Skip to content

10 ஆயிரம் ஆண்டு பழமையான நிலத்தடி ஏரி

ஆப்ரிக்க நாடான நமீபியாவில் 10 ஆயிரம் ஆண்டு பழமையான பிரமாண்ட நிலத்தடி நீர்நிலை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தென்மேற்கு ஆப்ரிக்க நாடான நமீபியா அட்லான்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது.

இங்கு குடிநீர் ஆதாரம் தொடர்பாக ஜேர்மனி புவி அறிவியல் மற்றும் இயற்கை வளங்கள் நிறுவனத்தின் திட்ட மேலாளர் மார்ட்டின் கிங்கர் தலைமையில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில், மிகமிக பழமையான பிரமாண்ட நீர்நிலை ஒன்று தரைக்கு அடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி மார்ட்டின் கிங்கர் கூறுகையில், ஆப்ரிக்காவின் வறண்ட பகுதிகளில் ஒன்று நமீபியா. பாலைவனங்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் தரைக்கு கீழே சுமார் 1000 அடி ஆழத்தில் பிரமாண்ட ஏரி அளவுக்கு நீர்நிலை இருப்பது தெரியவந்துள்ளது.

தரைக்கு அடியில் நிலத்தடி நீர்ப் படுகைகள் இருப்பது சாதாரணம் தான். 10 ஆயிரம் ஆண்டு பழமையானது என்பது தான் சிறப்பம்சம். இத்தனை ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த நீர்நிலை சுமார் 70 கி.மீ. நீளம், 40 கி.மீ. அகலம் என பிரமாண்ட ஏரி அளவுக்கு இருக்கிறது. நிலத்தடி ஏரிக்கு ஓகங்வெனா- 2 என்று பெயரிட்டுள்ளோம். அங்கோலா நாட்டின் எல்லையை ஒட்டி இது அமைந்துள்ளது.

சமீப ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் உள்ளதால் ஆறு, கடல் போன்றவை நிறைய மாசுபட்டிருக்கிறது. ஆனால் 10 ஆயிரம் ஆண்டுகளாக நிலத்தின் மேல் பகுதியுடன் தொடர்பில் இல்லாத தண்ணீர் என்பதால், ஓகங்வெனா ஏரியின் தண்ணீர் மிகவும் சுத்தமாக உள்ளது.

சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் ஆப்ரிக்காவில் பல பகுதிகளில் மக்கள் அவதிப்படுகின்றனர். நமீபியாவிலும் மக்கள் நல்ல தண்ணீருக்காக வெகுதூரம் செல்ல வேண்டி இருக்கிறது. நமீபியா நாட்டின் மொத்த மக்களில் 40 சதவீதத்தினர் வடக்கு பகுதியில் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஓகங்வெனா ஏரி நீரைக் கொண்டு இன்னும் 400 ஆண்டுகள் வரை தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும்.

அது மட்டுமின்றி பாசனத்துக்கும் பயன்படுத்தலாம். அந்தளவுக்கு அங்கு தண்ணீர் தாராளமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஆய்வு பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு, தண்ணீரை எடுக்கும் பணி தொடங்கும் என்று நமீபியாவின் விவசாய துறை உயரதிகாரி ஆபிரகாம் நெகமியா தெரிவித்தார்.

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj