Site icon Vivasayam | விவசாயம்

கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்!

 

ஒவ்வொரு பயணமும் விலைமதிப்பில்லாத விஷயங்களைக் கற்றுக்கொடுக்குது. ஒருமுறை கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு பன்னாட்டுப் பயிலரங்குக்குப் போயிருந்தபோது, சாயங்கால நேரத்தை உபயோகமாகக் கழிக்க, கர்நாடக நண்பர்கிட்ட ஆலோசனை கேட்டேன். ‘நிலக்கடலைத் திருவிழாவுக்குப் போகலாம் வாங்க’னு கூப்பிட்டாரு. நம்ம ஊர்ல நெல் திருவிழா, சிறுதானியத் திருவிழாவைத்தான் பார்த்திருக்கோம். ஆனா, நிலக்கடலைத் திருவிழா சங்கதி புதுசா தெரியவே, உடனே வண்டி ஏறி நிலக்கடலைத் திருவிழா நடந்த இடத்துக்குப் போனோம்.

பெங்களூரு, பசவனகுடியில் கவிகங்காதேஸ்வர சுவாமி கோயில் வாசல்ல திருவிழா களைகட்டியிருந்தது. கண்ணுக்கு எட்டின வரையிலும், விதவிதமான நிலக்கடலை ரகங்களைக் குவிச்சு விற்பனை செய்துகிட்டிருந்தாங்க. நிலக்கடலையை வாங்கிக் கொறிச்சபடி, இந்தத் திருவிழா எப்படி உருவானதுனு கர்நாடக நண்பர்கிட்ட நண்பர்கிட்ட கேட்டேன்.

‘இந்தத் திருவிழாவிற்கென ஒரு வரலாறு உண்டு. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. கோவா உள்ளிட்ட பகுதிகளில் போர்ச்சுகீசியர்கள் ஆட்சி செய்தபோது, கர்நாடகப் பகுதிகளுக்கு வியாபாரத்துக்காக வருவது வழக்கம். அப்படி ஒருமுறை வந்த வியாபாரிகள் குழு நிலக்கடலையை எடுத்து வந்து இந்தப் பசவனகுடி, நந்தி சிலை அருகில் வைத்து விற்பனை செய்துள்ளார்கள். அதை வாங்கிச்சென்ற சுற்றுவட்டார விவசாயிகள், நிலக்கடலைச் சாகுபடி செய்து நல்ல விளைச்சல் எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இதனால், பலருக்கும் வாழ்வில் நல்ல நிலைமை ஏற்பட்டுள்ளது. தங்களது வாழ்க்கையை மாற்றிய நிலக்கடலைக்குத் திருவிழா எடுக்க முடிவு செய்த விவசாயிகள், தாங்கள் நிலக்கடலை விதை வாங்கிய பசவனகுடியில் உள்ள கவிகங்காதேஸ்வர சுவாமி கோயில் வளாகத்திலேயே திருவிழாவை நடத்தத் தொடங்கினார்கள் என்று செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படுகின்றன.

இத்துடன், ஆன்மிக ரீதியான ஏராளமான கதைகளும் இந்த நிலக்கடலைத் திருவிழா குறித்து உலா வருகின்றன. ஆனால், எது எப்படியோ நிலக்கடலையைப் பெருமைப்படுத்தவே இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது. கன்னட மாதமான கார்த்திக் கடைசி வாரத்தில் மூன்று நாள்கள் இந்தத் திருவிழா நடைபெறும். அதாவது, ஆங்கில மாதத்தின் நவம்பர் கடைசி வாரத்தில், இந்த விழாவைக் கொண்டாடுவது வழக்கம். சந்தையில் கிடைக்கும் விலையைவிட, இங்கு விலை குறைவாக இருக்கும். காரணம், விற்பனை செய்வது வியாபாரிகள் அல்ல; நிலக்கடலைச் சாகுபடி செய்யும் விவசாயிகள். மேலும், நிலக்கடலைக்கு நன்றி சொல்லும் விழா என்பதால் அதிக லாபத்துக்கு விற்பனை செய்யமாட்டார்கள்.

