ஈரோடு: கீழ்பவானி ஒற்றை மதகு பாசனத்துக்கு, தண்ணீர் திறக்க பரிந்துரைக்கவே முடியும். அரசுதான் முடிவு செய்யும் என்ற கலெக்டரின் திட்டவட்டமான பதிலுக்கு, விவசாய சங்க நிர்வாகிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வேளாண் குறைதீர் கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்தார். இதில் பல்வேறு, விவசாய சங்க நிர்வாகிகள், கோரிக்கைகள் குறித்து பேசினர்.
கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க செயலாளர் நல்லசாமி: பவானிசாகரில் இருந்து, ஒற்றை மதகு பாசனப்பகுதியான, 1 லட்சத்து, 3,500 ஏக்கருக்கு, மூன்றாண்டாக தண்ணீர் திறக்கவில்லை. கடந்த, 15ம் தேதிக்குள் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. காவிரி இறுதி தீர்ப்பில் கூறிய விதிகளுக்கு மாறாக, பவானிசாகரில் நீர் திறப்பை, மாவட்ட நிர்வாகம் மேற்கொள்கிறது.
கீழ்பவானி முறைநீர் பாசன சபை தலைவர் வடிவேல்: தற்போது, பவானிசாகர் அணையில், 4.5 டி.எம்.சி., நீர் மின் அணையில், 6 டி.எம்.சி., என, 10.5 டி.எம்.சி., உள்ளது. கீழ்பவானி ஒற்றை மதகு பாசனப்பகுதிக்கு, நெல், மக்காசோளம், எள் சாகுபடிக்கு, 7.5 டி.எம்.சி., நீர், மூன்று மாதத்துக்கு தேவை. தற்போது தண்ணீர் விட்டால் கூட, மகசூல் பார்க்கலாம்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் துளசிமணி: கடந்த மாதம் நடந்த கூட்டத்தில், ஜன.,30க்குள் தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்தோம். அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறியது. ஆனால், இன்று வரை நீர் திறக்கவில்லை.
கலெக்டர் பிரபாகர்: தற்போதைய நீர் நிலவரம் குறித்து, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். முடிவை அரசு அறிவிக்கும். மாவட்ட நிர்வாகம் முடிவை எடுக்க இயலாது, என்றார். இதற்கு, பல விவசாய சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து, முறையான தேதியை விரைவாக அறிவிக்க வேண்டும், என வலியுறுத்தினர்.
நன்றி : தினமலர்