Skip to content

செயல்படாத வானிலை நிலையங்கள்…

காப்பீடு வழங்குவதில் சிக்கல்!

      வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். வரப்பில் அமர்ந்து அவரோடு பேசிக்கொண்டிருந்தார், ‘காய்கறி’ கண்ணம்மா. சற்று நேரத்தில், ‘வாத்தியார் வெள்ளைச்சாமி வந்து சேர… ஏரொட்டி, காய்கறி இருவரும் வரப்பில் ஏறி மேலே வந்து மரத்தடியில் அமர்ந்துகொள்ள, அன்றைய மாநாடு ஆரம்பமானது.

ரேஷன் கடையில் ’ஆதார் அட்டை’யைப் பதியணும்னு சொல்லியிருந்தாங்க. அதனால பதியுறதுக்காகப் போயிருந்தேன். இன்னிக்கு ‘லீவு’ நாள்ங்கிறதால கூட்டம் அதிகமா இருந்தது. அதுதான் இவ்வளவு ‘லேட்’ ஆகிடுச்சு” என்று தாமாகவே தாமதத்துக்கு விளக்கம் அளித்த வாத்தியார் ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார்.

தமிழ்நாட்டுல விவசாயத்துக்கு இலவச மின்சார இணைப்பு கேட்டு கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் விண்ணப்பிச்சு இணைப்பு கிடைக்காம காத்துக்கிட்டிருக்காங்க. இதுல பாதிப்பேருக்கு மேல சுயநிதி திட்டத்துல 50 ஆயிரம் ரூபாய் வரை பணமும் கட்டியிருக் காங்களாம்.

      ஆனாலும், யாருக்கும் மின் இணைப்பு இதுவரை கொடுக்கலையாம். 15 வருஷத்துக்கு மேல இணைப்பு கிடைக்காம காத்துக்கிட்டிருக்கிற விவசாயிகளும் இருக்காங்களாம். இதுக்காக விவசாயிகள் சங்கம் சார்பா பல போராட்டங்களையும் நடத்தியிருக்காங்க. சமீபத்துல இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்துல ஆர்ப்பாட்டம் நடத்தினாங்க” என்றார், வாத்தியார்.

மழையும் ஒழுங்கா கிடைக்கிறதில்லை. காவிரி தண்ணி, முல்லை பெரியாறு தண்ணியும் கிடைக்கிறதில்லை. கிணறுல, ‘போர்’ல இருக்குற தண்ணியை எடுத்து விவசாயம் செய்யறதுக்கு இலவச கரன்ட்டையும் அரசாங்கம் கொடுக்கிறதில்லை. இப்படி இருந்தா விவசாயிங்க எப்படி பொழைப்பு நடத்துறதுனே தெரியலை” என்று வருத்தப்பட்டார், ஏரோட்டி.

       அதைத் தலையாட்டி ஆமோதித்த வாத்தியார் அடுத்த செய்தியை ஆரம்பித்தார். “ சிவகங்கை மாவட்டம், பட்டமங்கலம் பக்கத்துல ‘வெளியாரி,னு ஒரு கிராமம் இருக்குது. அந்த ஊர்ல இருக்குற விரன் கோயில்ல’வளவுக்காளை’னு ஒரு ஜல்லிக்கட்டுக் காளையை 25 வருஷமா வளத்துட்டு இருந்தாக. இந்தக் காளை நிறைய ஜல்லிக்கட்டுகள்ல கலந்துக்கிட்டு பரிசு வாங்கியிருக்குதாம். அதனால ஊர் மக்கள் எல்லாருக்குமே அந்தக் காளை மேல தனிப்பிரியமாம். இப்போ அது இறந்து போயிடுச்சாம். அதோட உடலை கருப்பர் கோவில்கிட்ட வெச்சு ஊர் மக்கள் எல்லாரும் அஞ்சலி செலுத்தினாங்களாம். ஊர்வலமா எடுத்துட்டுப் போய் தகனமும் செஞ்சுக்காங்களாம். காளை இறந்தது, ஊரையே சோகத்துல ஆழ்த்திச்சாம்” என்றார்.

      அதற்கு ஆச்சர்யம் காட்டிய காய்கறி, கூடையில் இருந்து ஆளுக்கு இரண்டு பூவன் வாழைப்பழங்களை எடுத்துக் கொடுத்தார். அதைச் சாப்பிட்டுக் கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், வாத்தியார்.

தமிழ்நாட்டுல தேனி மாவட்டம், கேரளாவுல இடுக்கி மாவட்ட பகுதிகள்ல விளையுற ஏலக்காய்க்கு 2011-ம் வருஷத்துக்குப் பிறகு இப்போதான் அதிக விலை கிடைக்குதாம். கிலோ 600 ரூபாய், 700 ரூபாய்னுதான் இதுவரை விற்பனையாகிட்டு இருந்துச்சாம். இப்போதான் ஒரு கிலோ ஆயிரம் ரூபாயைத் தாண்டியிருக்குதாம். ஆனா, விளைச்சல் ரொம்பக் குறைவா இருக்குறதால விலை கிடைச்சும் பலன் இல்லையாம். இந்த வருஷம் மழை ரொம்பக் குறைஞ்சு போனதுதான் விளைச்சல் குறைஞ்சதுக்குக் காரணமாம்” என்றார்.

