Skip to content

  நீரா பானம்

    நீரா என்பது பதநீருக்கும் கள்ளுக்கும் இடைப்பட்ட பானம்.

    நீராவை பதநீர் இறக்குவது போல இறக்கமுடியாது. 5டிகிரி செல்சியஸ் குளுமையில்தான் அது எப்போதும் இருக்கவேண்டும். அதாவது சீவப்பட்ட தென்னம் பாளைகளில் அதற்கென்று வடிவமைக்கப்பட்ட பானை வடிவ ஐஸ்பெட்டி களை பொருத்தி கட்டிவைக்கவேண்டும். ஐஸ் பானைகளில் சேகரமாகும் நீராவை இறக்கி, தயாராக உள்ள ப்ரீஸர் பொருத்தப்பட்ட வேனில் ஏற்றி, கூலிங் சென்டர் எனப்படும் குளுகுளு சேகரிப்பு மையங்களுக்கு கொண்டு சென்று அங்குள்ள டேங்கரில் நிரப்ப வேண்டும். பிறகு அதை பாட்டிலில் அடைத்து ப்ரீஸர் பொருத்தப்பட்ட மினிவேன் மூலம் ஏற்றி சென்று, அந்தப்பாட்டில்களை கடைகளில் விற்பனைக்கு விநியோகம் செய்யலாம். கண்டிப்பாக ஐஸ்பெட்டி எனப்படும் குளுகுளு பெட்டிகள் உள்ள கடைகளில்தான் இதை இருப்பு வைத்து விற்கமுடியும். 3 மாதங்கள் வரை இருப்பு வைத்து விற்பனை செய்யலாம்.

நீரா’ இறக்க அனுமதி…

விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்!

     தோட்டத்தில் வரப்போர பனை மரத்தடியில் அமர்ந்திருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். நாளிதழ்கள் சகிதமாக மிதி வண்டியில் வியர்க்க விறுவிறுக்க வந்து சேர்ந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி, குறுக்குப்பாதையில் ‘காய்கறி’ கண்ணம்மாவும் வந்து சேர அங்கேயே அன்றைய மாநாடு கூடியது.

    ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார், வாத்தியார்.

    “தென்னை விவசாயிகள் ரொம்ப நாளா கள் இறக்குறதுக்கு அனுமதி கேட்டுப் போராடிட்டு இருக்கிறாங்க.ஆனா, கள்ளுக்குப் பதிலா ‘நீரா’ இறக்க அனுமதி கொடுக்கலாம்னு தமிழக அரசு முடிவு செஞ்சிருக்கு” என்று வாத்தியார் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இடைமறித்த காய்கறி,

   “அதென்ன நீரா?” என்று கேட்டார்.

    “பனை மரத்துல பாளையைச் சீவி, அதிலிருந்து வடியுற திரவத்தைச் சுண்ணாம்பு தடவுன கலயத்துல சேகரிச்சா அது, பதநீர். அதையே சுண்ணாம்பு தடவாத கலயத்துல சேகரிச்சா, அது புளிச்ச கள்ளா மாறிடும். இதேமாதிரி தென்னை மரத்திலேயும் பாளையைச் சீவி, வடியுற திரவத்தைக் கலயத்துல பிடிச்சா, புளிச்சக் கள் கிடைக்கும். இதே திரவத்தைப் புளிக்க விடாம இறக்கிறதுதான் நீரா. தென்னம்பாளையைச் சீவி அதிலிருந்து வடியுற திரவத்தை அப்படியே பிரத்யேகமான ஐஸ் பெட்டியில் பிடிச்சு, புளிக்கவிடாம பதப்படுத்திக் குளிர் நிலையிலேயே வெச்சிருக்கிறதுதான் நீரா. புளிக்காம இருக்கிறதால, இதுல ஆல்கஹால் இருக்காது. இது கள் மாதிரி போதை தருகிற பானம் இல்லை. இது, குடிக்கிறதுக்கு ரொம்பச் சுவையா இருக்கும் கேரளாவில் இது ரொம்ப அமோகமா விற்பனையாகுது.

    எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், கள் இறக்க மட்டும் அனுமதி கொடுக்க மாட்டாங்க. ஏன்னா, இதுக்கு அனுமதி கொடுத்தா, டாஸ்மாக்ல சரக்கு விற்பனை பாதிச்சுடும்ல. அதனால, ‘நீரா இறக்கிறதுக்காவது அனுமதி கொடுங்க’னு தென்னை விவசாயிகள், கேட்க ஆரம்பிச்சாங்க. ஒரு வழியா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதுக்கு இறங்கி வந்திருக்கார். இதுக்காக நடந்த அமைச்சர்கள் கூட்டத்துல நீராவுக்கு அனுமதி வழங்கலாம்னு முடிவெடுத்திருக்காங்க.

   தென்னை வளர்ச்சி வாரியம், தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள், தென்னை உற்பத்தியாளர் இணையம் மாதிரி அமைப்புகள் மட்டும்தான் நீரா உற்பத்தி செய்ய முடியும். இதுக்காகச் சுத்திகரிப்பு நிலையங்களும் அமைக்கப்போறாங்க. இந்தத் திட்டத்துல இணையுற தென்னை விவசாயிகள் நல்ல லாபம் பார்க்க முடியும். தேங்காய் மூலம் கிடைக்கிற வருமானத்தைவிட பல மடங்கு வருமானம் கிடைக்கும்” என்றார், வாத்தியார்.

     “ஆனா, ‘கள்’ நல்லசாமி நீராவுக்கு ஆதரவு கொடுக்கலை, நீராவைவிட கள்தான் சிறந்ததுனு சொல்றார். இன்னும் சிலர். ‘நீராவில் சில ரசாயனங்கள் சேர்க்கிறாங்க. அதனால, அதைக் குடிக்கக் கூடாது’னு சொல்றாங்க.

    “எப்படியோ தென்னை விவசாயிகளுக்கு ஒரு விடிவு காலம் வந்தா சரிதான்” என்ற காய்கறி, தான் கொண்டு வந்திருந்த நுங்குகளை எடுத்து ஆளுக்கு இரண்டாகக் கொடுத்துவிட்டு, “இந்த வருஷம் கடும் வறட்சியால நுங்கு வரத்து ரொம்பக் குறைஞ்சு போச்சு. வெயில் நேரத்துல நுங்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது. நுங்கு, உடம்புக்கு ரொம்பக் குளிர்ச்சி. பொதுவா இளம் நுங்கைத்தான் சாப்பிடணும். கல்நுங்குனு சொல்ற முத்துன நுங்கைச் சாப்பிட்டால், சிலருக்கு வயிற்று வலி வரும். வியர்க்குரு, வெயில்னால வர்ற கொப்புளங்கள் மேல நுங்குத்தோலைத் தடவினா உடனே சரியாகும்” என்று தகவல்களை அடுக்கினார்.

    நுங்கைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், ஏரோட்டி.

    “ஒரு விவசாயி அவர் வெச்சிருக்கிற நிலத்தோட அளவுக்கு, அரசு நிர்ணயிச்சிருக்கிற அளவு உரத்தைத்தான் மானிய விலையில் வாங்க முடியும். அதுக்கு மேல வாங்கினா, அதுக்கு மானியம் கிடைக்காது. அதில்லாம உரம் வாங்க அதிகப் பணத்தை விவசாயி முதலீடு செய்ய வேண்டியிருக்கும். உதாரணமா, ஒரு மூட்டை யூரியா இப்போ மானிய விலையில் 270 ரூபாய் அளவில் விற்பனையாகுது.

    இதை நேரடியா விவசாயிகள் வாங்கணும்னா 1,200 ரூபாய்க்கு மேல கொடுக்க வேண்டியிருக்கும். மானியத்தொகை கிட்டத்தட்ட ஒரு மாசம் கழிச்சுதான் விவசாயியோட கணக்குக்கு வரும். அதனால, விவசாயிகள் அளவுக்கதிகமா ரசாயன உரத்தை உபயோகப்படுத்த மாட்டாங்க. நிறைய பணத்தை முதலீடு செய்ய முடியாத விவசாயிகள் அதிகமா தொழுவுரத்தைப் பயன்படுத்த ஆரம்பிப்பாங்க” என்றார்.

    “இதையும் அரசாங்கம் யோசனை செய்யணும்” என்று சொன்ன காய்கறி, “இன்னும் ரெண்டு, மூணு வீட்டுக்கு காய்கறி கொடுக்கணும். நான் கிளம்பறேன்” என்று சொல்லிக்கொண்டே கூடையைத் தூக்க… அத்தோடு முடிந்தது, அன்றைய மாநாடு.

நன்றி

பசுமை விகடன்

Leave a Reply

editor news

editor news