விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி மக்களிடையே கொண்டு சேர்த்திட உதவும் புதிய பகுதியாக கருத்துக்களம் என்ற புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது.
இதன் தொழில்துறை, விவசாயம் செய்பவர்கள், ஊடகத்துறை, மாணவ/மாணவியர், ஆசிரியர் என எல்லாத்தரப்பினிரின் கருத்துக்கள் கொண்ட ஒரு பெருந்தரவகம் உருவாக்கப்பட உள்ளது. அதில் முன்னாளர் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களின் புதல்வர் திரு.ராமசுகந்தன் அவர்களின் கருத்து இன்றைய விவசாயக்கருத்துக்களத்தில்
விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்?
நம் விவசாயிகள் பாரம்பரிய விவசாய நுட்பங்களோடு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மகசூலை பெருக்குவதற்கும், அதிக லாபம் ஈட்டுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?
தற்போது விவசாய தொழில் செய்வதற்கு வேலையாட்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள். இதற்குக் காரணம் விவசாய தொழிலை விட்டு வேறு வேலை செய்தால் அதிக லாபம் அவர்களால் ஈட்ட முடிகிறது. அதனால் விவசாயம் செய்பவர்களுக்கு பிஎப் , குறைந்தபட்ச சம்பளம், ஹெல்த் இன்சூரன்ஸ், கிராமத்திலேயே தரமான மருத்துவ வசதி வாய்ப்பினை உருவாக்கியும், ஏற்கனவே உள்ளவறறை மேம்படுத்த வேண்டியதும் அவசியம். விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பங்களை இலவசமாக அரசாங்கம் கற்று தரவேண்டும். சில வசதியான விவசாயிகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை இசுரேல் போன்ற நாடுகளுக்கு அனுப்புகிறார்கள்.
மாறாக வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களை நம் நாட்டிலேயே தங்க வைத்து நவீன தொழில்நுட்பங்களை அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையில் வாய்ப்பினை உருவாக்க வேண்டும். தொழில்நுட்ப கல்லூரிகள் இருப்பது போல விவசாய தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் நிறைய உருவாக்க வேண்டும்.
விவசாயிகளின் காக்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் ?
நகரத்தின் ஒருவர் ஏதோ ஒரு பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டால் அனைத்து ஊடகங்களும் நாட்டில் ஒரு பிரளயம் ஏற்பட்டது போல சித்தரிக்கிறார்கள். ஆனால் கிராமத்தில் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டால் அவர் சாவைக்கூட யாரும் கண்டுகொள்வதில்லை.
விவசாயிகள் தான் நாம் சாப்பிடும் சாப்பாட்டிற்கு முக்கிய காரணம் ஆனார்கள். மெரினாவில் ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு எப்படி பொதுமக்கள் போராடினார்களோ அதேபோல விவசாயிகளின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் போராட முன்வரவேண்டும். நம் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் பல நாட்களாக போராடி வருகிறார்கள் , ஆனால் அவர்கள் போராடிய முறையைப் கேலி செய்து சித்தரித்து சிலர் பேசி வருகிறார்கள் , அவர்களுடைய கோரிக்கைகளை நாம் காது கொடுத்து கேட்க தவறிவிட்டோம். இதுபோன்ற பிரச்னைகளை நம் பிரச்சினைகளாக கொண்டு, அவர்களுக்காக களத்தில் அவர்களுடன் போராடவில்லை என்றாலும் , நம்மால் முடிந்தவரை அவர்களுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும்.
ஒரு விவசாயி கஷ்டப்பட்டு சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சாப்பிடும் சாப்பாடு நமக்கு கிடைக்கிறது என்பதை தினமும் நினைத்துப் பார்க்க வேண்டும். விவசாயிகளின் அருமை பெருமைகளை நம்முடைய குழந்தைகளுக்கும் இளைய தலைமுறைக்கும் எடுத்துக்கூற வேண்டும்.