Site icon Vivasayam | விவசாயம்

பற்றி எரிகிறது மாட்டின் தீவனம்!

       இந்த ஆண்டு மே மாதம் முழுவதும் பத்திரிகைகளையும் டி.வி.சேனல்களையும் பற்றிக் கொண்ட விஷயம், பசுமாடுகள்.

       இந்திய வரலாறைச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்கும்போது, ஆநிறைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த இந்தியர்கள் உணவு உற்பத்தியில் ஈடுபட்டு விவசாயப் பொருளாதாரத்தை நோக்கி அடி எடுத்து வைத்தபோதுதான் கோமாதா குலமாதாவானது. வரலாற்று ஆசிரியர்கள் இந்திய வரலாறை ரிக்வேத காலத்திலிருந்து தொடங்குவதாகக் கூறுவதுண்டு. ரிக்வேத காலத்தைப் பற்றி வேதங்கள் மூலம் அறியப்படும் ஒரு செய்தி உணவு உற்பத்தி தொடக்க நிலையிலிருந்துவே.

        காடுகளை அழித்துக் கழனிகளை உருவாக்கப் போதிய இரும்பு ஆயுதங்கள் இல்லை. ஆநிறைகளை அடிப்படையாகப் கொண்ட மனிதக் கூட்டம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிய பயணத்தை மேற்கொண்டபோது, அதாவது சிந்துவிலிருந்து கங்கை வந்து குடியேற காடுகளை அக்னியால் எரித்து சாலைகள் உருவாக்கப்பட்டது. குதிரை பூட்டிய ரதம் செல்லுமளவுக்கு அகலம் வேண்டியிருந்தது. அந்தக்காலத்தில் மரங்களை வேருடன் பிடுங்கித் தூருடன் எறிவதற்கு ஜே.சி.பி. போன்ற இயந்திர நுட்பங்கள் இல்லாதபோது, அக்னியே பிரதானம்.

      ஆகவே வைதீக காலத்தில் விவசாயம் போதிய வளர்ச்சி இல்லாமல் இருந்ததை நினைவுபடுத்துவதாக நாம் வேதங்களைக் புரிந்து கொள்வது நன்று. ஆநிரைப் பொருளாதாரம் விவசாய உற்பத்திப் பொருளாதாரமாக மாற்றியமைக்கும் ஒரு சக்தியாக இருந்ததற்கு கேள்வித் தீ உதாரணம். காடுகளை அழித்துக் கழனிகளாக மாற்றும் உபகரணமாக விளங்கியது தீ. ஆகவே “தீ” பஞ்சபூதங்களுள் ஒன்றாக அன்று கருதப்பட்டது.

      இன்று அந்த இடம் சூரிய ஒளி தரும் பகலவனுக்கு வழங்கப்படுகிறது. போதிய உணவு உற்பத்தி இல்லாத வைதீகப் பொருளாதாரத்தில் இறைச்சி உண்பதைப் பாவமாக ஏற்கப்படவில்லை என்பதையும் உய்த்துணரலாம். வேதங்களும் வேதாந்தங்களும் பல பெரிய பெரிய தொகுப்புகளாக எழுத்து வடிவம் பெற்றுள்ளன.

       பஞ்சபூத வழிபாடுகளையும், இயற்கை வழிபாட்டையும் வலியுறுத்தும் பாடல்களைப் பிரித்துவிட்டு உலகியல் விஷயங்கள் தொடர்பாக வேதாந்தங்களில் இறைச்சி உணவு போற்றப்பட்டதையும், வேள்வியில் இடப்பட்டு அவற்றைப் பிரசாதமாக வழங்கப்பட்ட பலவகை மிருகங்களின் குறிப்பை உணர்த்தும் செய்தி வைதீக காலத்தில் இறைச்சி உணவுக்குத் தடை இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டுமே தவிர ஒரு குறிப்பிட்ட ஜாதியை இழிவு படுத்தும் ஆயுதமாகப் பயன்படுத்துவது நேர்மை அல்ல. புத்தர் அவதரித்து புலால் மறுத்தார்.

