தாவரவியல் பெயர்: Manihot esculenta,
குடும்பம்:இயுபோபியேசியே
கிழங்கு என்றாலே எல்லோருடைய நினைவிற்கும் வருவது வள்ளிக்கிழங்குதான். அதிலும் இந்தியாவில் பெயர் போன மாநிலம் கேரளா தான். திருவள்ளுவர் ஒருவேளை கேரள மாநிலத்தில் பிறந்திருந்தால் ” கிழங்கின்றி அமையாது உலகு” என எழுதியிருப்பரோ!!! தெரியவில்லை. கிழங்கில் உள்ள சத்துக்களை பற்றி யாவரும் அறிவதில்லை.
சங்க கால பாடல்களில்…
மந்த மிகுந்த தீபனம்போம் மாறாக்
கரப்பானாஞ்
சிறந்த மிகேபமுஞ் சேருங்காண் – தொந்தமாய்
மூல முளைவளரும் முட்டைச் சிறு
கிழங்கால்
ஏல வளகமின்னே யெண்
– அகத்தியர் குணபாடம்
பொருள்:
வள்ளிக்கிழங்கை அடிக்கடி உண்ணக்கூடாது. இதனால் மந்ததன்மை, பசியின்மை, கரப்பானெனும் சருமநோயும், மூலமும் உண்டாகும். எனவே அவரவர் உடல் தன்மைக்கேற்ப இக்கிழங்கை உட்கொள்ள வேண்டும்.
வேறு பெயர்கள்:
குச்சிக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, மரச்சீனி கிழங்கு
தாயகம்:தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா
அதிகமாக விளையும் இடம் : நைஜீரியா
மரவள்ளி மனிதனின் உணவு பண்டமாக இருக்கிறது.கார்போவைதரேட்டுகளைத் தருவதில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய மூலம்.
கிழங்கு வகையை சார்ந்த ஒரு தாவரமாகும். இதிலிருந்து பாயாசத்திற்கு தேவையான ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது. இக்கிழங்கில் சயனோசெனிக் குளுக்கோசைட்டு எனும் நச்சுப்பொருள் காணப்படுகிறது. இதன் அளவை பொறுத்தே கிழங்கு வகைப்படுத்தப் படுகின்றன. அவை
- இனிப்பு மரவள்ளி
- கசப்பு மரவள்ளி
கசப்பு மரவள்ளி கோன்சோ நோயை உருவாக்கும். இத் தாவரம் பூச்சிகள், விலங்குகள் போன்றவற்றை அருகில் அண்டவிடாது.
இக்கிழங்கிலிருந்து சுமார் 300 கிலோ கலோரி ஆற்றல் பெறலாம்.இது முக்கிய வாணிப பயிராக உள்ளது. இந்தியா 6% மட்டுமே கிழங்கை உற்பத்தி செய்கிறது.
மரவள்ளியை உற்பத்தி செய்யும் நாடுகள்:
பிரேசில்,கொலம்பியா, வெனின்சுலா, கியூபா, போர்ட்டோ ரிகோ, ஹைதி, டொமினிக்கன் குடியரசு, மேற்கிந்தியத் தீவுகள், நைஜீரியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகும்.
மரவள்ளி கிழங்கு பயிரிடப்படும் கண்டங்களில் 51.44 மில்லியன் ஹெக்டேர் அளவில் ஆப்பிரிக்கா முதல் இடத்திலும், ஆசியா 3.97 மில்லியன் ஹெக்டேர் அளவில் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
மரவள்ளிக் கிழங்கு இந்தியாவின் 13 மாநிலங்களில் பயிரிடப்படுகிறது என்றாலும், தென்னிந்தியாவில் குறிப்பாக, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் அதிகமாகப் பயிராகிறது. மாறிவரும் வாழ்க்கை முறை, வளைகுடா நாடுகளின் பணப்புழக்கம், பொது விநியோக முறையின் மூலம் கிடைக்கும் தானியங்கள் மற்றும் சாகுபடி முறை ஆகியவற்றின் காரணமாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரத்தில் இது முக்கிய பணப் பயிராகும்.
