காளிமுத்து எனும் விவசாயி கேட்டதற்கு இணங்க பச்சை மிளகாய் பயிர் செய்வது எப்படி என்று பதிவு இங்கே உங்களுக்காக
நல்ல வடிகால் வசதியுடைய நிலங்கள் மிளகாய் பயிரிட ஏற்றவை. கடல்மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம் வரை உள்ள வெப்பப் பிரதேசங்களில் மிளகாய் நன்கு வளரும். ஜனவரி -பிப்ரவரி, ஜூன்-ஜூலை, செப்டம்பர் ஏற்ற பருவங்கள். ஆனால் அனுபவம் வாய்ந்த விவசாாயிகள் பச்சை மிளகாய் எல்லாகாலங்களிலும் உறுதி செய்ய ஏற்றவை என்று கூறுகிறார்கள்,
ஒரு ஏக்கருக்கு 400 கிராம் (20,000 நாற்றுகள்) விதை தேவைப்படும். மானாவாரி மற்றும் இறவையில் பயிரிட ஏற்றது. கோ.1, கோ.2, கோ3, பிகேஎம்1, மேலும் சாத்தூர் சம்பா, ராமநாதபுரம் குண்டு, நம்பியூர் குண்டு ஆகிய நாட்டு வகைகளும் அந்தந்த பகுதிகளில் பயிர் செய்யப்படுகின்றன.
ஒரு கிலோ விதைக்கு காப்டான் அல்லது திராம் 2 அல்லது டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் வீதம் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும். அசோஸ் பைரில்லம் நுண்ணுயிரியை எக்டருக்கு 2 பொட்டலம் வீதம் விதைநேர்த்தி செய்வதால் தழைச்சத்தின் தேவையினை 25 விழுக்காடு அளவுக்கு குறைக்கலாம்.
நாற்றங்கால்
நாற்றங்காலுக்கு மேட்டுப்பாத்திகள் 1 மீட்டர் அகலம், 3 மீ. நீளம், 15 செ.மீ. உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு மக்கிய தொழு உரம் 75 கிலோ இடவேண்டும். பாத்திகளில் விதைகளை 2 செ.மீ. ஆழத்தில் 5-10 செ.மீ. இடைவெளியில் வரிசையில் விதைத்தபிறகு வைக்கோல் அல்லது உலர்ந்த இலைகளைப் பாத்திகளின் மேல் பரப்பி, பூவாளியால் தண்ணீர் ஊற்றவும். விதைத்த 10-15 நாட்களில் பாத்திகளில் பரப்பியதை அகற்றிவிட வேண்டும்.
நாற்றங்காலில் வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த 15 நாட்கள் இடைவெளியில் புளூகாப்பர் 2.5 கிராம் மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து ஊற்ற வேண்டும். நடவுக்காக நாற்று பிடுங்குவதற்கு 15 நாட்களுக்கு முன் ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 250 கிராம் பியூரடான் குருணைகளை இடுவது நூற்புழு மற்றும் இளம் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும். நடு வதற்கு 40 முதல் 44 நாட்கள் வயது டைய நாற்றுகளே ஏற்றவை. நேரடியாக விதைக்கப்பட்ட பாத்திகளில் விதைத்த 30 நாட்களுக்குப் பிறகு தேவையான பயிர் எண்ணிக்கை இருக்குமாறு கலைத்து இடைநிறைவு செய்வது அவசியம்.
நிலத்தை 4 முறை உழுது, கடைசி உழவின்போது எக்டருக்கு 25 டன் தொழு எரு அல்லது மக்குகுப்பை இட்டு 45 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைத்து, பயிருக்கு பயிர் 30 செ.மீ. இடைவெளியில் நடவேண்டும். கோ 3 வகைகளுக்கு 30 து 15 செ.மீ. இடைவெளி யில் நடவு செய்ய வேண்டும்.
அடியுரமாக எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும். மானாவாரி அல்லது இறவைப்பயிர் இரண்டிற்கும் தழைச்சத்தை மூன்று முறை பிரித்து இடவேண்டும். விதைத்த 70, 100 மற்றும் 130வது நாள் நடவுப்பயிரில் நட்ட 30, 60, 90ம் நாள் ஒவ்வொரு முறையும் எக்டருக்கு 30 கிலோ வீதம் இடவேண்டும். உரம் இட்டபின் நீர் பாய்ச்ச வேண்டும்.
பூக்கள், பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கவும், பூக்கள் விடுவதைத் தூண்டவும் நட்ட 60 அல்லது விதைத்த 100வது நாளில் ஒரு முறையும், 30 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது முறையும் வளர்ச்சி ஊக்கி (என்ஏஏ) 10 மில்லிகிராம் ஒரு லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். மேலும் டிரையகான்கைடனால் 1.25 மிலி/ லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
பச்சை மிளகாயை நட்ட 75 நாட்கள் அல்லது விதைத்த 105 நாட்களிலும், பழுத்த பழங்களை ஒரு மாதத்திற்குப் பின்னும் அறுவடை செய்யலாம். மேலும் 3 முதல் 4 மாதங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யலாம். முதல் இரண்டு பறிப்புகளிலிருந்து பச்சை மிளகாயும் அடுத்த பறிப்புகளிலிருந்து பழுத்த மிளகாயும் அறுவடை செய்யலாம்.
மகசூல்: ஒரு எக்டருக்கு-210-240 நாட்களில், வற்றல்- 2-3 டன், பச்சைமிளகாய்-10-15 டன்.
பச்சை மிளகாய் பயிர் செய்வது பற்றிய விவசாயப் பல்கலைக்கழகத்தின் விவரம்
http://agritech.tnau.ac.in/ta/seed_certification/seed_veg_chillies_ta.html