Skip to content

கொடுக்காய்ப்புளியின் பராமரிப்பு செய்திகள்

        கொடுக்காய்ப்புளி அல்லது கோணப்புளி (Pithecellobium dulce) ஒரு பூக்கும் தாவரம் ஆகும்.இதன் காய்கள் பட்டாணி,அவரைபோன்ற தோற்றம் உடையவை.இதன் பருப்புக்கு மே ல் அமைந்துள்ள சதைப்பகுதி உண்ண உகந்தது.பறவைகள் விரும்பி உண்ணும். கொடுக்காப் புளி மரங்கள் விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும்,கிணற்று மேட்டிலும் சாதாரணமாக வளர்க்கப்படுகின்றன.

கொடுக்காப்புளியை எந்தெந்த மாதங்களில் நடவு செய்வது, அதை பராமரிப்பது உள்ளிட்ட தகவல்கள் இங்கே இடம் பெறுகிறது.

        பராமரிப்பு குறித்துப் பேசிய கிருஷ்ணசாமி, “கொடுக்காப்புளி, நாவல் இரண்டுமே அனைத்து வகையான மண்ணிலும் வளரும் என்றாலும் செம்மண் கலந்த சரளை மண்ணில் நன்றாக வளர்கின்றன.

       கொடுக்காப்புளி நடவுக்குப் புரட்டாசிஐப்பசி (செப்டம்பர்அக்டோபர்) ஆகிய மாதங்கள் ஏற்றவை. இந்த மாதங்களில் நடவு செய்தால் தொடர்ந்து கிடைக்கும் மழையில் செடிகள் நன்கு வளர்ந்துவிடும்.

        கொடுக்காப்புளி, நாவல் இரண்டுக்குமே நடவுமுறை ஒன்றுதான். நடவு செய்யவுள்ள நிலத்தில் 3 அடி நீள, அகல, ஆழம் இருக்குமாறு குழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குழிகளுக்கான இடைவெளி 30 அடி இருக்க வேண்டும். இந்த இடைவெளியில் ஏக்கருக்கு 50 குழிகள் வரை எடுக்கலாம்.

         ஒவ்வொரு குழியிலும் இரண்டடி உயரத்துக்குக் கரம்பை, குப்பை எருவைப் போட்டு, ஒரு மாதம் ஆற விட வேண்டும். பிறகு, செடிகளை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

          நடவு செய்த ஆறாவது மாதத்திலிருந்து பூக்கள் பூக்கும். அவற்றை உதிர்த்துவிட வேண்டும். அப்போதுதான் மரம் பருமனாகவும் வலுவானதாகவும் வளரும். ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் பூக்களை அனுமதித்தால் இரண்டாவது ஆண்டிலிருந்து கொடுக்காப்புளி மகசூல் கொடுக்கத் தொடங்கும்.

          ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை கொடுக்காப்புளியின் மகசூல் காலம். கொடுக்காப்புளிக்கு ஒர் ஆண்டில் இரண்டு முறை தொழுவுரம் கொடுத்தால் போதுமானது. காய்ப்பு வரும் நேரத்தில் வளர்ச்சி ஊக்கிகளைக் கொடுக்கலாம்” என்றார்.

பாடில்லா விவசாயம்!

           விருதுநகர் மாவட்டம், தாதம்பட்டி அருகேயுள்ள ஒண்டிப்புளியைச் சேர்ந்த விவசாயி பாண்டியன். இவர் முப்பது ஆண்டுகளாகக் கொடுக்காப்புளி விவசாயம் செய்து வருகிறார். அவர் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே…

          “எங்க தோட்டத்துல நூறு வயசைத் தாண்டுன கொடுக்காப்புளி மரங்கள்கூட இருக்கு. எங்களோட நிலம் வெள்ளை மண்ணு (சுக்கான் மண்). அதுல கொடுக்காப்புளி நடலாம்னு முடிவு செஞ்சு, எங்ககிட்ட இருந்த பழைய மரங்கள்ல இருந்து நாத்து உற்பத்தி பண்ணி நடவு போட்டேன். மொத்தம் நாலு ஏக்கர்ல நடவு செஞ்சிருக்கேன்.

