ஓசூர் வனச்சரக பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள், பயிர்களை நாசம் வீணாக்குவதால் , விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஓசூர் வனச்சரக பகுதியில், 15 க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி, விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. நேற்று முன்தினம் காலை, சானமாவு அருகே மீசைகாரன்கொட்டாய் கிராமத்தில், துரைசாமி என்பவருக்கு சொந்தமான மாட்டை யானைகள் தாக்கின. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானைகள், பாத்தக்கோட்டா பகுதிக்கு சென்றன. அங்கு சேகர் என்பவருக்கு சொந்தமான தென்னை கன்றுகள், தக்காளி மற்றும் இதர விவசாய பயிர்களை நாசம் செய்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து, பிள்ளைகொத்தூர் ஏரியில், மூன்று யானைகள் மட்டும் ஆனந்த குளியல் போட்டன. அவற்றை பட்டாசு வெடித்து வனத்துறையினர் விரட்டினர். இதேபோல், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட வட்ட வடிவு பாறையில், 15 யானைகளும், முத்தூர் வனப்பகுதியில், பத்து யானைகளும், தாவரக்கரை காப்புக்காட்டில், 15க்கும் மேற்பட்ட யானைகளும் தனித்தனியாக முகாமிட்டுள்ளன. அவற்றை ஜவளகிரி வழியாக கர்நாடக மாநிலத்திற்கு விரட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பல வருடங்களாக யானைகள் தொடர்ந்து விவசாய நிலங்களில் பயிர்களை வீணாக்கிவருகின்றன, ஆனால் மாவட்ட நிர்வாகம் முழுமையான தீர்வை எடுக்க இன்றுவரை முயற்சி செய்யவில்லை என்றே தோன்றுகிறது. யானைகள் வலசை செல்லும் பகுதிகளில் மட்டும் விவசாயம் செய்வதை கைவிட்டு அதற்கு இணையாக இடத்தினை வேறு இடங்களில் பெற்றுக்கொள்ளலாம், ஆனால் இதற்கு விவசாயிகள் ஒப்புக்கொள்ளவேண்டும். பயிர்களையும், விவசாயிகளையும் காக்க வேண்டிய பொறுப்புகள் நமக்கு இருந்தாலும் இயற்கையின் குழந்தைகளையும் நாம் காக்கவேண்டிய தருணத்தில் உள்ளோம். எனவே விவசாயிகளுக்கும், யானைகளுக்கும் ஏதுவாக சில முயற்சிகளை அரசாங்கம் முன் வந்து செய்யவேண்டும். அல்லது பொதுமக்களிடையே, துறை வல்லுநர்களிடம் கருத்துக்களை கேட்டாவது பிரச்னையை தீர்க்க மாவட்ட நிர்வாகம்முன்வரவேண்டும், இப்படி வருடக்கணக்கில் பிரச்னையை நீடித்துக்கொண்டிருப்பது மாவட்ட நிர்வாகத்திற்கு அழகல்ல, இனிமேலாவது மாவட்ட நிர்வாகம் முழுமையான வீச்சில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அனைத்து தரப்பினரும் விரும்புகிறோம்.