Skip to content

கடலுார்மாவட்டத்தில் விலை வீழ்ச்சியால், விவசாயிகளுக்கு நஷ்டம்

கடலுார் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறி மற்றும் விளைபொருட்கள் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

கடலுார் மாவட்டத்தில் விருத்தாசலம், சிதம்பரம், கடலுார், பண்ருட்டி பகுதிகளில் அதிகளவில் காய்கறி மற்றும் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த 3 மாதங்களாக காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளன.

அதேபோன்று, விவசாய உற்பத்தி பொருட்களான நெல், மணிலா, உளுந்து போன்றவையும் 50 சதவீதம் அளவில் விலை குறைந்துள்ளன. இந்த விலை வீழ்ச்சி கடந்த 3 மாதங்களாக நீடித்து வருவதால் விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பருவ மழை பரவலான அளவில் பெய்துள்ளது. இதனால் சேலம், ஈரோடு, தலைவாசல், தர்மபுரி, திருப்பூர் போன்ற பகுதிகளில் காய்கறி விளைச்சல் அமோகமாக உள்ளன. தர்மபுரி பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகமானதால், கடந்த 3 மாதமாக கிலோ 10 ரூபாயிலிருந்து 7.50 ரூபாயாக குறைந்துள்ளது.

அதேபோன்று, பச்சை மிளகாய் 50 கிலோ மூட்டை 300 ரூபாயாக உள்ளது. ஆனால், மிளகாய் ஒரு மூட்டை பறிக்க 300 ரூபாய் செலவாகிறது. முள்ளங்கி ஒரு கிலோ 5 ரூபாய்க்கும், வெண்டைக்காய், அவரைக்காய் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காய்கறி பொருட்கள் எல்லாம் அறுவடை செய்ய செலவாகும் தொகையை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மலை காய்கறிகளான காரட் 20 ரூபாய்க்கும், உருளை 14 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஏதாவது ஒரு நேரத்தில் விலை உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்து செடிகளை பாதுகாத்து வந்ததுதான் மிச்சம். இது ஒரு புறமிருக்க விளை பொருட்களான மணிலா, உளுந்து ஆகியவை கடந்த ஆண்டு விலையை ஒப்பிடும் போது, பாதியாக குறைந்துள்ளது.

7,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மணிலா இந்த ஆண்டு 3,800 ரூபாய் அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதால் கவலையடைந்துள்ளனர். எனவே விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj