Site icon Vivasayam | விவசாயம்

கொடுக்காய்ப்புளி

              கொடுக்காய்ப்புளி அல்லது கோணப்புளி (Pithecellobium dulce) ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இதன் காய்கள் பட்டாணி,அவரைபோன்ற தோற்றம் உடையவை. இதன் பருப்புக்கு மேல் அமைந்துள்ள சதைப்பகுதி உண்ண உகந்தது.பறவைகள் விரும்பி உண்ணும். கொடுக்காப் புளி மரங்கள் விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும், கிணற்று மேட்டிலும் சாதாரணமாக வளர்க்கப்படுகின்றன.

               இது, கோணப் புளியங்காய், கோணக்காய், சீனிப்புளியங்காய்,கொரிக்கலிக்கா எனவும் அழைக்கப்படுகிறது.பழந்தமிழர்களால் மருந்தாக பயன்பட்ட இதனை உக்காமரம் என்கிற பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் இலைகள் ஆடுகளுக்கு பசுந்தீவனமாகக் கொடுக்கப்படுகிறது

                சுருண்ட உடலும் ஊதா () பச்சை நிறத்தோலும் வெண்ணிறச் சதைப்பகுதியில் கருநிற விதையும் கொண்ட துவர்ப்பும் இனிப்பும் உடைய ஒரு வகைப்பழம். Manila tamarind

              “அடிக்கடி தோட்டத்துக்குப் போய் விவசாயத்தைக் கவனிக்க முடியாது. தண்ணி ரொம்பக் குறைவாத்தான் இருக்கு. உரம், பூச்சிக்கொல்லிச் செலவை நினைச்சாலே பயமா இருக்கு” எனக் கவலைப்படும் விவசாயிகளாக இருந்தாலும் சரி… “செடியை நடவு செஞ்சோமா, அறுவடை பண்ணிணோமா, பணத்தை எண்ணுணோமா”? என நினைக்கும் விவசாயிகளாக இருந்தாலும் சரி… இரு தரப்பினருக்குமே ஏற்ற பயிராக இருப்பது கொடுக்காப்புளி.

            அவ்வப்போது பாசனம், மகசூல் சமயத்தில் கொஞ்சம் பராமரிப்பு இவற்றை மட்டும் செய்து வந்தாலே ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து ஆண்டுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் அளவுக்கு வருமானம் கொடுக்கிறது கொடுக்காப்புளி.

             முப்பது வயத்தைக் கடந்த பலரும் தமது பள்ளிக் காலங்களில் கொடுக்காப்புளியைச் சுவைத்து இருப்பார்கள். இன்றைக்கு இருப்பதுபோல விதவிதமான தின்பண்டங்கள் அந்தக் காலங்களில் இல்லையென்றாலும், அவற்றைவிட அதிகச் சுவைகளையும் மகிழ்ச்சி்யையும் கொடுத்தவை மாங்காயும் கொடுக்காப்புள்ளியும். அப்போது, கிராமங்களில் வரப்போரங்கள், கிணற்று மேடுகள், வீடுகளுக்கு அருகிலுள்ள தோட்டங்கள் என ஆங்காங்கு கொடுக்காப்புளி மரங்கள் இருக்கும். பறவைகள் சாப்பிட்டு இடும் எச்சம் மூலமாகத் தானாகவே இம்மரம் பல இடங்களிலும் பரவியிருந்தது. தோட்டங்களில் வேலிப்பயிராகவும் சில விவசாயிகள் இதை நடவு செய்திருப்பார்கள்.

           சுருள் சுருளாகப் பச்சையும், சிவப்புமாக இருக்கும் இக்காய்களைப் பறித்து உண்பதுதான் அன்றைய சிறுவர்களின் ஆனந்தப் பொழுதுபோக்கு. விடுமுறை நாள்களில் கையில் தொரட்டியோடு கொடுக்காப்புளி மரங்களே கதியெனக் கிடந்த நிகழ்வு நம்மில் பலருக்கு நிகழ்ந்திருக்கும். ஆனால், அன்று இலவசமாகப் பறித்துத் தின்ற கொடுக்காப்புளியை இன்று அதிகப் பணம் கொடுத்து வாங்கி உண்ண வேண்டியிருக்கிறது. ஆம், கொடுக்காப்புளியின் தற்போதைய விலை கிலோ 300 ரூபாய்க்கு மேல். இந்தச் சத்தான சந்தை வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு வேலிப்பயிராக இருந்த கொடுக்காப்புளியைத் தனிப்பயிராகச் சாகுபடி செய்து வருகிறார்கள் பல விவசாயிகள்.

வறண்ட நிலத்திலும் வருமானம் கொடுக்கும் கொடுக்காய்ப்புளி!

             அப்படிப்பட்ட விவசாயிகளில் ஒருவர்தான் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பூசாரிநாயக்கனபட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி. இவர், தன்னுடைய ஐந்து ஏக்கர் மானாவாரி நிலத்தில் கொடுக்காப்புளி சாகுபடி செய்துவருகிறார். அவரின் கருத்துகள் இதோ

