கோவை;இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், இரு நாட்கள் நடக்கும் தென்னை திருவிழா, கோவையில், வரும் 27ல் துவங்குகிறது.
இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் நாராயணன் கூறியதாவது:கோவை, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், வரும், 27ம் தேதி, தென்னை திருவிழா நடக்கிறது. தென்னை மேம்பாட்டு வாரியம், கயிறு வாரியம், இந்தோனேஷியாவில் உள்ள, ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் சமுதாயம், காசர்கோடு இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம், மத்திய பயிர் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை ஆகிய நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
முதல் நாள், மதிப்புக் கூட்டுதல் மற்றும் உற்பத்தி, தென்னை வகைகள், வீரிய ஒட்டு ரகங்கள், மேம்படுத்தப்பட்ட உற்பத்தி, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, இயற்கை வழி தென்னை பயிரிடுதல், நுண்ணுயிர் நுண்ணுாட்டம், இயந்திரமயமாக்கல் மற்றும் பிற தலைப்புகளில் கருத்தரங்கு நடக்கிறது.
இரண்டாவது நாள், மதிப்பு கூடுதலுக்கான வழிமுறைகள், தென்னை பொருட்கள் வணிகம், ஒருங்கிணைந்த தென்னை பதன முறைகள், தென்னை நார் கழிவுக்கான மதிப்பு கூடுதல், விவசாயிகளின் உற்பத்தி கூட்டமைப்பு ஆகிய தலைப்புகள் இடம் பெறுகின்றன. கயிறு மற்றும் தென்னை நார் சார்ந்த பொருட்கள், கருவிகள், நீர்ப்பாசன கருவிகள், இயந்திரங்களின் பார்வைக்கு, 85 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.