Site icon Vivasayam | விவசாயம்

மணல் கொள்ளை

        தமிழகத்தின் நீர்வளமும், பாசன கட்டமைப்பும் அரசின் புறக்கணிப்பாலும், அதிகாரிகளின் ஒத்துழைப்போடு நடக்கும் மணல் கொள்ளையாலும், நீதிமன்றங்களின் பாராமுகத்தாலும் எப்படி அழிக்கப்பட்டு வருகின்றது என்றும் பார்ப்போம்.

         குளங்கள் இல்லாத ஊர்களை தமிழ்நாட்டில் காண்பது அரிது. குளங்களுக்கு நீரானது மழைநீரினால் மட்டுமல்ல ஆறுகளின் நீராலும் நிரப்பப்படுகிறது. இவ்வாறு பல சிறிய கால்வாய்களால் இணைக்கப்பட்டது தான் ஆறுகள். இந்த ஆற்று நீரானது ஆற்றில் தொடங்கி குளங்களுக்கு சென்று பிறகு மீண்டும் ஆற்றில் கலந்து பின் கடலை சென்றடைகிறது.

         ஆற்றில் மணல் அள்ளும் போது ஆழம் அதிகரித்து விடுவதால் கால்வாய்கள் வழியாக நீர் செல்ல முடியாமல் போகும். இதனால் குளம் வறண்டு காணப்படும். இதில் மணற்கொள்ளையர்களுக்கு பெரும் பங்கு உண்டு.

இந்தியாவில் உள்ள சட்டங்கள்

  • சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் சீரமைப்பு), 1957 சட்டம்

ஆற்று மணல் எடுக்கப்படும் இடங்கள்

அரசால் மணல் அள்ள அனுமதிக்கப்பட்டுள்ள இடங்கள்

  • கொள்ளிடம் ஆற்றுப் படுகை (தஞ்சை, நாகை, அரியலூர் மாவட்டங்கள்)

  • காவிரி ஆற்றுப் படுகை (கரூர், திருச்சி மாவட்டங்கள்)

  • குண்டாறு ஆற்றுப் படுகை (விருதுநகர் மாவட்டம்)

நீதி மன்ற தலையீடு

        தமிழ்நாடு முழுவதும் நடக்கும் கிரானைட் முறைகேட்டையும், கனிம மணல் கொள்ளையையும் குறித்து விசாரிப்பதற்காக ஐ..எஸ். அதிகாரி உ. சகாயம் தலைமையில்விசாரணைக்குழு ஒன்றை அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

மணல் கொள்ளைக்கு நிரந்தர தடை வருமா?

எதிர்பார்ப்பில் ஸ்ரீவைகுண்டம் அணை பாசன விவசாயிகள்!

        தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணை நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தூர்வாரப்படாமல் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி, அணையைத் தூர்வார உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று, தி.மு.க மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

        இதன் விளைவாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற்று அணையைத் தூர்வார உத்தரவிட்டது பசுமைத் தீர்ப்பாயம். இதன்படி கடந்த 2015-ம் ஆண்டு ஜீலை முதல் ஸ்ரீவைகுண்டம் அணையைத் தூர்வாரும் பணி தொடங்கியது. ஆனால், ‘தூர்வாருகிறோம்’ என்ற பெயரில் மணல் கொள்ளைதான் ஜரூராக நடந்து வருகிறது.

         இந்த மணல் கொள்ளையை எதிர்த்து, ஸ்ரீவைகுண்டம் அணை பாதுகாப்பு போராட்டக்குழுவின் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணுவும், போராட்டக்குழுவின் செயலாளர் பாலசுப்பிரமணியனும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு, ஆகஸ்ட் 13-ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தீர்ப்பாயம், “செப்டம்பர் 27-ம் தேதிவரை அணையைத் தூர்வார வேண்டாம்” என உத்தரவிட்டுள்ளது.

           இந்த உத்தரவைத் தொடர்ந்து, தூர்வாரும் பெயரில் மணல் அள்ளும் பணி நிறுத்தப்பட்டதோடு, மணலை அள்ளிச்செல்ல அமைக்கப் பட்டிருந்த தற்காலிக பாதையும் அடைக்கப் பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், ’இது தற்காலிக சந்தோஷம் மட்டுமே, நிரந்தர மாக மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ எனக் கோரிக்கை வைக்கிறார்கள் ஸ்ரீவைகுண்டம் அணை பாசன விவசாயிகள்.

நிரந்தர தடை வேண்டும்!

          இது தொடர்பாக, அணை பாதுகாப்பு போராட்டக்குழுவின் தலைவர் நல்லகண்ணுவிடம் பேசினோம், “அணையைத் தூர்வாரும் போது, முகப்பு பகுதியில் இருந்து தூர்வார வேண்டும். ஆனால், கடைசி பகுதியில் இருந்து முகப்பு பகுதி நோக்கித் தூர்வாரி வருகிறார்கள். ஏனென்றால், முகப்பு பகுதியில் வண்டல் மண் இருக்கும். கடைசி பகுதியில்தான் மணல் இருக்கும். இவர்கள் நோக்கம், ‘தூர்வாருகிறோம்’ என்ற பெயரில் மணலைக் கொள்ளையடிப்பதுதான். இந்த அணை மூலம் 46 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது.

