உழவு.
“உழவு நட்பில்லாத நிலமும்
மிளகு நட்பில்லாத கறியும் வழவழ.”
“புழுதியுண்டானால் பழுதில்லை.”
பயிர்கள் தங்களுக்கு வேண்டிய ஊட்டத்தை மண்ணிலிருந்து வேர்கள் மூலமாய்க் கிரகிக்கவேண்டியிருப்பதால், அவ்வூட்டத்தை நிலத்திலுள்ள ஜலம் கரைப்பதற்கு மண்ணின் அணுக்கள் கூடியவரையில் நயமாயிருக்கவேண்டியது அத்தியாவசியம். பயிர் அறுவடையானபின் அநேகமாய் நிலம் எந்த நிலைமையில் காணப்படுமோ அவ்வண்ணம் நீடிய கோடைகாலத்து வெயிலில் காய்ந்து கெட்டியாய் இறுகின தரிசுநிலத்தில் விதைவிதைத்தால், எல்லாம் முளையாமல் சில விதைகள் முளைக்கும். அவ்வாறு முளைத்துவரும் சொற்பப் பயிர்களுள் இன்னும் மிக சொற்பபாகம் தான் செழித்துவளரும், விதையிலிருந்து நல்ல மகசூலை அடையவேணுமானால் , நிலத்தைச் சீராய் உழுது பண்படுத்த வேண்டும். நிலத்தின் தரை இறுகி , வெயிலில் காய்ந்து இருக்கும்வரையில் , அந்நிலத்தில் தண்ணீர் சுலபமாய் உள்ளே ஊறியிராமலும் காற்றேட்டமில்லாமலு மிருக்கும். பூமிக்கும் அதன் உற்பத்தி ஸ்தானமாகிய பாறைக்கும் வித்தியாசமென்னவெனில் பாறை ஒரே துண்டாயிருக்கிறது. பூமியோ அநேக கல்துண்டுகளால் ஆக்கப்பட்டு அவைகளில் சிலவைகள் பெரிதாயும் மற்றவைகள் சிறிதாயுமிருக்கின்றன. இக்கல்துண்டுகள் ஆதியில் கெட்டியாயிருந்த பாறை, எந்த ஏதுக்களால் உடைக்கப்பட்டு துண்டாக்கப்பட்டனவோ, அதே ஏதுக்களால் இன்னும் சிறியவைகளாக இடைவிடாமல் உடைக்கப்பட்டு வருகிறது. மேற்குறித்த ஏதுக்களுள் முக்கியமானவை சீதோஷ்ணம், காற்று ,ஜலம்
குடியானவன் நோக்கம் பயிர்கள் செழிப்பாய் வளர்வதற்கு நிலத்தைப் பண்படுத்தித் தயார்செய்ய வேண்டுவதுதான். இதை நிறைவேற்றுவதற்கு அவன் காற்றும் ஜலமும் தாராளமாய்ச் செல்லும்படி, மண்ணைப் புழுதியாக்கி இளக்கப்படுத்துகிறான். இப்பலனை அடைவதற்கு அவன் செய்யும் வேலைகள் அனைத்தும் உழவுதொழில் எனப்படும். அதாவது, உழவுதொழிலில், மண்வெட்டியால் வெட்டியும், கலப்பையால் உழுதும், இன்னும் மண்ணை நயமான அணுக்களாகப் பிரித்து நல்ல புழுதியாக்கக்கூடிய இதர வேலைகள் அனைத்தும் அடங்கும். இவ்வாறுவிவசாய தொழிலை நடத்துகையில் குடியானவன், நிலத்திலே தன்னால் விதைக்கப்படாமலும் நடப்படாமலும் இயற்கையாக தானாகவே வளரும் புல் , பூண்டு இவைகளை ஏறத்தாழ முழுவதும் அவசியமாய் அழித்துவிடுகிறான். இதுதான் நிலத்தை துப்புரவாக்கல் எனக் கூறப்படும்.
நிலம் நன்றாய்ப் புழுதியாக்கப்பட்டால் அப்போது அது விதைப்பதற்கு தயராயிருக்கிறது; அதாவது நிலம் விதை பதத்திலிருக்கிறதென்று கூறுவார்கள். உழவு நயம் எல்லாப் பயிர்களுக்கும் ஒரேவிதமாக விருக்க வேண்டியது அனாவசியமென்று அனுபவத்தால் தெரியவருகிறது. அதாவது உழவு , செய்யும் பயிருக்குத் தக்கபடி வேறுபடவேண்டும்.சில பயிர்களுக்கு உழவு அதிக நயமாகவிருக்கவேண்டும். மற்றவைகளுக்கு அவ்வளவு நயம் வேண்டுவதில்லை. சில விதைகளுக்கு உழவு புழுதி அதிக ஆழமாயிருக்க வேண்டியிருக்கிறது. மற்ற விதைகளுக்கு பூமியின் கீழ்ப்பாகம் கொஞ்சம் கெட்டியாயும் விதைவிழும் மேற்பாகம் நயமான புழு தியாயு மிருக்கவேண்டியிருக்கிறது. எல்லா வித்துக்களுக்கும் முளைப்பதற்கு நிலத்தில் ஈரம் அவசிய மிருக்க வேண்டும். பயிர் செழித்து வளர்வதற்குப் பூமியில் களையில்லாமலிருக்கவேண்டும். ஆதலால் விதைப்பதமுள்ள நிலம் பொதுவாய் ஆழமாயும், புழுதி நயமாயும், துப்புரவாயும், ஈரமாயு மிருக்கவேண்டியது அவசியம். நிலம் இந்நிலைமைகளை அடைவதுதான் எல்லா உழவுத்தொழில்களின் கருத்து . இந்நோக்கத்தை பின் வருமாறு விவரிக்கலாகும்.
