ஒரு சாக்லேட் ஐ சாப்பிட்டுவிட்டு தூக்கிப்போடும் சிறிய கவர்,
வீடுகளில் தினமும் பயன்படுத்தும் பொருட்களின் கவர்,
கடைகளில் வாங்கும் பிளாஸ்டிக் கவர், துணிகளின் மேலே இருக்கும் பிளாஸ்டிக் கவர்
என எல்லாமே பயன்படுத்திவிட்டு தூர வீசியெறியும் நாகரீகம் வளர்ந்ததால் ,
அதனால் கிடைக்கும் கழிவுகளும் குறுமலைகளாய் இருந்த காலம்போய் பெரும் மலைகளாய் உருமாறி வருகின்றன.
ஏறக்குறைய 15 வகையான கழிவுகள் இருப்பதாக தெரிவிக்கிறது விகாஸ்பீடியா.
வீட்டுக் கழிவுகள்
வணிகக் கழிவுகள்
நிறுவனக் கழிவுகள்
நகரக் கழிவுகள்
மட்கும் குப்பைகள்
சாம்பல் கழிவு
கழிவுக் கப்பிகள்
பெரிய அளவிலான கழிவுகள்
தெருக் கழிவுகள்
இறந்த விலங்குகளின் கழிவுகள்
கட்டுமானம், இடிபாட்டுக் கழிவுகள்
தொழிற்சாலைக் கழிவுகள்
இறைச்சிக் கூடக் கழிவு
மருத்துவக் கழிவுகள்
உயிரியல் மருத்துவக் கழிவு
மின்னணு கழிவுகள்
இத்தகைய கழிவுகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகின்றன.
இந்தியா போன்ற நாடுகளில் கழிவுகளை முறையாகப் பராமரிக்காமல் அவற்றை அப்படியே ஓரிடத்தில் சேகரித்து வைக்கின்றோம், நாளுக்கு நாள் குப்பைகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தாமல் அப்படியே விட்டுவைக்கும்போது கழிவுகள் மீண்டும் மீண்டும் சேர்ந்து மாமலை போல் ஆகிவிடுகின்றன. அது பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் சுற்றித் திரிவதால் அந்தக் குப்பைகள் நம் வாழ்வில் நாள் தோறும் கறைகளை ஏற்படுத்துகின்றன. குப்பைக் கறைகளிலிருந்து கரையேற முடியாமல் இருப்பது அச்சத்துக்குரியது. குப்பைக் கழிவு சுகாதாரச் சீர்கேடுகளின் தலைவாசல்.
வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்காமலேயே அது நோய்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்.
மாநகரங்களில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 100 டன் குப்பைக்கழிவுகள் சேர்வதாக வைத்துக்கொண்டால் ஒரு மாநகரத்திற்கு ஒரு மாதத்திற்கு 3000 டன், ஒரு வருடத்திற்கு 36,000 டன் கழிவு சேருகிறது.
ஆக, தமிழகத்தில் இருக்கும் மாநகரங்களில் சேரும் கழிவு, கிராமங்களில் சேரும் கழிவு என கணக்கிட்டால் அதன் மதிப்பு நம்மை உறையவைக்கும். உண்மையை அறிந்து கொண்டால் பதறவைக்கும். இவ்வளவு கழிவுகளை அந்தந்த மாநகரங்களில் உள்ள ஏரி, குளம், குட்டையில் கொட்டை அதை பாழ் படுத்தி அடுத்த தலைமுறைக்கு எடுத்த செல்ல இயலாத அளவு நம் இயற்கை வளங்களை வீணாக்கிவருகிறோம்.
2015ல் இந்திய அரசாங்கத்தின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எடுத்த ஒரு கணக்கெடுப்பில் தினமும் 15,000 டன் நெகிழி(பிளாஸ்டிக்) கழிவுகள் இந்தியாவில் உள்ள 60 நகரங்களில் உற்பத்தியாகின்றதாம், ஆனால் அதில் 6000 டன் கழிவுகள் மறுசுழற்சிக்கு உட்படுத்தபடவில்லை என்று கூறுகின்றனர்,
பெரிய சிக்கல் என்னவெனில் மறுசுழற்சிக்கு உட்படுத்தாத எந்த பொருளும் ஆங்காங்கே தேங்கி சுகாதார சீர்கேடுகளை உருவாக்கும், நீர்நிலைகளையும் பாதிக்கும். உங்கள் ஊர் ஏரிகளையும் அவ்வப்போது பார்த்து வையுங்கள்
தமிழ்நாட்டில் எந்த அரசியல்வாதிக்காவது அல்லது நகராட்சி, ஊராட்சி தலைவர்களுக்காவது கழிவுகள் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு இருக்கிறதா? தெரியவில்லை..
இன்னொரு விசயம் தெரியுமா?
வீணாக்கும் கழிவுகளில் இருந்து மறுசுழற்சிக்கு மாற்றும் தொழிலின் மதிப்பு 2020 ல் 5 லட்சம் கோடியாக இருக்குமென்று ஒரு மதிப்பு இருக்கிறது. இதனால் 5 லட்சம் கோடிக்கு எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு அதிகமாக கிடைக்கும் என்பதும் நமது அரசாங்கம் கவனத்தில் வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம். தங்க கழிவுக்குத்தான் மதி்ப்பு என்றில்லை, வீணாகும் கழிவுகளை மறுசுழற்சி செய்வது தங்கத்தினை விட மேலானது
எனவே எந்தப்பொருள் வீணாலும் மறுசுழற்சிக்கு பயன்படுத்த முயற்சிப்போம்!