           நான் நடவு செஞ்ச மரங்களுக்கு இப்போ முப்பது வயசாகிடுச்சு. 30 அடி இடைவெளியில் நடவு செஞ்சும் மரங்கள் ஒண்ணுக்கொண்ணு முட்டிக்கிட்டுதான் நிக்குது. கொடுக்காப்புளி மரங்களோட வயசு அதிகரிக்க அதிகரிக்க நல்ல மகசூல் கொடுக்கும். அதனால், நீண்ட நாள்கள் வெச்சு மகசூல் எடுக்க நினைக்கிறவங்க, இடைவெளியை இன்னமும் அதிகமாக்கிக்கலாம்.

           நடவு செஞ்ச ரெண்டாவது வருஷம் காய்ப்புக்கு வரும். ஆரம்பத்துல ஒரு மரத்துல இருந்து பத்து கிலோ அளவுக்குக் காய்கள் கிடைக்கும். ஒவ்வொரு வருஷமும் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமா மகசூல் கூடி பத்தாவது வருஷத்துல இருந்து, ஒரு மரத்துக்கு நூறு கிலோவுக்கு மேல மகசூல் கிடைக்கும்.

            நாங்க வாய்க்கால் மூலமாத்தான் பாசனம் பண்றோம். வருஷா வருஷம் குப்பை எரு அடிப்போம். இந்த வருஷம் குப்பை எரு அடிப்போம். இந்த வருஷம் கரம்பை எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்ததால, நிலம் முழுக்க ஒர் அடி உசரத்துக்குக் கரம்பை கொட்டியிருக்கேன். நாலு ஏக்கர்ல இருக்கிற மரங்கள்ல இருந்து இந்த வருஷம் 5 லட்ச ரூபாய்க்குக் பழங்கள வித்திருக்கோம்.

           சீசன் நேரத்துல தினமும் 300 கிலோ மகசூல் கிடைச்சது. பிஞ்சு, காய்களைப் பறிக்காம நல்லா பழுத்த பழங்களை மட்டும்தான் பறிப்போம். நான் சில்லறையா ஒரு நாளைக்கு 50 கிலோ வரைக்கும் விற்பேன். அப்படி விக்கும்போது ஒரு கிலோ 250 ரூபாய்ல இருந்து 300 ரூபாய் வரைக்கும் விற்பனையாகும்.

           மீதியைக் கமிஷன் கடைக்கு அனுப்பிடுவேன். அங்க கிலோவுக்கு நூறு ரூபாய் கொடுப்பாங்க. சில நேரங்கள்ல 50 ரூபாய்க்குக்கூட போகும். கமிஷன் கடை மூலமா வித்ததுலயே இந்தத் தடவை 5 லட்ச ரூபாய் வருமானம் கிடைச்சது” என்றார்.

சந்தையை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்!

            கொடுக்காப்புளி சாகுபடி பற்றி’ குன்றக்குடி வேளாண் அறிவியல் மைய’த்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரனிடம் பேசியபோது சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

           “கொடுக்காப்புளி வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரம். இதில் பூச்சி, நோய்த் தாக்குதல் இருக்காது. இந்தியாவைப் பொறுத்தவரை இதைத் தீவனப் பயிருக்காகத்தான் வளர்த்து வருகிறார்கள். ஆனால், இதன் பழங்களுக்கான தேவை அதிகம் இருக்கிறது. பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் பழத்துக்காக இதை அதிகளவு சாகுபடி செய்கிறார்கள்.

           கொடுக்காப்புளிக்குப் பல சிறப்புகள் உண்டு. 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை முதல் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரும் இயல்புடையது. நல்ல வளமான மண்ணிலும் வளரும். மிகவும் மோசமான மண்ணிலும் வளரும்.

          எதற்குமே பயன்படாது என நினைக்கும் மண்ணிலும்கூட இது வளரும். கடுமையான வறட்சியைத் தாங்கும் இயல்புடையது. உப்புத் தண்ணீரிலும் கூட இது நன்றாக வளரும்.

தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும்!