தொழில்கள்:
மரவள்ளிக்கிழங்கு ஸ்டார்ச்,சவ்வரிசி குளுக்கோஸ்,டெக்ஸ்ட்ரின், கோந்து, புரூக்டோஸ் சாறு ஆகியவை தயாரிக்கும் தொழில்துறை சார்ந்த தொழிற்சாலைகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக பயன்படுகிறது. இந்த தொழில்துறைகளை “வளர்ச்சி துறைகள்” என வகைப்படுத்தலாம்.
மரவள்ளி கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருள் பல்வேறு துறைகளில், குறிப்பாக பருத்தி மற்றும் சணல் ஆடைகள் உற்பத்தி, காகிதம் மற்றும கெட்டி அட்டைகள் தயாரிக்கும் தொழில் ஆகியவற்றில் பயன்படுகிறது.
மரவள்ளி கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் மாவில் உள்ள உயிரியல் மற்றும் இரசாயன மற்றும் கட்டமைப்பு பண்புகள் உள்ளதால், அதை எளிதாக திரவ குளுக்கோஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் ஆக மாற்ற முடியும். திரவ குளுக்கோஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் பரவலாக உணவு மற்றும் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த துறைகள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் உள்ளன.
உணவு மற்றும் மருந்து தயாரிக்கும் பல தொழிற்சாலைகளில் தற்போது மரவள்ளிக் கிழங்கு மாவைப் பயன் படுத்தி திரவ குளுக்கோஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
சவ்வரிசி
சவ்வரிசி, கூழ் தயாரிப்பு மற்றும் சிற்றுண்டியாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது ஒரு குழந்தை உணவாகவும் புகழ் பெற்று விளங்குகிறது. தமிழகத்தில் பல தொழிற்சாலைகளும், ஆந்திர பிரதேசத்தில் சுமார் 35-கு மேற்பட்ட தொழிற்சாலைகளும், (குடிசைத்தொழிலாக) மரவள்ளிக் கிழங்கிலிருந்து கிடைக்கும் சவ்வரிசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.
சேகோ (Sago), மலேய மொழியின் சேகு என்கிற சொல்லிலிருந்து ஆங்கிலத்துக்குச் சென்றதாகும். மெட்ரோசைலான் ஸாகு (Metroxylon Sagu) வகையைச் சார்ந்த, தெற்காசியச் சதுப்பு நிலங்களில் விளைகிற ஒருவகைப் பனைமரத்தின் ஊறலைக் (பதநீரை) காய்ச்சுவதால் கிடைக்கும் மாவுதான் சேகோ. அந்த மாவைக் கோள வடிவில் அரிசி போல் சிறிய உருண்டைகளாக்கி இந்தியாவில் விற்பனை செய்தனர். ஜாவாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் அது ஜாவா அரிசி (ஜவ்வரிசி) எனப்பட்டது.
மாப்பொருள்
மாப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் மரவள்ளிக் கிழங்கு மிக அதிகமாகப் பயன்படுகிறது. மாப்பொருள் தயாரிப்பு மற்றும் சவ்வரிசி தயாரிக்கும் 900-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகள் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் உள்ளன. குறைந்தபட்சம் இரண்டு பெரிய அளவிலான தொழிற்சாலைகள் தமிழ் நாட்டில் உள்ளன.
காகித தொழிற்சாலைகளில் அடிநிலை, நாள்காட்டி தயாரிப்பு, காகிதப் பூச்சு ஆகிய வேலைகளில் கிழங்கு மாவு பயன்படுத்தப்படுகிறது.
ஜவுளி தொழிலில் துணிகளுக்கு மொடமொடப்பான மடிப்பேற்படுத்த, இறுதி வேலைகளுக்கும் பயன்படுகிறது
உணவு தொழில்களிலும், ஒட்டக்கூடிய கெட்டியான பசை தயாரிப்பிலும் மாப்பொருள் பயன்படுகிறது.
திருவணந்தபுரத்தில் குடிசைத் தொழிலாக கோந்து மற்றும் சலவைக் கஞ்சி தயாரிக்கப்பட்டு வழக்கமான சந்தையிடல் மற்றும் விற்பனை செய்யப்படுகிறது.
