மத்திய, மாநில அரசு கிடங்குகளில் உள்ள உணவு பொருட்களை, இயற்கை முறையில் பாதுகாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,” என, இந்திய உணவு கழகத்தின் மாநில ஆலோசனை குழு தலைவர் எம்.பி., சிவா கூறினார்.
மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உணவு பொருட்களை வழங்கி வருகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள கிடங்குகளில் இருந்து, உணவு பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. கிடங்குகளில் உள்ள உணவு பொருட்களில், பூச்சி தொல்லையை தடுக்க, ரசாயன மருத்து அடிக்கப்படுகிறது. விளைச்சலின் போதே பல ரசாயன உரங்களை பயிர்களுக்கு தெளிப்பதால், அதை உண்ணும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிடங்குகளில் உள்ள உணவு பொருட்களில் பூச்சிகள் உண்டாவதை தடுக்க, சேலத்தில் உள்ள கிடங்கில், கடந்த சில மாதங்களுக்கு முன், நம்மாழ்வார் கருத்து படி, வசம்பு பொடியை கரைத்து உணவு பொருட்கள் உள்ள மூட்டைகளில் தெளித்தோம்.
மேலும், மூட்டைகளுகளுக்கு இடையில் வேப்பிலை, நொச்சி இலைகளை வைத்து பரிசோதித்தோம். இதன் மூலம், பூச்சிகள் தொல்லை இயற்கை முறையில் கட்டுப்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து கிடங்குகளிலும், இதை பரிசோதித்து பார்க்க ஆலோசனை வழங்கியுள்ளோம். இத்திட்டம் வெற்றி பெரும் போது, உலகத்துக்கே, தமிழகம் இத்திட்டத்தில் முன்மாதிரியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்திய உணவு கழகத்தின் மண்டல மேலாளர் டாலிவால், உறுப்பினர் சேகர் உட்பட பலர் உடனிருந்தனர்.