திருப்பூர் : விவசாயிகளின் விளைபொருட்களை, தேசிய சந்தைகளில் விற்பனை செய்ய, “இ -நாம்’ திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு சார்பில், 15 இடங்களில் ஒழுங்குமுறை விற் பனைக்கூடங்கள் செயல்படுகின்றன. திருப்பூர், அவிநாசி, உடுமலை, சேவூர், பல்லடம், பொங்கலூர், பெதப்பம்பட்டி, மடத்துக்குளம், காங்கயம், குன்னத்தூர், வெள்ளக் கோவில், தாராபுரம், மூலனூர், முத்தூர், அலங்கியம் ஆகிய இடங்களில், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் உள்ளன.
“ஒரே நாடு ஒரே சந்தை’ என்ற இலக்கை நோக்கி விவசாயிகளை முன்னேற்றும் வகையில், “இ-நாம்’ எனும், தேசிய வேளாண் சந்தை திட்டம் துவக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் இத்திட்டத்தால், விவசாயிகள் ஓரிடத்தில் இருந்தபடியே, நாடு முழுவதும் உள்ள வியாபாரிகளை தொடர்பு கொண்டு, “ஆன்லைன்’ மூலமாக பரிவர்த்தனை செய்து, விளை பொருட்களை விற்பனை செய்யலாம்.
இத்திட்டத்தில் முதல்முறையாக, நாடு முழுவதும், 585 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், 15 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் தேர்வு செய்யப்பட்ட தில், திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், மூன்று தேர்வாகியுள்ளன. கம்ப் யூட்டர் வசதிகளுடன்,”இ-நாம்’ சந்தை துவக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், மிகவும் பழமையான திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்; உடுமலை மற்றும் பெதப்பம்பட்டி விற்பனைக்கூடங் கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதுவரை, 1,800க்கும் அதிகமான விவசாயிகள், “இ-நாம்’ திட்டத்தில் இணைந்துள்ளனர். விவசாயிகள், வியாபாரிகளை ஒருங்கிணைத்து, இடைத்தரகர் தலையீடு இல்லாமல், சரியான விலையில், மறைமுக ஏலத்தின் மூலம் அதிகபட்ச விலையை விவசாயிகளுக்கு பெற்றுத் தருவது, விற்பனைக்குழுவின் முக்கிய நோக்கம்.
வேளாண் விற்பனைக்குழு செயலாளர் ஆறுமுகராஜன் கூறியதாவது: இத்திட்டத்தில், “டிஜிட்டல்’ வர்த்தகம் மற்றும் பண பரிமாற்றம் நடப்பதால், விவசாயிகளுக்கு உடனுக்குடன், வங்கி கணக்கு வாயிலாக பணப்பட்டுவாடா ஆகிவிடும். விவசாயிகள், சில வியாபாரிகளை மட்டுமே நம்பியிருக்காமல், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை, இணையதளம் மூலமாக தொடர்பு கொண்டு, விளை பொருட்களை விற்க,இது பேருதவியாக இருக்கிறது.
“இ- நாம்’ சந்தை முறையில், வியாபாரிகள் வங்கி கணக்கில் இருந்து, பொருளுக்கான விலை, விவசாயிகளின் கணக்குக்கு “கிரெடிட்’ ஆனால் மட்டுமே, “கேட் பாஸ்’ உருவாகிறது. அதற்கு பிறகு தான், பொருட்களை, விற்பனைக்குழு அனுப்பி வைக்கும். இதன் மூலம், விவசாயிகளுக்கு மட்டுமின்றி, வியாபாரிகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது.
“டிஜிட்டல்’ பரிவர்த்தனை நடப்பதால், விவசாயிகள், ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்களுடன் வந்தால், பொருட்களை எளிதாக விற்பனை செய்து, பணத்துடன் திரும்பலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.