          பொதுவாக, முள் உள்ள பயிர்களில் பூச்சி நோய்த் தாக்குதல் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், கொடுக்காப்புளியில் இலைகள் பசுமையாக இருக்கும் காலத்தில், இலைகளை வெட்டி உண்ணும் ஒரு வகையான புழுக்கள் தாக்கும். ஆனால், கொடுக்காப்புளி அந்தச் சமயத்தில் இலைகள் முழுவதையும் கொட்டித் தன்னைத்தானே தகவமைத்துக்கொள்ளும்.

           இந்த அற்புதமான ஆற்றல் இயற்கையிலேயே கொடுக்காப்புளிக்கு இருக்கிறது. உதிர்த்த இலைகளை மறு உற்பத்தி செய்யத் தாவரங்கள் குறிப்பிட்ட காலத்தை எடுத்துக்கொள்ளும். ஆனால், கொடுக்காப்புளி இலைகளை உதிர்த்த உடனேயே அடுத்த துளிர் வந்துவிடும். இதன் விதை மண்ணில் விழுந்த இரண்டாவது நாளில் முளைத்துவிடும். எட்டாவது நாளில் வேர்விடும்.

            ஒரு மாதத்தில் நடவுக்கு ஏற்ற நாற்றாகத் தயாராகிடும். இதன் இலைகள் அருமையான கால்நடைத் தீவனம். இலைகளில் இருக்கும் 19 சதவிகிதப் புரதச்சத்து, கால்நடைகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

           கொடுக்காப்புளி மரம் 15 மீட்டர் முதல் 25 மீட்டர் வரை வளரும். எந்தப் பராமரிப்பும் இல்லாமலேயே கொடுக்காப்புளி மரம், ஒர் ஆண்டுக்கு ஒன்றரை அடி உயரம் வரை வளரும். நன்றாகப் பராமரித்தால் ஆண்டுக்கு மூன்றடி வரை கூட வளரும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பூவெடுக்கத் தொடங்கி ஏப்ரல், மே மாதங்களில் பழங்கள் கிடைக்கும். இது அயல்மகரந்தச் சேர்க்கை மூலமாகக் காய்க்கக்கூடிய மரம்.

              வறட்சியைத் தாங்கி வளரும் என்றாலும் பழத்துக்காகச் சாகுபடி செய்யும்போது, பாசனம் செய்ய வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் பத்து நாள்களுக்கு ஒரு முறையாவது பாசனம் செய்ய வேண்டும். சொட்டுநீர்ப் பாசனமே இதற்குச் சிறந்தது. இதை வேலிப்பயிராகப் பயிரிடுபவர்கள் பத்தடி இடைவெளியில் பயிரிடலாம்.

              பழத்துக்காகத் தனிப்பயிராகப் பயிர் செய்ய நினைப்பவர்கள் 25 அடி இடைவெளியில் சாகுபடி செய்ய வேண்டும். இது வறண்ட பூமியிலும் வளமான மகசூலைக் கொடுக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

              நுகர்வோரிடம் தற்போதுதான் கொடுக்காப்புளி தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. உண்மையில் மனித உடலுக்குத் தேவையான பலவிதமான சத்துகளைக் கொண்டது கொடுக்காப்புளி. இதன் வரத்து குறைவாக இருப்பதால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

               வரத்து அதிகமானால் விலை குறையலாம். அதனால், இதைத் தனிப்பயிராகச் சாகுபடி செய்ய நினைக்கும் விவசாயிகள் சந்தை வாய்ப்பைத் தெளிவாக ஆராய்ந்து விற்பனையை உறுதிப்படுத்திக் கொண்டு சாகுபடியில் இறங்குவது நல்லது.

               ஒருங்கிணைந்த பண்ணையங்களில் கொடுக்காப்புளியை இடம் பெறச் செய்வதன் மூலம் ஆடு மாடுகளுக்கான தீவனத்தையும் உற்பத்தி செய்துகொள்ள முடியும்.

சிவப்பு நிறத்துக்கு மாறிய பிறகுதான் உண்ண வேண்டும்!