1.பயிர்களின் வேர்கள் தரையினுள் ஆழமாகச் சென்று. அவைகளுக்கு வேண்டிய ஆகாரத்தை அதிக விஸ்தாரமான இடத்திலிருந்து கிரகிப்பதற்கும் பயிர்களை நிலத்தில் வேர் ஊன்றி நிலைநிறுத்தும்பொருட்டும், நிலத்தில் ஈரம் தங்கும்படி செய்தலும், உழவினால் புழுதியை மிருதுவாக்கலும்.
2.பூமியிலிருக்கும் பயிர் உணவுகளைப் பயிர்கள் உபயோகப்படுத்தக்கூடிய நிலைமைக்குக் கொண்டுவரும் பொருட்டும், பூமியின்கண் பயிர் விர்த்திக்குக் கெடுதலாயிருக்கும் பயிருணவுகளின் தன்மையை மாற்றி, தீங்கற்ற பயிருணவாக செய்யும்பொருட்டும். காற்றை பூமிக்குள் தாராளமாய் பிரவேசிக்கும்படி செய்தலும்;
[மிருதுவாக்கல் –நிலவிஷயமாய் உபயோகிக்குங்கால் இப்பதத்தின் தாத்பரியம் நன்றாய் உழப்பட்ட பூமியில் ஒருவன் நடந்து செல்லும்போது சுலபமாக அறிந்துகொள்ளலாம். இதன் சிறப்பு பின்வரும் பழமொழிகளால் விளங்கும்.
1. ‘வெண்ணெய்ப்போல் உழவும் குண்ணுப்போல் விளைவும்.’
‘பசு உரத்திலும் பழம் புழுதி நல்லது.’
‘உழவிலும் பகை எருவிலும் தீராது’.
2.இக்கருத்துக் கிசையவே ‘உழுது அலர்ந்தது பழுதாகாது’ என்னும் தமிழ் வாசகமும் வழங்கிவருகிறது.]
3.பயிருக்கு தற்கால போஷணார்த்தமாகவும் பூமியிலிருந்து கிடைக்கக்கூடிய உணவுப்பொருள்களை பயிருக்குக் கொண்டுபோக சாதனமாயிருக்கிற ஜலத்தை பூமிக்குள் தாராளமாய்ப் பாயும்படி செய்தலும், உழவு நயத்தால் மண் இளகி மிருதுவாகி மழை ஜலத்தையும், பாய்ச்சப்படும் நீரையும் வெகுவாய் உறிஞ்சி அவைகளை தங்கவைத்துக்கொள்ளுவதற்கு சக்தியுள்ளதாகிறது.
4. மேலும் நிலத்தை துப்புரவாக்கல். அதாவது நிலத்தில், பயிர்விளைவுக்கு இடைஞ்சலாகும் களைகளை தங்கவிடாமல் பிடுங்கி அழித்தல்.
தெளிவுள்ள விவசாயி, தன் உழவுதொழிலை நடத்தும்போது, மண்ணை மிருதுவான நிலைமைக்குக் கொண்டு வரக்கூடிய இயற்கையான சாதனங்களைத் தன்னால் கூடும்வரையில் உபயோகப்படுத்திக்கொள்ள முயலுகிறான். இந்தியாவில் மேற்காட்டிய காரணங்களில் முக்கியமானவை வெப்பமும் வறட்சியுமான நிலைமையிலிருந்து, ஈரமான நிலைமைக்கு மாறுவதுதான். ஈரமுள்ள தரையை கலப்பையால் உழுது, மண்வெட்டியால் தோண்டி, காற்றாடவிட்டால் அது உலரும்போது சிறு சிறு கட்டிகளாக உடைந்துவிடுகிறது. சில இடங்களில் எப்போதும் குடியானவர்கள் பயிர் அறுவடையானவுடன் தங்கள் புலங்களை உழுது மறுவிதைப் பட்டம் வரும்வரையில் காற்றாட விட்டுவிடுகிறார்கள். இப்படிச் செய்வதினால் தரை உழாமலிருந்தால் எவ்வளவு ஆழம் நன்றாகக் காயுமோ அதைவிட அதிக ஆழமாகவும் நன்றாகவும் காய்கிறது. காற்று மண்ணின் அடிபாகங்களில் தாராளமாய்ச் செல்லுகிறது. மழை பெய்யும்போதும் மழைத்தண்ணீர் கோடைகாலத்தில் உழாத தரிசு நிலத்தின்மேல் வழிந்தோடுவது போலல்லாமல் , தரையினுள் ஆழமாகச் சென்று நிலத்தில் ஈரம் தங்கும்படிச் செய்கிறது. நிலம் வெயிலில் நன்றாய்க் காயும்போது , புல் பூண்டுகளின் வேர்கள் கோடைகாலத்துக் கடும்வெயிலால் எரிக்கப்பட்டு நாசத்தை யடைகின்றன. நிலமும் அதிகமாக சுத்தப்படுகிறது. இப்படிச் சுத்தப்படுத்த அதிக பணச்செலவு செய்தாலொழிய முடியாது. அறுவடையானபின்பு பூமி எவ்வளவுக் கெவ்வளவு துரிதமாக உழப்படுகிறதோ அவ்வளவுக் கவ்வளவு பூர்த்தியாக மேற்குறித்த இயற்கை சாதனங்களால் நன்றாக புழுதியாக்கப்படும்.
