Site icon Vivasayam | விவசாயம்

விவசாயிகளுக்கு பொறுமை வேண்டும் -ஜகதீஷ்!

விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி மக்களிடையே கொண்டு சேர்த்திட உதவும் புதிய பகுதியாக கருத்துக்களம் என்ற புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இதன் தொழில்துறை, விவசாயம் செய்பவர்கள், ஊடகத்துறை, மாணவ/மாணவியர், ஆசிரியர் என எல்லாத்தரப்பினிரின் கருத்துக்கள் கொண்ட ஒரு பெருந்தரவகம் உருவாக்கப்பட உள்ளது. அதில் சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து வந்துள்ள திரு.ஜெகதீஸ் அவர்களின் கருத்து இன்றைய விவசாயக்கருத்துக்களத்தில்

1. விவசாயம் உயர உங்கள் கருத்து என்ன?

விளைபொருட்களுக்கான நிலையான விலையை நிர்ணயிக்கவேண்டும்.
நதி நீர் பங்கீட்டு் பிரச்சனைகள் நிரந்தரமாக களையப்பட வேண்டும். விவசாயத்துறை இயந்திரமாக்குதலுக்கு முழுவதும் தன்னை ஒப்புக்கொடுத்தப்பின்னும், சராசரி வேளாண் உயர்வுக்கு எது தடையாக உள்ளதென்பதனை கண்டறிய வேண்டும். மற்ற அண்டை மாநிலங்களை ஒப்பிடும்போது தடுப்பணைகள் மிகவும் குறைவு. இவற்றின் மூலம் உபரி நீரை ஏரிகளில் தேக்கிவைத்து, பருவமழை பொய்க்கும் காலங்களில் கை கொடுக்கும் .

2. விவசாயிகள் என்ன செய்யவேண்டும்.?

விவசாயிகள் விளைவதற்கு பொறுமைகாக்கும் அளவிற்கு, அதனை விற்பனை செய்வதில் பொறுமை காப்பதில்லை. உதாரணமாக கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட உழவர்சந்தையை எடுத்துக்கொள்ளலாம். இடைத்தரகர்களும், வியாபாரிகளும் ஆக்கிரமித்துக்கொள்ள, விவசாயிகளின் பொறுமையற்ற தனமே முதற்காரணம். விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு வித நேரடி தொடர்பை , இது போன்ற சந்தைகள் உருவாக்கும். நேரடி விற்பனை மூலம் இலாபமும் மனநிறைவும் ஏற்படும். விளைபொருட்களை மட்டும் நம்பியிராமல் கால்நடை வளர்ப்பு போன்றவைகளை முன்னெடுக்கலாம். ஒரே வகையான பயிரை நம்பியிராமல் மற்றவகை பயிர்களையும் நடவு செய்யலாம். மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை விவசாயிகள் சங்கமே நேடியாக ஏற்றுமதி செய்து விவசாயிகளுக்கு வழிவகை செய்ய முன் வரவேண்டும்

3. விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர அரசாங்கம் என்ன செய்யவேண்டும்?.

இது ஒரு வேளாண்மை நாடு என்பதை கொள்கையளவில் இல்லாமல், செயல்வடிவில் கொண்டுவர திட்டங்கள் தீட்டப்படவேண்டும். பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் நாடு என மார்தட்டிக்கொள்ளும் ஆட்சியாளர்கள், விவசாயிகள் தற்கொலைக்கு கை கட்டி வேடிக்கை பார்க்கும் அவலத்தை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. நதிநீர் பங்கீட்டு பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு எட்டப்பட வேண்டும். வழங்கப்படும் விவசாயக்கடன்கள் விவசாயமன்றி வேறு தொழில்களுக்கு பயன்படுத்துவதை தடை செய்யவேண்டும். நஷ்டமடைந்த விவசாயிகளை கண்டறிந்து அந்த கடன்களை மட்டும் தள்ளபடி செய்யவேண்டும்.

மேய்ச்சல் நிலங்களை உருவாக்க வேண்டும். அரசே அனைத்து பொருட்களை கொள்முதல் செய்து விநியோகிக்கவேண்டும். விவசாய கிடங்குகள் நவீனமாக்கப்பட வேண்டும்.

திறந்தவெளி சேமிப்புக்கிடங்குகளை அப்புறப்படுத்தவேண்டும். கால்நடை தீவனங்களை அரசே கொள்முதல் செய்து ஆவின் நிறுவனங்கள் வாயிலாக விற்பனை மையங்கள் ஏற்படுத்தவேண்டும். நிலுவை தொகைகள் ஏதுமின்றி உடனுக்குடன் விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும். விவசாயிகள் தங்கள் வாழ்வாதரத்திற்காக எதையும் போராடி பெறக்கூடிய சூழலை ஒழித்து, முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். விவசாய காப்பீட்டு திட்டங்களை பரவலாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

4.விவசாயிகளை காக்க பொதுமக்கள் என்ன செய்யவேண்டும்?

எந்த ஒரு விவசாயியும் தன் நலனுக்காக மட்டும் விளைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. அனைவருக்குமாக பாடுபடக்கூடியவன் என்பதனை மனதில் கொள்ளவேண்டும். நுகர்வு கலாச்சாரத்தில் சிக்குண்ட மக்கள் விவசாயிகளிடம் நேரடி தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். கார்பரேட் அங்காடிகளில் விவசாய பொருட்களை வாங்குவதை தவிர்த்து, வாரச்சந்தைகளுடனான பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். இதனால் வாரச்சந்தைகள் காப்பற்றப்படுவதுடன், விவசாயிகளும் காப்பாற்றப்படுவார்கள்

உங்கள் கருத்து குறித்த உங்கள் கருத்துக்களை மறவாமல் கீழேயுள்ள மறுமொழி வசதி மூலம் எங்களுக்கு அனுப்பலாம்
நன்றி!

Exit mobile version