Site icon Vivasayam | விவசாயம்

தென்னையில் ஊடு பயிராக ஜாதிக்காய்

சாதிக்காய் அல்லது ஜாதிக்காய் (Nutmeg) எனப்படுவது மிரிஸ்டிகா இனத்தைச் சேர்ந்த பல மரங்களில் ஒன்று. இந்தோனேசியாவின் மொலுக்காஸ் அல்லது ஸ்பைஸ் தீவுகளில் உள்ள பான்டா தீவுகளைப் பிறப்பிடமாகக்கொண்ட பசுமையான மரமானமிரிஸ்டிகா ஃபிராக்ரன்ஸ் இவ்வினத்தைச் சேர்ந்த வணிக முக்கியத்துவம் வாய்ந்த மரமாகும்சாதிக்காய்ப்பழம்சாதிக்காயின் மேல் ஓடுபோன்றவற்றிலிருந்து பெறப்படும் நறுமணப் பொருள்கள் மற்றும் மருத்துவ குணங்களால் சாதிக்காய் மரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது

தமிழ்நாட்டில் மலைப் பிரதேசங்களில் அதிகமாக விளையும். அதேபோல் தமிழகத்தின் சில பகுதிகளில் சேத்தமடை, செம்மனாம்பதி, ஆனைமலை, சமத்தூர், வேட்டைகாரன்புதூர் பகுதிகளில் ஜாதிக்காயை ஊடுபயிராகப் பயிரிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கோவை மாவட்டம் ஒடையக் குளத்தைச் சேர்ந்தவர் ஒ.வி.ஆர்.சோமசுந்தரம் அவர்கள். கடந்த 30 ஆண்டுகளாக தென்னைக்கு ஊடு பயிராக ஜாதிக்காய், கோகோ பயிரிட்டுள்ளார். அவரின் அனுபவத்தை கேட்டபோது…

25 அடி இடைவெளியில் 4 தென்னைக்கு இடையில் ஒரு ஜாதிக்காய் நட வேண்டும்.

ஜாதிக்காயைப் பொறுத்தவரைக்கும் ஏழு வருஷத்துக்கு மேல்தான் மகசூலுக்கு வரும். முந்நூறு வருஷம் வரைக்கும் மகசூல் கொடுக்கும். வயசு அதிகமாக அதிகமாக மகசூலும் அதிகமாகும். இப்ப மூணு வருஷமாத்தான் மகசூல் கிடைச்சுட்டு இருக்கு. மொத வருஷம் சொல்லிக்கிற மாதிரி இல்லை. போன வருஷம் சுமாராகக் காய்ச்சிருந்து. இந்த வருஷம் பரவாயில்லை. ஜாதிக்காய்க்கு தனியா எந்தப் பராமரிப்பும் செய்றதில்லை. தென்னை, பாக்குக்குச் செய்ற பராமரிப்பிலயே வளந்திடுது.

இதுக்கு இதுவரை நோயே தாக்குனதில்லை. ஜாதிக்காய்ல ஆண் மரங்களும் காய்க்கும். ஆனா, அந்தக் காய் சரியான வடிவத்துல இல்லாம ஒழுங்கினமா இருக்கும். நல்லா காய்க்கிற மரத்துல இருந்து பட்டை எடுத்து, ஆண் மரங்கள்ல பரு ஒட்டு முறையில் ஒட்டுக் கட்டினா, அந்த மரமும் பெண் மரமா மாறிடும். ஆனாலும், மகரந்தச் சேர்க்கைக்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில ஆண் மரங்களைப் பராமரிக்கணும்.