             இதன் பழங்கள் துவர்ப்பு கலந்த இனிப்புச் சுவையுடையவை. வெளிநாடுகளில் இதை மருத்துவத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள். இதில் நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கக்கூடிய வைட்டமின்சி அதிகளவில் உள்ளது. குளிர்காலத்தில் ஏற்படும் தொண்டைச் சளி, நுரையீரல் சளிகளுக்கு இதன் பழங்கள் மிகச்சிறந்த மருந்து

              கொடுக்காப்புளி பழம் வெள்ளை நிறத்திலிருந்து சிவப்பு நிறத்துக்கு மாறிய பிறகுதான் அதை உண்ண வேண்டும். அப்போதுதான் துவர்ப்பு, இனிப்பு இரண்டும் கலந்ததாக இருக்கும். சிவப்பு நிறமான பிறகு அந்தப் பழம் முழுக்கவே ஆண்டி ஆக்ஸிடண்ட்டாக மாறிவிடும். இது வேறெந்தப் பழத்திலும் கிடைக்காத அற்புதம். கல்லீரல் விக்கம் மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் கொடுக்காப்புளி பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

              இந்த மரத்தின் பட்டையைக் காய்ச்சி எடுக்கும் கஷாயம் வயிற்றுப்போக்குக்குச் சிறந்த மருந்து. இதன் இலைகள், செரிமானக்கோளாறு மற்றும் உணவுக்குழாயைச் சுத்தப்படுத்தி, குடல்களில் உருவாகும் நோய்க் கிருமிகளை அழிக்கக்கூடியவை.

              அதனால்தான் ஆடுகள் இதைத் தின்று, தங்களைத் தாங்களே சரிசெய்து கொள்கின்றன. இதன் பழங்களை உண்பதால் வாய்ப் புண்கள் சரியாகும். இந்தப் பழங்களை உண்ணும்போது. நமது பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையே ஒர் இறுக்கமான பிணைப்பு ஏற்படும்” என்றார்.

நாற்றுகள் எங்கு கிடைக்கும்?

           நல்ல விளைச்சல் கொடுக்கும் மரங்களிலிருந்து கிடைக்கக்கூடிய முற்றிய விதைகளைச் சேகரிக்க வேண்டும் இந்த விதைகளைப் பிளாஸ்டிக் பைகளில் இட்டு வளர்த்தால் ஒரு மாதத்தில் நாற்றுகள் தயாராகிவிடும், வீரிய கன்றுகள் தேவைப்படுபவர்கள் பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் வாங்கலாம்.

           தவிர, அருகில் உள்ள அரசுத் தோட்டக்கலைத்துறை நாற்றுப்பண்ணைகளிலும் கிடைக்கும். பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி அறிமுகப்படுத்தியுள்ள பி.கே.எம்-1 ரகம் (வீரிய ஒட்டு ரகம்) வணிக ரீதியான சாகுபடிக்கு ஏற்றதாக இருப்பதாக விவசாயிகள் சொல்கிறார்கள்.

மாரடைப்பைத் தடுக்கும் கொடுக்காப்புளி!

           கொடுக்காப்புளி பழத்தில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. இதைப் பற்றிப் பேசிய இயற்கை மருத்துவரும் யோகா நிபுணருமான ஷர்மிளா பாலகுரு, “பொட்டாசியம் சத்து மனிதர்களுக்கு அவசியமான ஒன்று.

             இது எலும்புகளுக்குப் பலத்தைக் கூட்டுகிறது. ரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைவதும் ரத்த அழுத்தத்துக்கு ஒரு காரணம். பொட்டாசியம் அளவு குறைவாக இருந்தால் ரத்தத் தட்டுகள் சீராக இல்லாமல், ரத்தக் குழாய்கள் மேல் ஒட்டிக்கொள்ளும்.

             மாரடைப்பு வருவதற்கான பல்வேறு காரணங்களில் இதுவும் ஒன்று. நமது உணவு முறையில் பெரும்பாலும் பொட்டாசியம் சத்து கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. எனவே பொட்டாசியம் நிறைந்த உணவுகள், பழங்களை உண்பது பல நோய்களிலிருந்து நம்மைக் காக்கும்” என்றார்.

நன்றி

பசுமை விகடன்

Leave a Reply

editor news

editor news