இந்த உலகம், மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் உள்படக் கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். நாம்தான், உலகை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறோம் என எண்ணிக் கொண்டிருக்கிறான் மனிதன். ஆனால், உண்மையில் உலகை ஆட்டிவைப்பவை பூச்சிகளும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும்தாம். நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு. உண்மையில் அப்படியில்லை. தனது அனைத்துப் படைப்பிலும் இரண்டு வாசல்களை வைத்தே இருக்கிறது இயற்கை. ஒரு வாசல் அடைத்தால், இன்னொருவாசல் திறக்கும். அதன்படி, தீமை செய்யும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்த, சில நன்மை செய்யும் நுண்ணுயிர்களையும் படைத்துள்ளது. பயோ என்.பி.கே. திரவம், ஆம், பி.பி.எஃப்.எம் பற்றி இங்கு காண்போம்.
பயோ என்.பி.கே. பற்றிய தகவல்கள்:
இந்தத் திரவத்தை இலை தழைக்கழிவுகள், ரோடோ சூடோமோனஸ்’ (Rodo Seudomonos) எனும் பாக்டீரியா மற்றும் ஏ.எல்.ஏ (5 அமினோ லியோலிக் அமிலம் (5 Amino Levulinic Acid) ஆகியவற்றைக் கொண்டு நாமே தயாரித்துக் கொள்ளலாம். வயலில் தேவையில்லாத களைகளை (பார்த்தீனியம் செடி உள்பட) நொதிக்க வைத்து இந்தத் திரவத்தைத் தயாரிக்க வேண்டும். இதனால், களைச்செடிகளைப் பயனுள்ளதாக மாற்ற முடியும்.
ரோடோ சூடோமோனஸ் என்பது ஒளிச்சேர்க்கை (போட்டோ சிந்தடிக்) செய்யக்கூடிய பாக்டீரியா. இந்தப் பாக்டீரியா தாவரங்களைவிட 300 மடங்கு அதிகமாகச் சூரிய ஒளியைப் பயன்படுத்தக்கூடியது. அதன் மூலமாக, தனக்குத் தேவையான அமினோ அமிலங்கள், என்சைம்கள், ஹார்மோன்களை அது உற்பத்தி செய்துகொள்ளும். இந்தப் பாக்டீரியாக்கள் மண்ணில் இருக்கும்போது, ‘லாக்டோ பேசிலஸ்’, ‘ஈஸ்ட்’ போன்றவற்றைச் செயல்படத் தூண்டும். இதனால் மண்ணில் விழும் இலை, தழைகள் விரைவாக மட்கும். சுருக்கமாக ஏ.எல்.ஏ (ALA) என அழைக்கப்படும் 5 அமினோ லியோலிக் அமிலம் எனும் என்சைம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பயன்பாட்டில் உள்ளது. விவசாயத்தில் தற்போதுதான் இதைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்தத் திரவத்தைப் பயன்படுத்திய பிறகு பயிர் வளர்ச்சி, மகசூல் நன்றாக இருப்பதாகத் விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
தயாரிப்பு:
எருக்கு, கொழுஞ்சி, பார்த்தீனியம் உள்ளிட்ட பல வகையான தாவரங்களின் இலைகளை மட்டும் சேகரித்துக்கொள்ள வேண்டும். அவற்றில் 50 கிலோ அளவு இலைகளை ஆயிரம் லிட்டர் தண்ணீரில் நன்றாக மூழ்கும்படி ஐந்து நாள்களுக்கு ஊற வைக்க வேண்டும். அதற்குள் இலைகளில் இருந்து சாறு இறங்கி, தண்ணீர் முழுவதும் கஷாயமாக மாறி இருக்கும். இந்தக் கஷாயத்தை வடிகட்டி வேறொரு டிரம்மில் ஊற்றி, அதில் 10 கிலோ பிண்ணாக்கு (கடலைப் பிண்ணாக்கு அல்லது எள்ளுப் பிண்ணாக்கு) சேர்த்துக் கலக்க வேண்டும். பிறகு, மீன்தொட்டிகளில் பயன்படுத்தப்படும் காற்று செலுத்தும் மோட்டார் மூலம் இத்திரவத்துக்குள் காற்றைச் செலுத்த வேண்டும்.
இலைகளை ஊற வைத்த 5-ம் நாள் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம்மில் 42 கிராம் ரோடோ சூடோமோனஸ், 40 கிராம் ஏ.எல்.ஏ என்சைம், 40 கிராம் உப்பு ஆகியவற்றைக் கலக்க வேண்டும். பிறகு, டிரம் நிறையும் வரை தண்ணீர் நிரப்பி வெயிலில் ஒரு நாள் வைத்தால், இது சிவப்பு நிறத்துக்கு மாறிவிடும்.
