விளைச்சல் அதிகரிப்பால், ஓசூரில் கொத்தமல்லி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், பறிக்காமல் விடுவதால் தோட்டத்திலேயே வீணாகி வருகிறது. ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதிகளில் அதிகளவில் கொத்தமல்லி பயிரிடப்படுகிறது. ஒரு ஏக்கரில் பயிரிட ரூ.25 ஆயிரம் வரை செலவாகிறது. இது 40 நாட்களில் விளைச்சல் கொடுக்கக்கூடிய பயிர் என்பதால், விவசாயிகள் அதிகளவில் கொத்தமல்லி பயிரிடுகின்றனர். இந்த பகுதியிலிருந்து கோவை, திருச்சி, சென்னை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தினமும் கொத்தமல்லி அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது, அனைத்து பகுதியிலும் கொத்தமல்லி விளைச்சல் நன்றாக உள்ளது. இதனால், கொத்தமல்லி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கட்டு ரூ.40 வரை விற்பனையானது. தற்போது, தோட்டத்திலேயே ஒரு கட்டு ரூ.2க்கு கேட்கின்றனர். இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். விலை வீழ்ச்சி காரணமாக சிலர் கொத்தமல்லியை பறிக்காமல் விட்டுள்ளதால் வீணாகி வருகிறது. மேலும், உழவர் சந்தைக்கு கொண்டு வந்த கொத்தமல்லியில் விற்பனை ஆகாதவற்றை அங்கேயே விட்டுச் செல்கின்றனர்.