சாதாரணமாய் பூமியைப் பண்படுத்துதல், கலப்பையால் உழுதலும் , அல்லது கடப்பாரை, மண்வெட்டியால் தோண்டுவதுமே. இவை யிரண்டில் நிலத்தைத் தோண்டுவதே வெகு சிலாக்கியம்; ஆயினும் அதனால் உண்டாகும் பணச்செலவு நிமித்தம் வழக்கமாக தோட்டங்களிலும் இன்னும் சொல்ப விஸ்தீரணமுள்ள இடங்களிலுந்தான் தோண்டப்படுகிறது. எவ்வளவுதரம் உழுதாலும் மண்ணைத் தோண்டுவதே சிலாக்கியமென்பது எல்லோருக்கும் தெரிந்தவிஷயமே. இதற்குக் காரணங்கள் பின் வருமாறு உள:-
முதலாவது மண் அதிக ஆழம் தோண்டப்பட்டு தூளாக்கப்படுகிறது, இரண்டாவது மண் நன்றாய் புரட்டப்பட்டு காற்று அலர விடப்படுகிறது; தவிரவும் நிலத்தைக் கொத்தும் வேலையாட்கள் சீராய் களைகளை களைத்துவிடக் கூடும்.
[தமிழில் “தை உழவு ஐயாட்டுக் கிடை,” “சித்திரை மாதம் புழுதி பத்தரைமாற்றுத் தங்கம்” என்னும் பழமொழிகள் வழங்குகின்றன . தை சற்றேறக்குறைய ஜனவரிமீ 11 உ அதாவது அறுவடை காலத்தில் ஆரம்பிக்கிறது. சித்திரை சுமார் ஏப்பிரல் மீ 11உ ஆரம்பிக்கிறது. இவ்வாறு குடியானவர்கள் நல்ல புழுதியை அடைவதற்கு இயற்கையாயுள்ள சாதனங்களை உபயோகப்படுத்துவதால் உண்டாகும் பிரயோஜனம் அவர்களுக்குத் தெரிந்தவிஷயமே.]
இப்படி யிருந்தபோதிலும் வியவசாயத்தொழிலில் சாதாரணமாய் உழவு முதலில் துவக்கப்படும் வேலை. ஆனாலும் அது பூமியைப் பண்படுத்தச் செய்யப்படும் அநேகவிதத் தொழில்களுள் ஒன்று. ஏனெனில், சில சமயங்களில் குடியானவன் நிலத்தைக் குண்டகை (Grubber), பாம்பு அல்லது பலகு (Har-row)என்னும் கருவிகளால் புல் பூண்டுகளைப் பெயர்த்து மேல்மண்ணை சீவவும் , உழுத கட்டிகளை உடைத்து சமப்படுத்தவும், இவைபோன்ற அநேகவித தொழில்களை நடந்த வேண்டியவனாயிருக்கிறான். இப்பலவித வேலைப்பாடுகளும் ஒரே விஷயத்தை உத்தேசித்தே செய்யப்படுகிறது; அதாவது நிலத்தை உழுது துப்புரப்படுத்தி ஈரம் காக்கும்படியான விதை பதத்துக்குக் கொண்டுவரச் செய்வதுதான்.
நிலத்தை விதைபதத்துக்குக் கொண்டுவர எவ்வளவுக் கெவ்வளவு சீக்கிரம் உழுகிறேமோ அவ்வளவுக் கவ்வளவு நல்லது.நிலம் அதிக ஈரமாயிராமல் உழவு பதத்திலிருக்கும்போது அதை உழவேணுமே தவிர அதிக ஈரமாயிருக்கும்போது உழக்கூடாது. அதிக ஈரத்தில் உழுதால், மண் புழுதியாகவும் இளக்கமாயு மிராமல் சகதிபோலாகி, காய்ந்தவுடன் இறுகிச் கெட்டியான கட்டிகளாய்விடுகிறது. ஈரம் போய் அதிகமாய்க் காய்ந்திருக்குந்தருணத்தில் உழுதாலோ மண் கட்டிகளாகப் பெயர்க்கப்பட்டு நல்லபுழுதியான ஸ்திதிக்குக் கொண்டுவர அதிக வருத்தமுண்டாகும். இவ்விரு சந்தர்ப்பங்களிலும் உழுதால் மண் கட்டியும் கரளையுமாய் பெயரும்; அவைகளை உடைத்து தூளாக்கி புழுதிசெய்து விதை பதத்திற்குக் கொண்டுவர அதிக பணச்செலவும்பிராசையும் உண்டாகும். நிலத்திலே போதுமான ஈரமிருந்து உழவு பதத்திலிருக்கும்போது உழுதால் கட்டிகள் பெயராது. ஒருவேளை கட்டிகள் பெயர்ந்தாலும் அவைகள் வெகு சொல்பமாகத்தானிருக்கும். சீக்கிரம் மழை பெய்யும்பட்சத்தில், அக்கட்டிகளை உடைக்க சிரமப்பட வேண்டியதில்லை. மழையினாலேயே அக்கட்டிகள் கரைந்து உதிர்ந்துவிடும். மழை வருமட்டும் காக்க முடியாமற்போனால் பெரிய