கஷாயத்தில் பிண்ணாக்கு கலந்து காற்று செலுத்திய பிறகு, 20 லிட்டர் டிரம்மில் தயாரித்த திரவத்தை அதனுடன் கலக்கி 25 நாள்கள் வைத்திருந்தால் பயோ என்.பி.கே தயாராகிவிடும். முதல் முறை மட்டுமே 25 நாள்களாகும். அடுத்த முறை தயாரிக்கும்போது ஏற்கெனவே தயாரித்த கசடுகள் டிரம் அடியில் இருப்பதால் ஏழே நாட்களில் தயாராகிவிடும். பயோ என்.பி.கே திரவத்தை அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
ஆயிரம் லிட்டர் திரவத்தைப் பத்து ஏக்கர் நிலத்தில் உள்ள பயிர்கள் மீது தெளிக்கலாம். சொட்டுநீர்ப் பாசனம் மூலமாகக் கொடுப்பதாக இருந்தால், ஐந்து ஏக்கருக்குப் போதுமானதாக இருக்கும். இதைப் பயிருக்குக் கொடுக்கும்போது பயிர் வளர்ச்சி நன்றாக இருக்கும். அதிகப் பூக்கள் எடுக்கும்; மகசூல் மூன்று மடங்கு அதிகரிக்கும். காய், பழங்கள் சுவையாகவும், நீண்டநாள்கள் சேமித்து வைக்கும் திறனுடையதாகவும் இருக்கும்.
இதைத் தயாரிக்க, டிரம்கள், மோட்டார், குழாய்கள் உள்ளிட்டவை வாங்க 50 ஆயிரம் ரூபாய் வரை தேவைப்படும்.
விளைச்சலை அதிகரிக்கும் ‘என்.பி.கே.’
பயோ என்.பி.கே திரவம் பயிர்களுக்கு மட்டுமானதல்ல. அதைக் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்றவற்றுக்கும் பயன்படுத்தலாம். கால்நடைகளுக்கும் கொடுக்கும் தவிடு, பிண்ணாக்கு போன்ற அடர் தீவனங்களில் பயோ. என்.பி.கே திரவத்தைக் (ஒரு மாட்டுக்கான தீவனத்தில் 250 மில்லி என்ற விகிதத்தில்) கலந்து பிசைந்து கொடுக்கும்போது… ஆடு மாடுகளின் உணவுக்குழாய் மற்றும் உள்ளுறுப்புகளில் நுண்ணுயிர்கள் அதிகமாகப் பெருகும். இதனால் இரைப்பை, குடல் ஆகிய உறுப்புகளில் செரிமானம் தொடர்பாக நடைபெறும் செயல்கள் எளிதாகும்.
நூறு கிலோ தீவனத்துக்கு ஒரு லிட்டர் பயோ என்.பி.கே எனக் கலந்து மீன் வளர்ப்பில் பயன்படுத்தும்போது நீரின் கார அமிலத்தன்மை மாறும். குளங்களின் தரைப்பகுதியில் உள்ள தாவரங்கள் சிறப்பாக வளரும். கோழிகளுக்கு ஒரு லிட்டர் நீரில் 10 மில்லி என்ற அளவில் கலந்து குடிநீராகக் கொடுக்கலாம்.
இதைத்தவிர, பெரிய தொழிற்சாலைகளில் கழிவுநீரைச் சுத்தப்படுத்தவும் பயோ என்.பி.கே திரவத்தைப் பயன்படுத்த முடியும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் சாக்கடைகள், கழிவுநீர் குட்டைகளிலும் இதைக் கலந்தால், துர்நாற்றம் குறையும். தொழிற்சாலைக் கழிவுநீரில் இதைக் கலந்து மறுசுழற்சி செய்ய முடியும். குப்பைமேடுகள், சாக்கடை உள்ள இடங்களில் இதைப் பயன்படுத்தி, துர்நாற்றத்தைக் குறைக்கமுடியும்.
அதையெல்லாம்விட முக்கியமாக பயோ என்.பி.கே திரவத்தைப் பயன்படுத்தி விதைநேர்த்தி செய்யலாம். கடினத்தன்மையுள்ள விதைகளை இதில் ஊறவைத்து விதைத்தால், முளைப்புத்திறன் அதிகரிக்கும். நாற்றுகளின் வேர்களை இதில் நனைத்தும் நடவுசெய்யலாம்.
அடுத்ததாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய நுண்ணுயிர் ‘ஆம்’. இது ஒரு பூஞ்சணம். ‘ஆர்பஸ்குலர் மைக்கோரைஸா’(AM-Arbuscular mycorrhiza) என்ற பெயரின் சுருக்கம்தான் ‘ஆம்’. ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் ‘வேம்’ என்ற பூஞ்சணத்தின் நவீனப் பதிப்பு. இதை வேர்களின் தாய் என்றும் அழைக்கிறார்கள்.
வேளாண்மைக் கல்லூரி, வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் சில தனியார் நிறுவனங்களில் கிடைக்கிறது. இதை விவசாயிகளே உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்றாலும், தற்போதைய சூழலில் அதற்கான வாய்ப்புக் குறைவு. இது தானியப் பயிர்களின் வேர்களில் தானாகவே வளரக்கூடிய ஒரு வகைக் காளான். தாவரங்களின் வேரில் தனது உடலைச் செலுத்தி உயிர் வாழக்கூடியது. 90 சதவிகித தாவரங்களில் இந்தப் பூஞ்சணம் இயற்கையாகவே உற்பத்தியாகிறது.
