கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட, ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில், 200 ஹெக்டேர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு, முள்ளுங்கி அனுப்பி வைக்கப்படுகிறது. 60 நாட்களில் பலன் தரும் முள்ளங்கியை, ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய, 20 ஆயிரம் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. ஒரு ஏக்கருக்கு, பத்து டன் வரை மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ முள்ளங்கி, ஐந்து ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டால், விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். ஆனால், வரத்து அதிகரித்துள்ளதால், முள்ளங்கிக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் அதை பறிக்காமல், விவசாயிகள் செடிகளில் விட்டுள்ளனர். சில விவசாயிகள் முள்ளங்கி செடிகளுடன், உழவு ஓட்டி வருகின்றனர்.
இது குறித்து, சின்னலட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேஷ் கூறியதாவது: தரமான முள்ளங்கியை சாகுபடி செய்துள்ளோம். ஆனால், விலைதான் போதிய அளவில் கிடைக்கவில்லை. 70 கிலோ கொண்ட ஒரு மூட்டை முள்ளங்கி, 50 ரூபாய்க்கு வியாபாரிகளால் கேட்கப்படுகிறது. ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள, முள்ளங்கியை பறித்து, அதை நன்கு கழுவி, மூட்டையாக கட்ட ஒரு நபருக்கு, 170 ரூபாய் கூலி கொடுக்க வேண்டும். சரக்கு வாகனத்தில், மார்க்கெட் கொண்டு செல்ல ஒரு மூட்டைக்கு, 50 ரூபாய் வாடகை கேட்கப்படுகிறது. இதனால் பறிப்பு கூலி மற்றும் ஏற்று, இறக்க கூலிக்கே பணம் வருவது இல்லை. எனவே, செடிகளில் பறிக்காமல் விட்டுள்ளோம். விவசாயிகளின் நலன் கருதி, அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Source news : Dinamalar