கட்டிகளைக் கொட்டாப்பிடியைக் கொண்டு கையாலும், அல்லது உருளையின் உதவியாலும் கொஞ்சமளவு உடைத்துவிடலாம் பாக்கிவேலை பரம்பை நிலத்தின் குறுக்கு நெடுக்காய் ஒன்று , இரண்டு அல்லது மூன்றுதரம் ஒட்டுவதினால் முடிந்துவிடும். இத்தொழில்கள் பிரயாசமானவை. நிலம் சரியான பதத்திலிருக்கும்போது, அதாவது நிலத்தில் மிதமாகப் போதுமான ஈரம் தங்கியிருக்கும் போது, உழப்பட்டால் அக்கருவிகளை அதிகமாக உபயோகப் படுத்தவேண்டிய அவசியமிராது. கோடைப்பருவம் நீங்கி போதுமான மழை பெய்த பிறகுதான், அநேக இடங்களில் பூமியில் உழவு வேலை சாதாரணமாய் நடந்துவருகிறது. ஆயினும் மழை எப்போது தேவையோ அப்போது பெய்கிறதில்லை. ஆதலால் மழை பெய்யும் போதெல்லாம் அது வீண்போகாதபடி உழவுதொழிலை நடத்திவரவேண்டியது அவசியம். எல்லாவற்றிலும் முதன்மையானது நிலத்தைச் சரியான பதத்தில் உழவேண்டியதே. ஏனெனில் ஒரே தருணத்தில் சொல்பநாள்தான் பூமி, உழவுபதத்தி லிருக்குமாகையால் ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்னும் பழமொழிப்படி சமயம் வாய்க்கும்போதெல்லாம் தவறிவிடாமல் காலாவதி ஆரம்பத்திலேயே எவ்வளவுக் கெவ்வளவு நிலத்தை ஜாஸ்தியாக உழுகிறானே, அவ்வளவுக் கவ்வளவு பின்னால் விவசாயிக்கு அனுகூலமுண்டு.
அறுவடையானவுடன் நிலத்தை உழுதால் அதை நன்றாகப் புழுதி செய்யாமல் கட்டியாய் விட்டுவிடுவதே நலம். இதனால் கோடைகாலத்தில் காற்று மண்ணிற்குள் தாராளமாய்ச் சென்று அவசியமாய் காற்றலரப்படவேண்டிய கீழ்மண்ணுடன் கலக்கிறது.
[ இத்துடன் ‘உழவு உழது காய்ந்தால் வித்திரட்டி சாணும்’
என்னும் தமிழ்ப் பழமொழியை ஒப்பிடுக.]
இவ்வாறு காலாவதிக்குமுன் துரிதத்தில் உழும் உழவு, கட்டிஉழவாயிருந்தாலும் அதனால் கெடுதியொன்றுமில்லை. ஏனெனில் குடியானவனுக்குப் பூமியில் உடனே விதை விதைக்கவேண்டிய நோக்கமில்லை. ஆரம்பத்தில் உழவு கொஞ்சம் பிரயாசமாயிருந்த போதிலும் முதல் மழையில் கட்டிகள் உடைந்து உதிர்ந்து சிரமமில்லாமலே நயப்பட்டு நல்ல பதத்துக்கு வந்துவிடுகிறது. மேலும் மண் இவ்வாறு சீராய்க் காய்வதினால் அதிக நன்மை உண்டு. காற்று பூமியின் எல்லாப் பாகங்களிலும் செல்லும்படி செய்து புல், பூண்டு, புழு, பூச்சிகள் முதலியவற்றை நசிக்கச் செய்கின்றது.
இம்மாதிரியாகக் குடியானவன் நிலத்தைப் பண்படுத்த உழவுதொழில் முதலான பலவித வேலைகளையும் உசிதமான காலங்களிலே தவறாமல் நடத்திவந்தால், மேற்படி நிலத்தை நல்ல விதைப் பதத்துக்குக் கொண்டுவருவதில் அவனுக்கு அதிக வருத்தம் இராது. இதைக் குடியானவர்கள் சாதாரணமாய்ச் செய்துவருகிறார்கள். ஆயினும், இதில் மற்றொருவிஷயம் கவனிக்கத்தக்கது. அதாவது விதைப்பு நிலம் (seed bad)ஆழமாய் உழப்பட்டு நல்ல புழுதியா யிருக்கவேண்டும். இத்தேசத்து உழவுதொழிலில் சாமானியமான பிசகு என்னவென்றால் விதைப்பு நிலம் வழக்கமாக ஆழமாய் உழப்படுகிறதேயில்லை. ஆழ உழுதல், அநேகமாக எல்லா இடங்களிலும் அனுகூலமானது. விசேஷமாக உஷ்ணமும் வறட்சியாயுமுள்ள நாடுகளிலோ மிக அனுகூலமுள்ளது.
[இவ்வாறே திருவள்ளுவர் குறள் வெண்பாலிலும்
‘தொடிப் புழுதி கஃசா உணக்கிற்
பிடித்தெருவும் வேண்டாது சாலப்படும்.’]