ஜாதிக்காய் அறுவடைக்குத் தயாரானதும் காய் வெடிச்சு நிற்கும். அந்தப் பருவத்துல அறுவடை செய்யணும். காயில இருந்து கொட்டை தனியா பிரிஞ்சு நிற்கும். அதை எடுத்து, கொட்டைக்கு மேல, ஒட்டிக்கிட்டு இருக்கிற பத்ரியை பிரிச்சு எடுத்துடணும் அதுக்குப் பிறகு, கொட்டையை உடைச்சா, உள்ள ஜாதிக்காய் இருக்கும். ஜாதிகாய் கிலோ 300 ரூபாய் வரைக்கும் விலை போகும். 200 ரூபாய்க்கு குறையாது. ஒரு கிலோ பத்ரி, 800 ரூபாய் வரைக்கும் விலை போகும், போன வருஷம் 500 மரங்கள்ல இருந்து 5 லட்ச ரூபாய் வருமானம் கிடைச்சுது. இந்த வருஷம் நல்லா காய்ப்புல இருக்கும்கிறதால கூடுதல் வருமானம் கிடைக்கும்னு எதிர்பார்க்கப்படுகிறது.

இனி, ஒவ்வொரு வருஷமும் ஜாதிக்காய் மூலமா வருமானம் அதிகரிச்சுட்டுதான் இருக்கும். சொல்லப்போனா, தென்னையில வர்ற வருமானத்தை விட ஊடுபயிரான ஜாதிக்காய் மூலமா அதிக வருமானம் கிடைக்குது. முதல் ஆண்டில் ஒரு செடிக்கு தினமும் 10 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 10 லிட்டர் தண்ணிரை அதிகப்படுத்த வேண்டும். ஐந்தாம் ஆண்டுக்க மேல், ஒரு மரத்துக்குத் தினமும் 50 லிட்டர் தண்ணீர் போதுமானது. ஜாதிக்காய், இயல்பிலேயே அதிக நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது என்பதால் நோய்த் தாக்குதல் இருக்காது. ஆண்டுக்கு இரண்டு முறை, அடியுரமாக 30 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரம் கொடுக்க வேண்டும். காய்கள் வெடிக்கத் தொடங்கும்போது அறுவடை செய்யலாம். அறுவடை செய்த காய்களில் இருந்து பத்ரியை தனியாகவும், காயைத் தனியாகவும் பிரித்தெடுக்க வேண்டும். பத்ரியை நிழலிலும், காயை வெயிலிலும் காய வைத்து சேமித்து, தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யலாம். ஏழு ஆண்டுகளுக்கு மேல் மகசூல் கொடுக்கத் தொடங்கும். 10 வயதான ஒரு மரத்தில் இருந்து சராசரியாக 10 கிலோ ஜாதிக்காயும், 2 கிலோ பத்ரியும் கிடைக்கும்” என்கிறார் சோமசுந்தரம்!

ஜாதிக்காயின் மருத்துவ பயன்கள்!

  1. ஜாதிக்காய் ஊறுகாய் மன்னர்களின் காலத்தில் இயற்கை ‘வயாக்ரா’வாகப் பயன்படுத்தப்பட்டது.
  2. உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி, பாலுணர்வைத் தூண்டுகின்ற இயல்பு ஜாதிக்காய்க்கு உண்டு.
  3. கொழுப்பைக் குறைப்பதால், பராம்பரிய இனிப்பு வகைகளில் இது சேர்க்கப் படுகின்றது.
  4. தாது நஷ்டம், பேதி, சருவாசிய நோய், சிர நோய், சுவாசம், காசம், உள்கிராணி, வெப்ப நோய் ஆகியவற்றை இது போக்கும்.
  5. இது உடலுக்கு பலம் தரும், உடல் வெப்பத்தை நீக்கி இதமான மிருதுவான குளுமையைத் தரும்.
  6. ஜாதிக்காயில் மூன்று சதம் எண்ணெய் உண்டு. இந்த எண்ணெய் மருந்தாகப் பயன்படுகிறது.
  7. வயிற்று நோய், வயிற்றுக்கடுப்பு ஆகியவற்றுக்கு இது நிவாரணம் அளிக்கின்றது.
  8. ஜாதிக்காய்ப் பொடியை தினமும் சிட்டிகை அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் இரவில் நல்ல தூக்கம் வரும்.

 

நன்றி

சோமசுந்தரம்

மண்வாசனை

Exit mobile version