      மகாவீரர் என்ற ஜைன முனிவரும் புலால் மறுத்தார். புத்தர், மகாவீரர் கருத்துக்களை ஆட்கொண்ட பிற்கால இந்துமதமும் புலால் உணவு உண்பதை மறுத்துள்ளது.

      இந்திய வரலாறில் புத்தரின் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு. பொருளாதார அடிப்படையில், மக்களின் உணவுத் தேவை பெருகியதால் விவசாய சாகுபடி நிலப்பரப்பு கூட வேண்டிய கட்டாயம் எழுந்தது. இதுநாள் வரை சாகுபடி செய்யாமல் இயற்கையில் தானாகவே விளைந்ததை உண்ணும் உணவு சேகரிப்புக்கு மேல், உழுதுண்டு வாழ்ந்து உணவு உற்பத்தியை உயர்த்தி மக்களின் பசிப்பிணியைப் போக்க வேண்டும் என்பதே புத்தனின் தத்துவம்.

        இது நாள் வரை இந்தியா என்றால் அது சிந்து நதி சமவெளி என்ற நினைப்பு மாறி கங்கைச் சமவெளியைச் செழிப்பாக்கப் பிறந்தவராக புத்தர் தோன்றினார். புத்தர் வாழ்ந்த நாளில்தான் பழங்குடி ராஜ்ஜியங்கள் முடியரசுகளாக மாறி மகதமும் கோசலமும் பெரிய ராஜ்ஜியங்களாக மலர்ந்தன. பழம்பெரும் நகரங்களாக பாடலி புத்திரம், அயோத்தியா, காசி போன்றவை தோன்றின. இப்படிப்பட்ட நகரங்கள் தோன்ற வேண்டுமானால் உணவு உற்பத்தியை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

      அவ்வாறு உணவு உற்பத்தியை உயர்த்தும் பணிக்கு உழவு மாடுகள் வேண்டியிருந்த சூழ்நிலையில் மாட்டு இறைச்சிக்குத் தடை வந்தது. யாக சாலைகளில் உயிர்பலி நிறுத்தப்பட்ட பின்னணியிலும், உணவுப் பொருளாதாரம் வளர்ச்சிப் பின்னணியிலும் புத்தரும் மகாவீரரும் நின்றதை வரலாறு உணர்த்துகிறது.

       இவ்வாறு உணவு உற்பத்தியை மையமிட்ட புதிய முடியாட்சியின் தேவையை அனுசரித்து புத்தரின் கொள்கையை ஏற்று உபநிஷதங்கள் தோன்றின. கி.மு ஆறாம் நூற்றாண்டு இந்தியத் தத்துவங்களின் பொற்காலம் எனலாம்.

        புத்தர் மனத்தில் உதித்த பல கேள்விகள் உபநிஷதங்களைத் தோற்றுவித்த பல மகான்களுக்கும் தோன்றி, ஆன்மிக அறிவும் வளம் பெற்றது. எல்லாவற்றுக்கும் அடிப்படை ஒரு சமூகம் உணவு உற்பத்தியை நோக்கி முன்னேறியது என்பதே உண்மை. இந்தக் கால கட்டத்தில்தான் பசு தெய்வமாகப் போற்றப்பட்டது. உழவுத் தொழிலுக்கு வேண்டிய காளைகளை பசுவால்தானே வழங்க முடியும். இந்த நல்லெண்ணத்தில் தான்

கோமாதா எங்கள் குலமாதா”

என்ற கருத்து வளர்ந்தது. புராணங்கள் மூலம் தெய்வங்களாகப்பட்டன. கோமாதா தோன்றியதாகக் கூறப்படும் கதையில்,. “தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது நந்தினி, சுசீலை, பத்திரை, சுரபி, சுமனை ஆகிய ஐந்து பசுக்களும் காமதேனுவின் அம்சங்களாக வெளிப்பட்டன.