திருஷ்டாந்தமாக: ஒரு தோட்டக்காரன் சொல்ப விஸ்தீரணமுள்ள நிலத்தில் அதிக மகசூலை விளைவிக்க விரும்பும்போது, ஆழமாக நிலத்தைக் கொத்துவதினால் விளையும் பயனை நன்றாய் அறிகிறான். ஆழ உழுதலால் விளையும் பயன்களை நிலத்திலுள்ள ஒர் குழியாவது பள்ளமாவது நிரப்பப்பட்டு.அதில் வளரும் பயிரினால் ஒருவாறகத் தெரியவரும். மழை ரொம்ப சொல்பமாயிருக்கிற காலத்தில்கூட மண்ணுள் நிரப்பப்பட்ட (அதாவது அதிக ஆழம் மண் போட்டு அதனால் இறுகாமல் இளக்கமாயிருக்கும்)இடங்களில் வளரும் பயிர்கள், அதே பூமியின் மறுபாகத்தில் வளரும் பயிர்கள் வாடி வதங்கின நெடுநாள் ஆன பிறகுகூட, பசுமையாயும் செழிப்பாயும் வளர்ந்து கொண்டிருப்பதைக் காணலாம். ஆயினும் நாட்டுக் கலப்பையால் ஆழ உழுவது மிகப் பிரயாசமான காரியம். ஒருவாறு கூறுமிடத்து அநேகதடவைகளில் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அப்படி ஆழ உழ முடியும். அக்கருவியால் எவ்வித உழவுதொழிலையும் மேற்குறித்தவாறு சீராக நாம் கருதும்படி செய்து முடிக்க அதிக பிரயாசப்பட வேண்டியிருக்கிறது. இதற்குக் காரணம் அக்கருவியின் வடிவந்தான். அது மண்ணை வெட்டுகிறதில்லை. ஆனால் பிளக்கிறது. கலப்பையை பூமிக்குள் ஆழமாகச் செலுத்தவேண்டுமானால் அழுத்திப்பிடிக்க வேண்டி யிருக்கிறது. எவ்வளவுக் கெவ்வளவு அழுத்திப் பிடிக்கப்படுகிறதோ அதற்குத் தகுந்தவாறு அதை இழுப்பதில் மாட்டுக்கும். உழும் மனிதனிக்கும் வருத்தம் அதிகரிக்கின்றது.
[இத்துடன்
‘சாண் உழவு முழு எருவுக்குச் சமானம்’.
‘அகல உழுவதை ஆழ உழு.’
‘தாழ உழுதால் தனிரோடும்.’
‘ஆழ உழதல் ஆட்டுரத்துக்கு மதிகம் என்னும் வாசகங்களை ஒப்பிடுக.]
ஆகையால் அக்கருவியால் நிலத்தை அதிக ஆழம் உழவேண்டுமானால் ஒவ்வொரு உழவிலும் கலப்பையை கொஞ்சம் கொஞ்சமாக ஆழத்திலே செலுத்தி அநேகதடவைகளில் திரும்பத் திரும்ப உழவேண்டியிருக்கிறது. இது உண்மையில் தாமதமும் கஷ்டமுமான வேலை. இதனால் அவசியமாக உழவேண்டிய இதர நிலங்கள் உழவாகாமல் வீணிலே காலம் கழிந்துவிடுகின்றது.
நாட்டுக்கலப்பை, உழுவதற்குத் தகுந்த நிலைமையிலிருக்கும் நிலத்தைப் பெயர்ந்து உழ. அவ்வளவு பிரயோசனமான கருவியல்ல . அது செய்யும் வேலை அரை குறையாகத்தான் இருக்கிறது. அக்கலப்பையால் நிலத்தை உழுதால் படைச்சாலுக்கு இடையே பெயர்க்கப்படாத உழவு தரிசு அல்லது உழவுக்கட்டைகள் நின்றுவிடும். பூமியிலே குறுக்கு நெடுக்காக அநேக தடவை உழுதாலொழிய அவ்வளவு தரிசை பெயர்க்க முடியாது. வெகுவாய் அனுபவத்தில் நாட்டுக்கலப்பையால் பூமியின் மேல்மண்ணை நன்றாய்ப் புழுதியாக்க, 4 அல்லது 5 தடவை உழவேண்டியிருக்கிறது. ஆயினும் சாதாரணப் பார்வைக்கு முதல் உழவாலேயே தரை முழுவதும் உழப்பட்டிருப்பதாகத் தோன்றும். முதலிலே உழப்பட்ட படைச்சால் மண் பக்கத்திலிருக்கும் தரையை மூடுகிறது. ஏதாவதொரு இடத்தில் இதை ஒதுக்கிப் பார்த்தால் அடியில் உழாமல் விடப்பட்டிருக்கும் தரிசு நிலங்கள் தோன்றும். இச்சிறு உழவு கட்டைகள் அல்லது தரிசுத் துண்டு நிலங்கள் இருப்பதற்குக் காரணம் யாதெனில் நாட்டுக்கலப்பை எறக்குறைய இங்கிலீஷ் v எழுத்து வடிவம்போல் அமைக்கப்பட்டிருக்கிறது.
[சில இடங்களில் முக்கியமாய் அதிக ஆழம் வேரூன்றி அடர்ந்து வளர்ந்து அருகு பற்றின சரிசல் நிலங்களில் குடித்தனக்காரர்கள் கோடைகாலத்தில் 5,6 ஜதை மாடுகள் பூட்டி மிகப் பளுவான கலப்பையால் உழுதுவருகிறார்கள். இக்கலப்பைகளால்கூட நிலத்தை இரண்டுதரம் உழவேண்டியிருக்கிறது. ஆயினும் மிகத் துரிதமாயும் அதிக பணச்செல வில்லாமலே உழவு வேலையை முடிக்கக்கூடிய சீமைக்கலப்பைகள் அவைகளுக்குப் பதிலாக உபயோகத்துக்கு வருகின்றன. ]
அதை நிலத்திலே அழுத்திப் பிடித்தால் தன் வடிவம்போலுள்ள படைச்சாலை செய்கிறது. இப்படைச்சால்கள் எவ்வளவு நெருக்கமாய் கலப்பையால் குறுக்கு நெடுக்காய் உழுவதினால்தான் இவ்வளவு தரிசு பெயர்க் கப்படுகிறது; நாட்டுக்கலப்பையால் ஆழமாக உழ முடியாவிட்டாலும் சீக்கிரமாக உழவு முடிக்கலாமென்றாலோ அதுவுமில்லை. மெதுவாகத்தான் உழவுவேலையை நடத்தலாம். மேலும் இக்கலப்பையால் ஆழ உழ வேண்டுமானால் அதிககாலம் செல்லும்.