வைட்டமின்கள் : விட்டமின் கே,விட்டமின் B6, விட்டமின் சி.
சத்துகள்:
- பச்சை மரவள்ளிக்கிழங்கில்…
ஆற்றல் 157 கிலோ கலோரிகள்
புரதச்சத்து 0.7 கிராம்
கொழுப்புச்சத்து 0.2 கிராம்
மாவுச்சத்து 28.2 கிராம்
நார்ச்சத்து 0.6 கிராம்
கால்சியம் 50 மி.கி.
பாஸ்பரஸ் 40 மி.கி. - மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்
ஆற்றல் 338 கிலோ கலோரிகள்
புரதச்சத்து 1.3 கிராம்
கொழுப்புச்சத்து 0.3 கிராம்
மாவுச்சத்து 82.6 கிராம்
நார்ச்சத்து 1.8 கிராம்
கால்சியம் 91 மி.கி.
பாஸ்பரஸ் 70 மி.கி.
பயன்கள்:
- 88 சதவிகித மாவுச்சத்து கொண்டுள்ள மரவள்ளிக்கிழங்கு ஏராளமான மருத்துவப் பயன்கள் கொண்டது. ஆரோக்கியமான பருமனுக்கு உதவுகிறது. ஆசிய நாடுகளில் இதைப் பதப்படுத்தி வீட்டிலேயே கஞ்சி மாவு செய்து குழந்தைகளுக்கு ஊட்டுவார்கள்.
- எளிதில் ஜீரணமாகும் இந்தக் கஞ்சி குழந்தையின் எடையை அதிகரிக்கப் பயன்படுகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க பயன்படுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. கர்ப்ப காலத்தில் குழந்தைகளுக்கு பிறவி ஊனம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
- இலையை அரைத்து மேற்பூச்சாகவோ, பற்றாகவோ போட்டால் அம்மை, தட்டம்மை, சின்னம்மை, சருமத்தில் ஏற்படும் எரிச்சல், வலி, அரிப்பு போன்ற பல சரும நோய்கள் குணமாகும்.
- மரவள்ளியை இஞ்சியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.
- காயங்கள் ஆறவும் பயன்படுகிறது.கண் சிவந்து போவதையும் தடுக்கிறது.
- ரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கப் பயன்படுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க பயன்படுகிறது.
- 40 வயதுக்கு மேல் நம் அனைவருக்கும் எலும்பின் அடர்த்தி குறையும்… முக்கியமாக பெண்களுக்கு. வாரம் ஒரு முறையாவது ஏதாவது விதத்தில் மரவள்ளிக்கிழங்கை சேர்த்துக் கொண்டால் எலும்பின் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கலாம்.
- அல்ஸீமர் எனும் ஞாபக மறதி நோயை குணப்படுத்த மரவள்ளிக்கிழங்கு பயன்படுகிறது. உடலில் நீரில் சமநிலையை சரி செய்ய உதவுகிறது.
- குளுடன் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்தாக கொடுக்கலாம்.
- இதய துடுப்பு சீராக ரத்த அழுத்தம் சரியாக இருக்க இது உதவுகிறது.
- பதப்படுத்தப்பட்ட ஜவ்வரிசி வயிற்றுப்புண் ஆற்றுவதற்கும், எடை குறைப்பதற்கும் பயன்படுகிறது. அல்சர் நோய் இருப்பவர்கள் ஜவ்வரிசி கஞ்சியை நீர்க்க காய்ச்சி 1 மணி நேர இடைவெளியில் சிறிது சிறிதாக குடித்து வர வலி குறையும். நாள்பட்ட சீதபேதி இருப்பவர்களும் பாயசம் போல மோர், உப்பு சேர்த்து குடிக்க நல்ல சக்தி கிடைக்கும். வயிற்று வலி குறையும்.
தொகுப்பு : பிரியா
lovely,,,nice information ,,
lovely ….nice
maaravallikilangu saagupadi murai solunga antha soil la panna nalla warum