        இன்றுள்ள பசுக்கள் இவற்றின் சந்ததிகளாக நம்பப்பட்டு கோபூஜை நிகழ்கிறது. சம்ஸ்கிருதத்தில் “கோ”(GO)என்ற உச்சரிப்பு இறைவனுக்கு நிகரான அரசனை அர்த்தப்படுத்தும் அதே “கோ” பசுவையும் குறிக்கிறது. அப்படிப்பட்ட பசுக்களை நாம் பட்டினி போடலாகாது.

       உழவுத் தொழிலுக்கு வேண்டிய காளைகளை பசுவால்தானே வழங்க முடியும். இந்த நல்லெண்ணத்தில் தான் “கோமாதா எங்கள் குலமாதா” என்ற கருத்து வளர்ந்தது.

       புத்தர் காலம் தொடங்கி விவசாயத்தில் டிராக்டர், டில்லர், ஹார்வஸ்டர், சீட்லர் என்று இயந்திரங்கள் தோன்றியதால் விவசாயத்தில் படிப்படியாக உழவுமாடுகளின் தேவை குறைந்தது. அதேசமயம் பால் தரும் பசுக்களின் தேவை உயர்ந்துள்ளது. உழவுக்காக இல்லாவிட்டாலும் இன்று பாலின் தேவை உயர்ந்துள்ளது.

      அதே சமயம் பசுக்களின் தீவனப்பற்றாக்குறை உயர்ந்து வருகிறது. பசுக்களுக்கு வழங்க வேண்டிய தீவனம் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் எரிக்கப்பட்டு சுற்றுச் சூழலையும் பாதிக்கிறது. வானத்தில் புகை சூழ்ந்து புவியை உஷ்ணப்படுத்துவதுடன், இதர மாநிலங்களில் தேவையாயுள்ள தீவனத்தை எரியூட்டுவது எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை.

      நம்மில் பலர், தென் மாநிலங்களில்தான் நெல் விளைவதாக எண்ணுகின்றனர். அது முற்றிலும் தவறு. வட மாநிலங்களில் நெல் ஒரு முக்கிய வணிகப் பயிர் . கோதுமை ஒரு முக்கிய உணவு என்பதால், விளைந்த நெல் அவ்வளவையுமே உணவுகார்ப்பரேஷன் கொள்முதல் செய்கிறது.

       வடமாநிலங்களில் கரீஃப் பருவத்தில் நெல்லும், ரபி பருவத்தில் கோதுமையையும் சாகுபடி செய்வார்கள். நமது குறுவைப் பட்டம் வடக்கே கரிஃப் பட்டம். நெல் அறுவடை முடிந்த சூட்டோடு ஒரு குறுகிய காலத்தில் கோதுமை பயிரிட வேண்டிய சூழ்நிலையில், அறுவடை செய்த நெல்லின் தாள்களான வைக்கோலை அப்படியே தீயிட்டுக் கொளுத்தி விடுகிறார்கள்.

       அவர்களின் மாடுகள் நெல்வழங்கும் வைக்கோலை உண்பது இல்லையாம். கோதுமை வைக்கோலைத்தான் உண்கிறதாம்.

        அரிசியை விளைவிக்கும் வட மாநிலங்களின் வைக்கோல் எரிப்பு காரணமாக, டெல்லி நகர மக்கள் மூச்சுத் திணறி அலர்ஜியில் அவதியுவதுடன் சுற்றுச்சூழல் நெறிக்கு முரணாக புவி வெப்பமாகிக் காலநிலை மாற்றத்திற்கும் காரணியாவதாகப் பல்வேறு பொதுநல வழக்குகள் டெல்லி நீதிமன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும் குவிந்த வண்ணம் உள்ளன.