நாட்டுக்கலப்பையால் உண்மையில் பெயர்க்கக் கூடிய மண்ணின் பரிமாணத்தை யோசிக்குமிடத்து அதைப் பூமியி லிருப்பதினால் உண்டாகும் பிரயாசமும் அதிகமாகவே காணப்படும். இதற்குக் காரணம் யாதெனில், கலப்பையினது வேலைசெய்யும் பாகம் கீழ்ப்புறத்தில் முக்கோணம் அல்லது v எழுத்து வடிவமாக இருந்தபோதிலும் மேற்புறம் தட்டையாக விருக்கும். கலப்பையை பூமியிலிழுக்கும்போது மேற்குறித்த தட்டையான பாசம் மண்ணின்மேல் அழுந்துகிறது. இதனால் கலப்பை தாராளமாகப் போகத் தடைப்படுகிறது. மேலும் தரை கொஞ்சம் ஈரமாக இருந்தால் மண் வெகு சுலபமாக கலப்பைக் குத்தியில் ஓட்டி, கலப்பைக்கும் ஏர்க்காலுக்கும் நடுவே பெரிய கட்டிகளாகச் சேர்ந்துவிடுகிறது. இப்படி மண் சேர்வதால் கலப்பையை இழுப்பதற்கு இன்னும் அதிகப் பிரயாசமாக விருக்கிறது. தவிர நிலத்தில் ஏதாவது செடி கொடிகள் படர்ந்திருந்தால் அவைகளும் கலப்பையின் கொழுவினால் மாட்டப்பட்டு உழுகிறவனுடைய வேலையை அதிகரிக்கச் செய்கின்றன. ஆதலால் கூடியமட்டும் தடங்கலில்லாமல் கலப்பை பூமியிலே செல்லும் பொருட்டு குடியானவன் கொடிகளும், மண்ணும் கலப்பையில் ஒட்டாமல் உழுவதற்கு ஒருபுறமாகக் கலப்பையில் அடிக்கடி திருப்பி ஒதுக்கிவிடுகிறான்.
நாட்டுக்கலப்பை மண்ணைக் கீறிச் செல்லுகையில் தரையின்மேலுள்ள அநேகம் புல் பூண்டுகளை பெயர்த்துவிடுகிறது. ஆயினும் அவைகளில் சிலவற்றை ஒருபுறமாக ஒதுக்கி வளர்ந்துகொண்டே யிருக்கும்படி விட்டுவிடுகின்றது. சிலசமயங்களில் களைகளைத் தரையின் மேற்புறத்திற்குக் கொண்டுவருவது நலம். அவைகள் அவ்விடத்திலேயே விடப்பட்டால் சீக்கிரம் கடும் வெயிலில் காய்ந்து மடிகின்றன. ஆயினும் வெகுவாய் அநேகவிதப் பூண்டுகளை மண்ணில் புதைப்பதே நலம். ஏனெனில் அவைகள் அங்கே நசித்து மட்கி நிலத்தைக் கொழுமையாக்குகின்றன. இப்பூண்டுகள் மண்ணில் வளர்ந்து அதனின்றும் தங்களுக்கு வேண்டிய உணவைக் கிரகித்திருக்கிறபடியால் இவைகள் மண்ணிலேயே அழியும்போது நிலத்தில் வளரும் பயிர்கள் மறுபடியும் சுலபமாக உபயோகப்படுத்தும்படி மேற்குறித்த உணவுபொருள்களைத் திருப்பிக் கொடுக்கின்றன. நிலத்தைத் தோண்டும்போது களைகள் புதைக்கப்படுகின்றன.
எந்தக்கலப்பை மண்ணை நன்றாய்ப் பெயர்த்து, இளக்கப்படுத்தி, தோட்டக்காரன் நிலத்தைக் கொத்தி மண்ணைப் புரட்டுவதுபோல அவ்வளவு சீராய் கீழ் மண்ணை மேல்மண்ணேடு கலக்கும்படி செய்கிறதோ அதுதான் உண்மையில் நல்ல கலப்பை. மண்ணைப் புரட்டுகிற கலப்பையாலுண்டாகும் பிரயோசனங்களாவன:-
1.மண்ணின் ஒவ்வோர் பாகமும் விசேஷமாய் அடிப்பாகமும் நன்றாய்க் காற்றாடப்பட்டு மிருதுவாக்கப்படுகின்றது.
2. செடி கொடிகளின் தண்டுகளும் இலைகளும் திருப்பப்பட்ட மண்ணில் கலக்கப்படுகிறபடியால் அவைகள் விரைவில் மடித்து மட்கிப்போகின்றன. மேலும் அவைகளின் வேர்கள் சூரியவெப்பம் படும்படி வெளியேவிடப்பட்டுக் காய்ந்து நசிக்கின்றன.
