கிருஷ்ணகிரி கலெக்டரிடம், கோட்டப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திரு,. கிருஷ்ணன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று படுகை பகுதிகளில் அதிகளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டணம், நெடுங்கல், அகரம், மருதேரி, செல்லம்பட்டி, பாரூர், மஞ்சமேடு, புங்கம்பட்டி, கீழ்குப்பம், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. இங்கு, உற்பத்தி செய்யப்படும் தேங்காய்க்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
இதனால், இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய்களை வியாபாரிகள் ஒட்டுமொத்தமாக வாங்கி, லாரிகள் மூலம் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். தென்னை விவசாயத்தையே முதன்மை தொழிலாக கொண்ட கிருஷ்ணகிரி மாவட்ட உற்பத்தியாளர்களை ஒருங்கிணைக்கவும், உற்பத்தியை மேம்படுத்தி சந்தைப்படுதவும் முறையான அமைப்புகள் இல்லை. மா உற்பத்தியாளர்களுக்கு நிறுவனம் உள்ளது போல், தென்னை உற்பத்தியாளர்களுக்கான நிறுவனம் இது வரைக்கும் அமைக்கப்படவில்லை. எனவே, போச்சம்பள்ளி தாலுகா புலியூரை மையமாக கொ ண்டு கிருஷ்ணகிரி மாவட்ட தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.இவ்வாறு தனது மனுவில் புலவர் கிருஷ்ணன் கூறி உள்ளார்.