5 ஏக்கர் கொடுக்காப்புளி… 5 ஏக்கர் நாவல்…

           “எனக்கு விவசாயத்துல ரொம்ப ஆர்வம். இது முழுக்க மானாவாரி பூமி. நான் வாங்கும்போது தரிசாக இருந்தது. வாங்கி சில வருஷம் தரிசாத்தான் போட்டு வெச்சிருந்தேன். ஒரு சமயம், விருதுநகர் பக்கத்துல தாதம்பட்டிங்கிற ஊரைச் சேர்ந்த பாண்டியன் என்கிற விவசாயியைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. அவரு கொடுக்காப்புளியைத் தனி விவசாயமா செஞ்சிருந்தாரு. வேலிப்பயிரைத் தனி விவசாயமா செய்றாரேனு ஆச்சர்யப்பட்டு அவர் தோட்டத்துக்குப் போய்ப் பார்த்தேன். அதுல நல்ல வருமானம் கிடைக்கிறதாச் சொன்னாரு. இருந்தாலும் எனக்கு அவ்வளவா நம்பிக்கை வரல. தொடர்ந்து ரெண்டு வருஷமா அவருடைய தோட்டத்துக்குப் போய்ப் பார்த்ததுல, அவர் சொன்னது அத்தனையும் உண்மைனு தெரிஞ்சுகிட்டேன். அவர் சொன்ன ஆலோசனைப்படிதான் நான் 5 ஏக்கர் நிலத்துல கொடுக்காப்புளியை நடவு செஞ்சேன்.

              குறைச்சலான தண்ணி, அதிகப் பாடில்லாத பயிர்னு எனக்குத் தோதாப்படவும் சாகுபடியில் இறங்கினேன். வண்டியூர் பக்கத்துல ஒருத்தர், அருமையா நாவல் சாகுபடி பண்றார்னு கேள்விப்பட்டேன். அவரையும் போய்ப் பார்த்துப் பேசி, இன்னொரு 5 ஏக்கர் நிலத்துல நாவல் நட்டேன். கொடுக்காப்புளி, நாவல் ரெண்டையுமே நட்டு ரெண்டு வருஷமாச்சு” என்றார் கிருஷ்ணசாமி.

            “போர்வெல் போட்டுத்தான் பாசனம் செய்றேன். இது செம்மண் கலந்த சரளை மண். எவ்வளவு மழைத் தண்ணி விழுந்தாலும் உடனே மண்ணு குடிச்சிடும். அதனால, சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சிருக்கேன். கொடுக்காப்புளியில் ஒட்டுக்கன்னுதான் நடவு செஞ்சிருக்கேன். இது, நாட்டு மரம் மாதிரி அதிக உயரத்துக்குப் போகாது. பூச்சி, நோய்த் தாக்குதலும் இருக்காது. காய்க்கிற நேரத்துல மரத்துக்கு மட்டும் கொஞ்சம் ஊட்டம் கொடுக்கணும். ஒரு ஏக்கருக்கு அரை லிட்டர்ங்கிற கணக்குல ஹீயூமிக் அமிலத்தைச் சொட்டுநீர்ல கலந்துவிடுவேன். மத்தபடி பிக்கல், பிடுங்கல் இல்லாத பயிரா இருக்கு. பறவைங்க தொல்லை இருந்தாலும் பெரிசா பாதிப்பு இல்லை.

           தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில நாட்டுக் கொடுக்காப்புளி மரங்கள்ல இருந்து விதை எடுத்து, நாத்துகள உருவாக்கிக் கொடுக்குறாங்க. நான் அங்கதான் நாத்துகள வாங்கி நடவு பண்ணினேன். நடவு செஞ்சு ரெண்டு வருஷம் ஆச்சு. இந்த வருஷம் கொடுக்காப்புளி பரவலா காய்ச்சிருக்கு. அடுத்தடுத்த வருஷங்கள்ல கூடுதல் மகசூல் கிடைக்கும்” என்ற கிருஷ்ணசாமி, மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

          “5 ஏக்கர்லயும் மொத்தம் 250 மரங்கள் இருக்கு. இந்த வருஷம் 5 ஏக்கர் நிலத்துல இருந்து மொத்தம் 550 கிலோ மகசூல் கிடைச்சது. வெளிமார்க்கெட்டுல கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்றாங்க. நான் மொத்த வியாபாரிகளுக்குக் கொடுத்ததால கிலோவுக்கு 150 ரூபாய் விலை கிடைச்சது மொத்தமா 550 கிலோவுக்கு 82,500 ரூபாய் கிடைச்சது.

            அடுத்த வருஷத்துல இருந்து ஒரு மரத்துல 50 கிலோ பழம் கிடைக்கும்னு சொல்றாங்க. மரத்துக்கு 25 கிலோ காய்ச்சாலும் 250 மரங்கள் மூலமா 6,250 கிலோ மகசூல் கிடைக்கும். ஆறாயிரம் கிலோனு வெச்சுக்கிட்டாலும் 9 லட்ச ரூபாய் கிடைச்சுடும். இதுல 2 லட்ச ரூபாய் செலவு போனாலும் மீதி 7 லட்ச ரூபாய் செலவு போனாலும் மீதி 7 லட்ச ரூபாய் லாபமாநிற்கும். வெளி மார்க்கெட்ல விற்பனை செஞ்சா, இன்னமும் கூடுதல் லாபம் கிடைக்கும்” என்ற கிருஷ்ணசாமி நிறைவாக,

      “என்னைப் பொறுத்தவரைக்கும் அதிகம் அலட்டிக்காத, தண்ணி தேவைப்படாத கொடுக்காப்புளியத் தரிசு நிலத்தோட தங்கம்னு தான் சொல்வேன். கொஞ்சமா தண்ணி வசதி இருந்து நிலத்தைத் தரிசா போட்டு வெச்சிருக்கற விவசாயிகளுக்கு அருமையான பயிர் இது” என்று கைநிறைய கொடுக்கப்புளியை அள்ளிக்காட்டினார் கிருஷ்ணசாமி.

நன்றி

கிருஷ்ணசாமி

பசுமைவிகடன்

Exit mobile version