3. பயிர்களுக்கு ஹானிகரமுள்ள புழுப் பூச்சிகளும் தரையின்மேலே கொண்டுவரப்பட்டு பசிகளால் கொத்தப்பட்டும் வெயிலில் காய்ந்தும் நாசத்தை யடைகின்றன.
இவைகளை நாட்டுக்கலப்பை செய்கிறதில்லை. அதனால் அதற்குக் கலப்பையென்ற பெயர் கொஞ்சமேனும் தகாது. அது செய்வதெல்லாம் கூடி மண்ணைக் கிளறி இளக்கப்படுத்துவதுதான். அதைக்கூட தாமதமாயும் பிரயாசத்துடனும் செய்கிறது. ஆனால் ஐரோப்பாவில் உபயோகப்படுத்தப்படும் கலப்பைகளும் இந்தியாவில் கொஞ்சம் வழக்கத்திற்கு வந்த அவைகள் போன்ற சீரான சீமைக்கலப்பைகளும் மேற்குறித்த வேலையைத் திருத்தமாய்ச் செய்கின்றன. குடித்தனக்காரர்கள் அக்கருவிகளை உபயோகப்படுத்துவார்களானால் அவர்கள் அனுகூலமான தருணங்கள் நேரிடும்போது, நாட்டுக்கலப்பையால் உழுவதைக்காட்டிலும் வெகுவாய்த் தங்கள் நிலத்தை அதிக துரிதமாயும் மிகக் குறைந்த சரீரப் பிரயாசத்துடனும் பணச் செலவுடனும் வெகு ஆழமாயும் உழுவார்கள்.
ஆழ உழுவது மிகவும் சிலாக்கியமானது. ஏனெனில் ஆழ உழத நிலத்தில் பயிர்களின் வேர்கள் வெகு ஆழம் கீழேசென்று ஜலத்தையும் பயிருணவையும் வேண்டிய மட்டில் உட்கொள்ளுகிறது. மேலும் ஆழ உழவினால் இளக்கப்படுத்தப்பட்ட அடிமண்ணில் காற்று தாராளமாய்க் கலந்து அதிலுள்ள பயிருணவை பயிர்களின் ஊட்டத்திற்கு தயாராக்குகின்றது. இவ்வாறாகப் பயிர்கள் கிரகிக்கக்கூடிய உணவின் அளவு அதிகரிக்கின்றது. இன்னும் ஆழ உழுதலால் குடியானவன். தன் நிலத்தில் விழும் மழைத்தண்ணீரை அதிகமாய்ப் பூமிக்குள் சேகரித்து வைத்துக்கொள்ளுகிறான். ஓர் கடினமான தரையிலாவது, ஆழமாக உழப்படாத தரையிலாவது. மழைத்தண்ணீர் விழும்போது அதன் அதிக பாகம் வெளியே வழிந்தோடும். ஆனால் ஆழ உழுதலால் தரையினின்று ஆகாயத்திலே நீராவியாய்ப்போகும் ஜலத்தின் பரிமாணம் குறைவுபடுகிறது.ஏனெனில்,கேட்பதற்கு ஆச்சரியகரமாயிருந்தாலும் உண்மை என்னவெனில் இளக்கப்படுத்தப்பட்டிருக்கும் மிருதுவான தரையைக்காட்டிலும் கெட்டியாயிருக்கும் தரையிலிருந்து அதிக ஜலம் ஆவியாய்ப் போய்விடுகிறது. நயமான மண் மிக நெருக்கமாய் இறுகியிருக்கும்போது அது தளர்ச்சியாயிருப்பதைக்காட்டிலும் வெகு விரைவில் தரையின் அடியினின்றும் ஜலத்தை மேலே இழுக்கிறது. ஆதலால் மேல்மண் நெருக்கமாய் இறுகியிருக்கும்போது அது தரையின் அடியினின்றும் இடைவிடாமல் ஜலத்தை மேலே இழுத்து அதைக் காயும்படி அல்லது ஆவியாய்ப் போகும்படி வெளிப்படுத்துகிறது. ஆனால் இளக்கமான மண்ணில் இவ்வாறு உண்டாகிறதில்லை. நிலம் குளிர்ச்சியாகவே யிருக்கிறது. தெலுங்குதேசத்திலுள்ளவர்கள் சொல்லுகிறபடி ‘உழவானது நிலத்தைக் குளிரப்படுத்துகிறது.’ ஆழ உழவால் பயிர்களின் வேர்கள் மண்ணுக்குள் வெகு ஆழம் ஒடிச் செல்லுவதாலும் பலன் உண்டு. இதனால் அவ்வேர்கள் சூரியவெப்பத்தின் கொடுமையினின்று கொஞ்சமளவு காப்பாற்றப்படுகின்றன.
