திருவாரூர்: கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடமானம் கேட்காமல் பயிர் கடன் வழங்க காவிரி டெல்டா விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதையடுத்து தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் சம்பா பருவ நெல் சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். சம்பா சாகுடியை தடையின்றி துவக்க கூட்டுறவு வங்கிகள் நகைகளை அடமானம் கேட்காமல் பயிர் கடன் தர வேண்டும் என விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து வழக்கம் போல் ஜுன் அல்லது ஜுலையில் தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தால் டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டு அதன் அறுவடை தற்போது நடைபெற்றிருக்கும். அந்த வருவாயை கொண்டு விவசாயிகள் சம்பா சாகுபடியை துவங்குவார்கள். ஆனால் நடப்பாண்டில் குறுவை சாகுபடி பொய்த்து போனதால் கூட்டுறவு கடன்களை எளிதாக வழங்க விவசாயிகள் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.