       காரணம், மோட்டார் வாகனப் புகை, தொழிற்சாலைப் புகை போன்ற பலவகைப் புகைகளைக் காட்டிலும் வைக்கோலை எரிக்கும் புகையின் வீரியம் 17 மடங்கு அதிகம் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. டெல்லி மாநிலத்தில் மட்டும் பொது மக்கள் எதிர்ப்பு வலுவடைந்தால் சற்று கட்டுப்பட்டாலும், பஞ்சாப், ஹரியானா, .பி., .பி., சதீஸ்கர் போன்ற மாநிலங்களில் வைக்கோல் எரிப்பு ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து செல்வதாக வானத்தில் கோள்கள் (Sa-talites) மூலம் எடுத்த படங்கள் நீருபிக்கின்றன.

      நீதிமன்ற உத்தரவுக்கு வடமாநில விவசாயிகள் கட்டுப்படுவதாகத் தெரியவில்லை. ரோட்டவேட்டர் கலப்பை உழவு செய்து மண்ணோடு மடித்து உழும்படி வேளாந்துறை உத்தரவிட்டாலும், அதற்கெல்லாம் 5000, 10000 ரூபாய் பணச் செலவு. “ஒரு ரூபாய் செலவில் ஒரு தீப்பெட்டி போதும், எங்களுக்கு” என்று விவசாயிகள் தரப்பில் பதில் வருகிறது. எந்த அளவுக்கு வைக்கோல் எரிக்கப்படுகிறது என்ற புள்ளி விவரம் நம்மை மிகவும் துக்கத்தில் ஆழ்த்துகிறது.

      “இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம், புதுடெல்லி வழங்கும் புள்ளிவிவர அடிப்படையில், இந்தியாவின் ஒட்டுமொத்த அறுவடைக்கழிவு 62 கோடி டன்கள். இவற்றில் 16 சதவீதம் அதாவது சுமார் 10 கோடி டன்கள் அறுவடை செய்த இடத்திலேயே எரிக்கப்படுகிறது.

       இதில் எரிக்கப்படும் நெல் வைக்கோல் 6 கோடி டன்கள் . கோதுமை வைக்கோல் 2.2 கோடி டன்கள். மீதி கரும்புச் சோகை முதலியன 1.8 கோடி டன்கள். பல மாநிலங்களில் வைக்கோலுக்கு தட்டுப்பாடு உள்ள சூழ்நிலையில், வைக்கோலைத் தீயிட்டுக் கொளுத்துவது பாவம். பல பசுக்களைக் காப்பாற்றக் கூடிய புண்ணியம் எரிக்கப்படுகிறது.

       எவ்வளவுதான் பச்சைப் புல் வழங்கினாலும் பசுவின் இரவுப் பசிக்கு வைக்கோல் அல்லது உலர்ந்த சோளத்தட்டை வழங்கினால்தான், பால் மாடுகளுக்குத் தேவையான பொட்டாசியம் முழு அளவில் கிட்டும். சுத்தமாகப் பச்சைப்புல் இல்லாவிட்டால் கூட உலர்ந்த வைக்கோல் புல் வழங்கினால் கூட, பசுக்கள் உயிருடன் வாழும். மிகவும் அடிப்படையான பசு உணவைத் தீயிட்டு அழிப்பது பசுமாடுகளைக் கொலை செய்வதற்குச் சமம்.

       அதே சமயம் நெடுந்தொலைவிலிருந்து மாட்டுக்குத் தேவையான உலர்ந்த புல்லைக் கொண்டுவர மலிவான போக்குவரத்து வேண்டும். அப்படிப்பட்ட மலிவான போக்குவரத்தை நாம் கங்கை குமரி நீர்வழிச் சாலையை உருவாக்கும் போது பயனடைவோம்.

ஆவினத்தின் உணவைத் தீயிட்டுக் கொளுத்தும் மடமையைக் கொளுத்துவோம்.

நன்றி

பசுமை விகடன்

Exit mobile version