அநேக இடங்களில் ஆழ உழுதல் அதிக மகசூலை கிடைக்கச் செய்தபோதிலும் எப்போதும் இவ்விதமாக கிடைக்கும்மென்றும் அல்லது ஆழ உழுதவுடனேயே அதிக மகசூல் கிடைக்குமென்றும் நினைப்பது பிசகு. ஆனால் ஆழ உழவால் வெள்ளாமை தவறாமல் நிச்சயமாகவும். சரியாகவும் விளையும்: கண்டுமுதல் அதிகமாய்க் கண்டால் அது சாதாரணமாய் முதல்போகத்தில் இல்லாமல் மறுபோகத்தில் அப்படிக் காணலாம். ஆனால் இவ்விளைவு அடிமண்ணின் தன்மைக்குத் தகுந்தபடியிருக்கும். சில இடங்களில் பூமியை ஆழமாய்க் கிளறி புழுதியடிப்பதாலும் அநேக இடங்களில் ஆழ உழுது கலப்பையால் மண்ணைப் புரட்டி இளக்கப்படுத்துவதினாலும் தீமை உண்டாகலாம். அடிமண் சாரமில்லாமலாவது, அதிக களிப்பாயாவது , பயிர்வளர்ச்சிக்குக் கெடுதலான உணவுப்பொருள்களை உள்ளிட்டாவது இருந்தால். அம்மண்ணை அதிகமாய் மேலே கொண்டு வருவதினால் அதிக தீமை விளையும். ஆகையால் இப்படிப்பட்ட நிலத்தை உழுவதில் ஆழத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் அடிமண் சொற்பமாய் மேலே கொண்டுவரப்பட்டு காற்றினால் ஆறி நல்ல நிலைமைக்கு வரும். தவிர அடி மண் அதிக இரசலாயாவது அல்லது கல்லாந்தரையாகவாவது இருந்தால். ஆழ உழுதல் தீமையை உண்டாக்கும். ஏனெனில் சிலாக்கியமான மேல்மண் அடியில் புதைக்கப்பட்டு உபயோகமில்லாமல் போகிறது. தவிர. ஜலமும் வெகுவிரைவில் வடிந்தோடிவிடுகிறது. ஆகையால் முக்கியமாய் மண்ணைப் புரட்டக்கூடிய கலப்பையால் நிலத்தை ஆழ உழும்போது அதிக கவனம் செலுத்தவேண்டும். ஆயினும் நிலத்தை ஆழமாய்க் கிளறி மண்ணை இளக்கப்படுத்துவதினால் ஒருபோதும் கெடுதலில்லை. அடிமண் நல்ல நிலைமையிலில்லாதிருந்தால் அடிமண் கலப்பை (sub-soil plough) என்று சொல்லப்படும் ஒர்வித உழவுகருவியால் பூமியை உழுதால் அதிக நன்மை உண்டாகும். இக்கருவி நாட்டுக்கலப்பையை வெகுவாய் ஒத்திருக்கிறது. வேறெரு கலப்பையால் உழப்பட்ட உழவுசாலின் வழியாய் இக்கருவியைச் செலுத்தவேண்டும். இவ்வாறு செலுத்தும்போது அது அடிமண்ணைக் கிளறி இளக்கப்படுத்துகிறதே தவிர , மேலே கொண்டுவருகிறதில்லை. இப்படிச் செய்வதினால் ஜலமும் காற்றும் அடிமண்ணிற்குத் தாராளமாய்ச் செல்லுகின்றன.
விதைப்புநிலம் நயமாயும் ஆழமாயுமிருந்தால் அதில் சாமான்னியமாக ஈரமிருக்கும். ஆழ உழுதலின் ஒர் நோக்கம் நிலத்திலே ஈரம் காத்திருக்கும்படிச் செய்வதுதான். பருவத்துவக்கத்தின் உழவும் , முக்கியமாய் மகசூல் அறுவடையானவுடன் செய்யும் உழவும் அதிக விசேஷமானது. இவ்வுழவால் நிலம் முதலிலே பெய்யும் மழை ஜலத்தைக் கிரகித்து உறிஞ்சிக்கொள்ள சக்தியுள்ளதாகிறது. இது எல்லோருக்கும் தெரிந்தவிஷயமே. தரையில் விழும் மழைஜலத்தின் பரிமாணம் நல்லபயிர் வளர்ச்சிக்குப் பெரும்பாலும் போதுமானதாக வேயிருக்கிறது. ஆயினும் அதன் பெரும்பாகம் தரையைவிட்டு வெளியே வழிந்தோடுவதாலும் இறுகிக் கெட்டியாயிருக்கும் மேல்மண் தரையினின்றும் நீர் ஆவியாகப் போய்விடுவதாலும் அடிக்கடி போதாமற் போய்விடுகிறது.
நிலத்தை உழுதபிறகுகூட காற்றும் ஜலமும் சுலபமாய்ப் பிரவேசிக்கமுடியாதபடி தரையின் மேற்பாகம் இறுகிக் கெட்டியாய்விடுகிறது. அப்போது தரையை இளக்கப்படுத்துவது அவசியம். இவ்வேலைக்கு நாட்டுக் கலப்பை அல்லது பின்னால் கூறப்படும் ‘குண்டகை’ என்னும் கருவி மிக அனுகூலமானது. வெயிலில் காய்ந்து காற்றாறி நயமாக்கப்பட்ட மண்ணை இக்கருவிகள் தரைக்கு அடியில் புதையச்செய்கிறதில்லை. அப்போதைக்கப்போது முளைக்கும் களைகளைக் களைவதற்கும், மேல்த்தரையை இளக்கப்படுத்துவதற்கும் பூமியை அடிக்கடி கிளறிக்கொண்டே யிருக்கவேண்டும். சாகு படிகாலம் முழுவதும் இவ்வாறு நிலத்தின் தரையை அடிக்கடி கிளறிக்கொண்டிருப்பது நல்லது. தமிழ் பழ மொழிப்படி “ஆறுநாளில் நூறு உழவு உழுவதிலும்,நூறுநாளில் ஆறு உழவு உழுவது நலம்.” நிலத்தில் விதை விதைத்தபிறகுகூட மண்ணைக் கிளறிக்கொண்டேயிருக்கவேண்டும்.
velavan