விலை இருக்குறப்போ விளைச்சல் இருக்காது. விளைச்சல் இருக்குறப்போ விலை கிடைக்காது. இது விவசாயிகளுக்கு வாடிக்கையான விஷயம்தானே” என்ற ஏரோட்டி, அடுத்த செய்திக்குத் தாவினார்.

கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை மூணையும் 2011-ம் வருஷம் விரிவாக்கம் பண்ணுனாங்க. அதுக்காக ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டினாங்க. மரத்தை வெட்டினா அதுக்கு பதிலா புது கன்னுகளை நட்டு வளர்க்கணும்னு அரசு விதி இருக்கு. ஆனா, விரிவாக்கம்னு வேகமா வெட்டிட்டு திரும்ப கன்னுகளை நடுறதுக்கு நெடுஞ்சாலைத்துறை ஆர்வம் காட்டலை.

       ஒரு மரம் வெட்டினால், அதுக்கு பதிலா 10 மரக்கன்றுக்களை நட்டு வளர்க்கணும்னு நீதிமன்ற தீர்ப்பும் இருக்கு. இதையும் நெடுஞ்சாலைத்துறை கண்டுக்கலை. நெடுஞ்சாலைத்துறை ஏன் நடவு செய்யலைனு வனத்துறையும் கேள்வி கேக்கலை. இது தொடர்பா, .தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செஞ்சிருக்கார். அதுக்கு நெடுஞ்சாலைத்துறையும், வனத்துறையும் பதில் கொடுக்கணும்னு கோர்ட் உத்தரவு போட்டிருக்கு. இதுக்கு என்ன பதில் கொடுக்குறதுனு ரெண்டு துறை அதிகாரிகளும் மண்டையைப் பிய்ச்சுக்கிட்டு இருக்காங்களாம்” என்றார்.

அரசு அதிகாரிகள் எப்போ சட்டத்தை மதிச்சு நடந்திருக்காங்க..?” என்று அங்கலாய்த்த வாத்தியார், அடுத்த செய்தியை ஆரம்பித்தார்.

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மூலமா தமிழ்நாட்டுல வட்டார வாரியா 385 தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கு. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துல செயல்படுற காலநிலை ஆராய்ச்சி மையம்தான் இந்த வானிலை மையங்களை கண்காணிக்குது. இந்த வானிலை நிலையங்கள்ல இருந்து பத்து வகையான வேளாண் வானிலை காரணிகளைச் சேகரிச்சு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இணையதளத்துல வெளியிடுறாங்க.

      இந்த வானிலை நிலையங்களை பராமரிக்கிறதுக்கான தொகையை தமிழக அரசு பல்கலைக்கழகத்துக்கு வருஷாவருஷம் கொடுத்துடும், ஆனா, சில வருஷங்களா தமிழக அரசு இதுக்கான நிதியை ஒதுக்கவே இல்லையாம். இதனால, மழைமானி கருவிகள் சேதமாகி இருக்குறதாலயும் முறையான பராமரிப்பு இல்லாததாலயும்…

        இப்போ 132 வானிலை நிலையங்கள் செயல்பாட்டுல இல்லையாம். இந்த நிலையங்கள் செயல்படாம இருக்குறதால, காப்பீடுத் திட்டங்களை கணக்கீடு செய்றது, வேளாண் திட்டங்களை வரையறுக்குறது எல்லாத்துலயும் பல குளறுபடிகள் நடக்குதாம். முக்கியமா பிரதமர் வேளாண் காப்பீடுத் திட்டத்துக்கு, வட்டார வானிலை மையங்களோட அறிக்கை அடிப்படையில்தான் இழப்பீடு கணக்கிடுவாங்களா. அதனால், உடனடியா நிதி ஒதுக்கி வானிலை மையங்களை சரி செய்யலைனா விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்குறதுல பெரிய குளறுபடி வர்றதுக்கு வாய்ப்பு இருக்குதாம்” என்றார்.

       அந்த நேரத்தில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், குரல் கொடுத்து ஏரோட்டியை அழைக்க.. எழுந்து ஒடினார், ஏரோட்டி. அதோடு அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.

பச்சைத் துண்டு போராளி!

      கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி, தமிழக விவசாயிகள்சங்கத்தின் மாநிலத்தலைவர் டாக்டர் சிவசாமி, காலமானார். 83 வயதான சிவசாமி, கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை அடுத்துள்ள மத்தம்பாளையம் கிராமத்தில் பிறந்தவர். எம்.பி.பி.எஸ். படித்து முடித்ததும், சிறிது காலம் மருத்துவ பணியில் இருந்தார்.

       1970-ம் ஆண்டு முதல் நாராயணசாமி நாயுடு தலைமையிலான தமிழக விவசாயிகள் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தமிழகத்தில் பல்வேறு விவசாயப்போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் இந்த பச்சைத்துண்டு போராளி.

நன்றி

மண்வாசனை

Leave a Reply

editor news

editor news