கணினியில் தமிழ் மொழியை இன்று மிக எளிதாக காண முடிகிற சூழல் 15 ஆண்டுகளுக்கு முன் கிடையாது.
பலவகையான எழுத்துருக்கள், ஆளுக்கொரு தட்டச்சு பலகை முறை என தமிழ் சிதறிக்கிடந்தது.
அவற்றையெல்லாம் ஒருங்கே கிடைக்க கணினி தமிழ் ஆர்வலர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அரும்பாடுபட்டனர். அவர்களில் ஒருவர் தான் தகடூர் கோபி.
இணைய உலகில் அதியமான் கோபி, தகடூர் கோபி, ஹை கோபி என்று தனது படைப்புகளை அடைமொழியாகக் கொண்டு கோபி அழைக்கப்படுகிறார்.
தர்மபுரி (தகடூர்) குமாரசாமி பேட்டையை சேர்ந்த கோபி, சிங்கப்பூர், ஹைதராபாத், சென்னை என பல்வேறு இடங்களில் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றியவர்.
தமிழ் எழுத்துருக்களை யூனிகோடுக்கு மாற்றி தரும் அதியமான் மாற்றி, தகடூர் தமிழ் மாற்றி ஆகிய கருவிகளை உருவாக்கி தமிழ் உலகிற்கு பெரும் பங்காற்றினார். தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளில் எழுத்துருக்களை யூனிகோடுக்கு மாற்றிடும் கருவிகளையும் கோபி உருவாக்கி உள்ளார்.
சகாயம் அவர்கள் நாமக்கல்லிலும், மதுரையிலும் ஆட்சியராக பணியாற்றிய போது கொண்டு வந்த தொடுதிரை கணினி திட்டமான தொடுவானம் செயல்படுத்தப்பட்டதில் மிக முக்கியப் பங்காற்றிய தன்னார்வலர்களில் தகடூர் கோபி முதன்மையானவர்.
தனது பரபரப்பான வாழ்க்கைக்கு நடுவே கணினித் தமிழுக்கு பெரும் கொடையாக அமைந்த கோபி, ஜனவரி 28 அன்று உயிரிழந்தார்.
அக்ரிசக்தியின் விவசாயம் செயலி வெளிவர பெரிதும் காரணமாக இருந்தவர்,எங்களுக்கு பெரும் ஊக்கமாக இருந்த தகடூர் கோபி அவர்கள் ஆத்மா இறைவனடியில் இளைப்பாறட்டும்