உணவு சார்ந்த இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு உருவாக்கும் பொருட்டு `நானும் ஒரு விவசாயி’ என்கிற தலைப்பில் பாரம்பரிய நாட்டு விதைகள் விதைத்து கின்னஸ் சாதனை படைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சிக்கான மோஷன் போஸ்டர் இன்று (ஆகஸ்ட்28) சமூக வலைதளங்களில் வெளியானது.
முன்னர் நடிகர் கமல்ஹாசன் மற்றும் `பாலம்’ கல்யாண சுந்தர் ஆகியோர் இணைந்து நடிகர் ஆரியின் ‘மாறுவோம் மாற்றுவோம்’ அறக்கட்டளையை தொடங்கிவைத்தனர். இதன் மூலமே இந்த சாதனையை நிகழ்த்த உள்ளனர். இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 29ஆம் தேதி திண்டிவனம் அருகிலுள்ள ஆவணிபூர் கிராமத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏராளமான மாணவர்கள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் , விவசாய ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் என 5000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கு கொள்ளவுள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியை ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையோடு சத்யபாமா யுனிவர்சிட்டியும், டிரான்ஸ் இந்தியா நிறுவனமும் இணைந்து நடத்த உள்ளன.
இந்த சாதனை முயற்சிக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் தன் ரசிகர்களின் நற்பணி மன்றத்தினரையும் ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் குழுவினரோடு இணைந்து செயல்படுமாறு சில தினங்களுக்கு முன்பே வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.