பெங்களூருவைச் சுற்றியுள்ள ராம் நகர், மண்டியா, மைசூர், பிடுதி, சாம்ராஜ் நகர் ஆகிய கர்நாடகப் பகுதிகளிலிருந்தும் ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய தமிழகப் பகுதிகளிலிருந்தும் திருவிழாவுக்கு விவசாயிகள் நிலக்கடலையைக் கொண்டுவருகிறார்கள்.

மலைபோலக் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலக்கடலையைச் சுவைத்துப் பார்த்து மக்கள் வாங்கிச் செல்கிறார்கள். இந்தத் திருவிழாவை முன்னிட்டுப் பெரும் எண்ணிக்கையிலான சில்லறை வியாபாரிகளும் எண்ணெய் மண்டி வியாபாரிகளும் மூட்டைக் கணக்கில் தரமான நிலக்கடலையைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் நிலக்கடலைச் சாகுபடி செய்யும் விவசாயிகள் தரமான விதை நிலக்கடலையை வாங்க, இந்தத் திருவிழாவுக்குத்தான் வருகிறார்கள். ஆக, இந்தத் திருவிழாவுக்குத்தான் வருகிறார்கள். ஆக, இந்தத் திருவிழா ஒரு வியாபார மையமாகவும் விதைப் பரிமாற்றம் செய்யும் களமாகவும் செயல்பட்டு வருகின்றது.

நேர்த்திக்கடனுக்காக மூட்டை மூட்டையாக நிலக்கடலையை வாங்கி, அதை மக்களுக்கு விநியோகம் செய்வதும் நடக்கும். இப்படி நிலக்கடலைத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவதால், நிலக்கடலைச் சாகுபடி செய்யும் பழக்கத்தை விவசாயிகள் கைவிடாமல் இருக்கிறார்கள்’னு நிலக்கடலைத் திருவிழாவோட அருமை பெருமைகளைச் சொன்னாரு அந்தக் கர்நாடக நண்பர். திருவிழாவைப் பார்த்துவிட்டு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பி வந்தோம். ஹோட்டலில் இருந்த சோபாவில், எங்களோடு பயிலரங்குல கலந்துகிட்ட பிரான்ஸ் நாட்டுப் பேராசிரியர் உட்கார்ந்திருந்தாரு. நிலக்கடலைத் திருவிழாவுல வாங்கிக்கிட்டுப் போன மசாலா போட்ட நிலக்கடலைப் பொட்டலத்தைக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னோம்.

அந்தக் கடலையை வாயில போடாம கையில வெச்சு ஆராய்ச்சி பண்ணிட்டே இருந்த பேராசிரியர், ‘நிலக்கடலையைச் சாப்பிடும்போது ரொம்பக் கவனமாக இருக்க வேண்டும். எப்படிப் பூச்சிக்கத்திரிக்காய், வண்டு உள்ள மாம்பழத்தையெல்லாம் கவனமாகச் சாப்பிடுகிறோம். ஆனால், கறுப்புப் புள்ளி உள்ள கடலைகளைச் சாப்பிடக்கூடாது. அந்தக் கறுப்புப் புள்ளிக்குக் காரணம், ‘அஃப்ளாடாக்சின்’ என்ற பூஞ்சணம்தான். காயவைத்து சுத்தப்படுத்திவிட்டால், இந்தப் பூஞ்சணம் கடலைகளில் இருக்காது. அதையும் மீறி ஒன்று, இரண்டு கடலைகளில் வரலாம். இல்லையெனில், சுத்தப்படுத்தாமல் கூட சிலர் கடைகளுக்கு அனுப்பலாம். இப்படிப்பட்ட கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வரும். உடனே அதைத் துப்பிவிட்டு, வாயை நன்றாக சுத்தபடுத்தி விடவும். ஏனெனில் இந்தப் பூஞ்சணம் படிந்துள்ள நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டால் மோசமான நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. பொதுவாவே உலக அளவில் இந்தியாவில் விளையும் நிலக்கடலை அதிகச் சுவையானது… சத்துக்கள் நிறைந்தது. ஆனால், தரம் பிரிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்’னு புதுசா ஒரு சங்கதியைச் சொல்லி நம்ம கண்கள திறந்து வெச்சாரு அந்தப் பேராசிரியர்.

நாமளும் இனிமே கவனமா இருப்போம்.

நன்றி

-பசுமை விகடன்.

Exit mobile version