திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 200 எக்டேரில் தோட்டம் அமைக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. விவசாயத்திற்கு தேவையான விதைகள், உரங்கள், இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது.இந்நிலையில் ஊரக வளர்ச்சி துறை மூலம், ஒன்றியங்களில் இடம் வைத்திருக்கும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவசமாக தோட்டம் அமைத்து கொடுக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இலவச தோட்டம்
திண்டுக்கல் ஒன்றியத்தில் 40 எக்டேர், ரெட்டியார்சத்திரம் 20, சாணார்பட்டி 40, நத்தம் 40, நிலக்கோட்டை 20, பழநி 10, குஜிலியம்பாறை 15, கொடைக்கானலில் 15 என மொத்தம் 200 எக்டேரில் தோட்டம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். முன்னுரிமை அடிப்படையில், விவசாயிகளுக்கு அவர்கள் விரும்பும் பயிர்களை நடவு செய்து தோட்டம் அமைத்து கொடுக்கப்படும். இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.