உதாரணமாக மக்காச்சோளம், கோதுமை, சோளம், கம்பு போன்ற, கம்பு போன்ற தானியப்பயிர்களின் வேர்களில் அதிகளவு இருக்கும். இவற்றின் வேர்களிலிருந்து, இந்தப் பூஞ்சணத்தைப் பிரித்தெடுத்துதான் விற்பனை செய்கிறார்கள்.
ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு கிராம் ‘ஆம்’ பூஞ்சணத்தைக் கலந்து… அதில் விதைகளை ஊறவைத்து நடுவதன்மூலம் முளைப்புத்திறன் அதிகரிக்கும். விளைச்சல் மூன்று முதல் நான்கு மடங்கு அதிகரிக்கும். வறட்சியான காலங்களில் தாவரங்கள் தாக்குப்பிடித்து வளர இது உதவியாக இருக்கும். வளர்ந்த நாடுகள், இதைப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்திவருகின்றன. நாம் இப்போதுதான் பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம். இந்தப் பூஞ்சணம் மண்ணில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் சத்துகளைத் தாவரங்கள் எடுத்துக்கொள்ளும் வகையில் சிதைத்துக் கொடுப்பதில் பெரும் பங்காற்றுகின்றன.
வறட்சி தாங்க உதவும் பி.பி.எஃப்.எம்
தற்போது நிலவும் வரலாறு காணாத வறட்சியில் விவசாயிகள் சிக்கித் தவிக்கிறார்கள். விளைந்து நிற்கும் பயிர் வறட்சியில் வாடுவதைப் பார்க்கும்போதெல்லாம், ஒவ்வொரு விவசாயிக்கும் தானாகவே கண்ணீர் வரும். இப்படிப்பட்ட வறட்சியைப் பயிர்கள் ஒரளவு தாக்குப்பிடிக்க உதவும் வகையில்… கடந்த ஆண்டு கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகம் மூலமாக டெல்டா மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப் பட்டதுதான் ‘பி.பி.எஃப்.எம் பாக்டீரியா’ (ppfm-pink pigmented facultative methylotrophic bacteria).‘இலை மேற்பரப்பு பாக்டீரியா’ என்றும் அழைக்கப்படுகிறது.
இது பயிர்கள் முழுமையாக வறட்சியைத் தாங்கும் ஆற்றலைக் கொடுக்காது. ஆனால், இதை மாதம் ஒருமுறை தெளித்துவந்தால்… பத்து, பதினைந்து நாள்கள் வரை செடிகளை வாடவிடாமல் பாதுகாக்கும். சமதளப் பரப்புகளில் உள்ள நிலங்களிலிருந்து வெளியேறும் கார்பன், குளுக்கோஸ் மற்றும் சில அமினோ அமிலங்களைப் பயன்படுத்தி வளர்கிறது. பொதுவாக, இலைகளின் மேல்பரப்பில் இவை வளரும். காலை நேரங்களில் பயிர்களின் இலைமீது பனி படர்ந்ததுபோல், ஈரத்தன்மை இருக்கும் அல்லவா… அதற்குக் காரணம் இலைத்துளைகள் வழியாக செடியிலிருந்து கார்பன் உள்ளிட்ட சில பொருள்கள் வெளியேறுவதுதான். இலைகளின் மேல்பரப்பில் இருக்கும் மெத்தனால் பாக்டீரியா, அப்படி வெளியேறும் கார்பனை உணவாக எடுத்துக்கொள்கிறது.
தற்போது திரவ வடிவில் கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்த பி.பி.எஃப்.எம் பாக்டீரியா கிடைக்கிறது. அதை வாங்கி அதிகாலை மற்றும் மாலை வேளைகளில், பயிர்களின் இலைகளில் படுமாறு தெளிக்கலாம். ஒரு ஏக்கர் நிலத்துக்கு 200 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி பி.பி.எஃப்.எம் கலந்து தெளிக்க வேண்டும். இது இலைகளின் மேற்பரப்பில் பெருகிச் செடிகளை வாடாமல் இருக்கவைக்கும்.
இதைவிதைநேர்த்திக்கும் பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் 10 மில்லி என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்யலாம். இதனால், முளைப்புத்திறன் அதிகமாகும். இலைகளின் பரப்பில் குளோரோபில் அளவு அதிகரிக்கும். வழக்கத்தைவிட சீக்கிரம் பூ எடுக்கும். காய் மற்றும் பழங்களின் நிறம், சுவை, தரம் ஆகியவை அதிகரிக்கும். வழக்கமான மகசூலைவிட பத்து சதவிகித அளவு மகசூல் அதிகரிக்கும். இதை, அனைத்துப் பயிர்களிலும் பயன்படுத்தலாம். ரசாயனப் பூச்சிக்கொல்லிகளுடன் இதைக் கலக்கக் கூடாது.
நன்மை தரும் நுண்ணுயிரி மருந்துகளை பயன்படுத்தி நம் விளைச்சலை பெருக்குவோம்.
நன்றி
பசுமை விகடன்