தர்மபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கம்பைநல்லூர் உட்பட சுற்று வட்டாரப் பகுதிகளில், 1,200க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், தர்பூசணி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து, கம்பைநல்லூரைச் சேர்ந்த விவசாயி சண்முகம் கூறியதாவது: ஒரு ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்துள்ளேன். நடவு செய்த, 70 முதல், 80 நாட்களில் தர்பூசணி பழம் அறுவடைக்கு வந்து விடும். உழவு செய்தல், உயர்ரக விதை, களை எடுத்தல், பூச்சிக்கொல்லி மருந்து என, ஒரு ஏக்கருக்கு, 55 ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளது. நோய் தாக்குதல் இன்றி செடி நன்றாக வளர்ந்தால், ஏக்கருக்கு, 15 டன் முதல், 20 டன் வரை தர்பூசணி மகசூல் கிடைக்கும். தற்போது, ஒரு டன் தர்பூசணி பழம், 5,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தர்பூசணி பழத்தை, சென்னை, கோவை, பெங்களூரில் இருந்து வரும் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். மகசூல் அதிகமாக கிடைத்த போதிலும், விலை குறைவால் தர்பூசணி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.