிலங்கள் உதவி செய்கின்றன.
மண் பரிசோதனையின் முக்கியத்துவம்: மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் சத்துக்களின் அளவை அறிந்திட மண் பரிசோதனை அவசியம். மேலும், பயிர்களுக்குத் தேவையான உரமிடும் அளவை அறிந்து உரமிட; மண்ணில் உள்ள களர், அமில, உவர் மற்றும் சுண்ணாம்பு தன்மைகளை அறிந்து தக்க சீர்திருத்தம் செய்திட; தேவைக்கேற்ப உரமிடுவதால் உரச் செலவை மிச்சமாக்க; இடும் உரம் பயிருக்கு முழுமையாகக் கிடைத்திட; உரச் செலவை குறைத்து அதிக மகசூல் பெற்றிட; அங்ககச் சத்தின் அளவை அறிந்து, நிலத்தின் நிலையான வளத்தைப் பெருக்கிட; மண்ணின் தன்மைக்கேற்ப பயிரைத் தேர்ந்தெடுக்க என பல்வேறு முக்கியக் காரணங்கள் உள்ளன.
மண் மாதிரி சேகரிக்கும் முறை: ஒரு வயலில் எடுக்கும் மண் மாதிரி அந்த வயலின் சராசரி தன்மையைக் காட்டும் வகையில் இருக்க வேண்டும். மண்ணின் வளமும், தன்மையும் ஒரே வயலில் கூட இடத்துக்கு இடம் மாறுபடும். ஆகையால் ஒரே இடத்தில் மண் மாதிரி எடுக்கக் கூடாது. ஏக்கருக்கு குறைந்தது 10 இடங்களில் எடுத்து கலந்து அதிலிருந்து அரைக் கிலோ மண் மாதிரி எடுக்க வேண்டும். மண் மாதிரி எடுக்கும் போது எரு குவிந்த இடங்கள், வரப்பு ஓரங்கள், மர நிழல் மற்றும் நீர்க் கசிவு உள்ள இடங்களைத் தவிர்க்க வேண்டும். மண் மாதிரி எடுக்க வேண்டிய இடத்திலுள்ள இலை, சருகு, புல், செடி ஆகியவற்றை மேல்மண்ணை நீக்காமல் கையினால் அப்புறப்படுத்த வேண்டும்.
ஆங்கில எழுத்தான ய வடிவக் குழி குறிப்பிட்ட ஆழத்துக்கு வெட்ட வேண்டும். குழியின் இருபக்கங்களிலும் மேலிருந்து கீழ் வரை ஒரே சீராக அரை அங்குல கனத்தில் செதுக்க வேண்டும். வெட்டிய மண்ணை ஒரு சட்டியிலோ அல்லது சாக்கிலோ இட வேண்டும். காய்ந்து வெடித்த வயலில் குழி வெட்ட சிரமமாக இருந்தால் மண்கட்டி ஒன்றை பெயர்த்து மேலே வைத்து அதன் பக்கவாட்டில் மண்ணை குறிப்பிட்ட ஆழத்துக்குச் செதுக்கி எடுக்கலாம். நெல், கேழ்வரகு, கம்பு, வேர்க்கடலை பயிரிட்ட வயல்களில் மேலிருந்து 15 செ.மீ. ஆழத்துக்கும், பருத்தி, கரும்பு, மிளகாய், வாழை, மரவள்ளி பயிர்களில் மேலிலிருந்து 22.5 செ.மீ. ஆழத்துக்கும், தென்னை, மா மற்றும் பழந்தோட்ட பயிர்களுக்கு 30,60,90 செ.மீ. ஆழத்துக்கும் என 3 மாதிரிகள் எடுக்க வேண்டும்.
களர், உவர் சுண்ணாம்புத் தன்மை உள்ள நிலத்தில் ஒவ்வொரு அடிக்கும் ஒரு மண் மாதிரி வீதம் 3 அடி ஆழத்துக்கு 3 மாதிரிகள் எடுக்க வேண்டும்.
வயலில் சேகரித்த மண் ஈரமாக இருந்தால் நிழலில் உலர்த்த வேண்டும். சுத்தமான தரையில் அல்லது காகித விரிப்பில் மண்ணை சீராக பரப்பி 4 சம பாகங்களாக பிரிக்க வேண்டும். பின்னர் எதிர் எதிர் மூலையில் இரு பக்கங்களில் உள்ள மண்ணை நீக்கி விடவும். மீண்டும் மண்ணை பரப்பி 4 சம பாகங்களாகப் பிரித்து வேறு எதிர் மூலையில் உள்ள மண்ணை நீக்கி விடவும். இப்படி பகுத்து சுமார் அரை கிலோ மண்ணை துணிப்பையில் இட்டு, கட்டி விபரங்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
நுண்ணூட்டச் சத்து ஆய்வு: நுண்ணூட்டச்சத்து ஆய்வுக்கு மண் மாதிரியை சேகரிக்கவும் மேற்கண்ட வழிமுறைகளையே கையாள வேண்டும். ஆனால், குழி வெட்டுவதற்கு இரும்பால் ஆன கருவிகளைப் பயன்படுத்தாமல் மரக் குச்சியைப் பயன்படுத்தவும். சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை விவசாயியின் பெயர், முகவரி, சர்வே எண் அல்லது நிலத்தின் பெயர், பயிரிடப்போகும் பயிர், ரகம், இறவை மற்றும் மானாவாரி வயலில் உள்ள பிரச்னைகள் குறித்து குறிப்பு எழுதப்பட வேண்டும். ஆய்வுக் கட்டணமாக ஒவ்வொரு மண் மாதிரிக்கும் பேரூட்டச்சத்து ஆய்வு செய்ய ரூ.10, நுண்ணூட்டச்சத்து ஆய்வு செய்ய ரூ.10 செலுத்த வேண்டும்.
எனவே, விவசாயிகள் தங்களது மண்ணின் தன்மையை அறிந்து பயிர் செய்தால் அதிக நன்மையைப் பெறலாம்.
மிகச்சரியானதொருவழிகாட்டி செயலியாகும்
v shaped cut ku bathila ய nu potutinga
பேரூட்டசத்து என்றால் என்ன.சார்.