           இப்போது 25 ஆயிரம் ஏக்கராகவும், முப்போக விவசாயம் ஒரே போகமாகவும் குறைந்திருக்கிறது. மணல் கொள்ளையை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடத்தியும் எந்தப் பலனும் இல்லை. அதனால்தான், பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில், எங்களையும் (போராட்டக்குழு) இணைத்துக் கொண்டோம். இந்த வழக்கில், செப்டம்பர் 27-ம் தேதி வரை தூர்வார தடை விதித்திருக்கிறது தீர்ப்பாயம். இனியும் மணல் கொள்ளை தொடர்ந்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தித் தடுப்போம்” என்றார் ஆதங்கத்துடன்.

            போராட்டக்குழுவின் செயலாளர் ஸ்ரீவைக்குண்டத்தைச் சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியன், “தினமும் 200 லாரிகள் மணலை அள்ளிக்கிட்டுப் போகுது. ஆனா, 30 முதல் 50 லாரிகள் தான் போன மாதிரி கணக்கு காட்டுறாங்க. நாங்க லாரிகளை சிறைபிடிச்சும் எந்த நடவடிக்கையும் இல்ல. சுத்து வட்டாரத்துல இருக்குற சுமார் 500 கிராமங்களுக்கு குடிதண்ணீர், இந்த அணையில் இருக்குற உறைகிணறுகள்ல இருந்துதான் போகுது. பசுமைத் தீர்ப்பாயம் விதிச்ச நிபந்தனைகள்ல முக்கியமான நிபந்தனையே, உறைகிணற்றைச் சுத்தி 500 மீட்டர் தூரத்துக்கு மணல் எடுக்கக்கூடாதுங்கிறதுதான். ஆனா, அதையும் மீறி உறை கிணறைச் சுத்தி 5 அடிக்கூட இடைவெளி விடாம மணலைத் தோண்டி எடுத்திருக்காங்க. இடைக்காலத்தடை விதித்த தீர்ப்பாயம், இந்த வழக்கில் நிரந்தரமா தடை விதிக்கணும்” என்றார்.

         தூர்வாரும் பெயரில் நடத்தப்பட்ட மணல் கொள்ளை, இனியும் நீடித்தால் தடுப்பணைத் தாண்டி தாமிரபரணி ஆற்றின் தடம் தெரியாமல் போய்விடும்.

ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

         அணை பாதுகாப்பு போராட்டக்குழு சார்பில் பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்களில் ஒருவரான நாகசைலாவிடம் பேசினோம், “எங்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்ட நீதிபதிகள் குழு, ‘இதுவரை ஸ்ரீவைகுண்டம் அணை பகுதியில் நடைபெற்று வந்த தூர்வாரும் பணி இத்துடன் நிறுத்தப்பட வேண்டும்… இதுவரை அணைப்பகுதியில் நடைபெற்ற பணிகள் குறித்து விரிவான ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த அறிக்கையில் இதுவரை எவ்வளவு மணல் எடுக்கப்பட்டது. அது எங்குக் கொட்டி வைக்கப்பட்டுள்ளது, அரசு விதிகளின்படி விற்பனை செய்யப்பட்டதா என்பது குறித்து விபரங்கள் இடம்பெற வேண்டும்’ எனக் கூறியதோடு, செப்டம்பர் 27-ம் தேதி வரை தூர்வார இடைக்காலத் தடை விதித்துள்ளார்கள். செப்டம்பர் 27-ம் தேதி மறுவிசாரணைக்கு வரும் இவ்வழக்கில் அரசு தாக்கல் செய்யும் அறிக்கையைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கையை அறிய முடியும்” என்றார்.

விளைவுகள்

  • கடல் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்விடங்களில் கட்டுப்பாடற்ற மணல் எடுக்க இருந்து சரி செய்ய முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன

  • பல தீவுகள் இல்லாமலே போய் விட்டன

  • நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பிரச்சினையும், உழவுத் தொழில் பாதிக்கப்படுவதாக அறியப்படுகிறது.

  • கடலோரங்களில் மணல் அள்ளப்படுவதால் கடல்நீர் உள்ளே புகுந்து மீனவர் குடியிருப்புகள் பாதிப்புக்குள்ளாவதும் நடைபெறுகிறது.

  • கடற்கரையில் மணல் அகழ்வினால் வெப்ப மண்டல சூறாவளிகளும் சுனாமியுடன் தொடர்புடைய அலைகளும் புயலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பாதுகாப்பு அற்ற நிலையை ஏற்படுத்துகின்றன.

Exit mobile version