Site icon Vivasayam | விவசாயம்

வாழ்வு தரும் மூலிகைகள்!

   நமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் மூலிகைகள் பற்றிய அறிவு சிறப்பானது. அடுக்கு மாடிக்கட்டிடத்தில் வாழ்ந்தாலும் கூட, சற்று சூரிய ஒளி தெரியும் இடத்தில் பூந்தொட்டி வளர்த்து அதில் ஒரு துளசியையாவது நடுகிறார்கள்.

    மொட்டைமாடி உள்ளவர்கள் துளசியுடன், கீழாநெல்லி, கரிசாலை, செம்பருத்தி, நன்னாரி, இஞ்சி, கறிவேப்பிலை, புதினா, விபூதிப்பச்சிலை, வெட்டிவேர்,சோத்துக் கத்தாழை, ஓமவல்லி, மணத்தக்காளி, அறுகம்புல், நிலவேம்பு, நந்தியாவட்டை, தும்பை, கொத்தமல்லி, வல்லாரை, பொன்னாங்கண்ணி, அகத்தி, முருங்கை போன்றவற்றைப் பயிர் செய்து வளர்க்கும் முயற்சி பரவி வருகிறது. கிராமங்களில் வாழ்ந்தவர்கள் பிழைப்பை நாடி நகரங்களில் குடியேறினாலும் நகர்ப்புற விவசாய அடிப்படையில் பாரம்பரிய மூலிகைகளை மறக்கவில்லை. சிறிய நகரங்களில் வாழ்பவர்கள் வீட்டைச் சுற்றியுள்ள மண்ணில் தோட்டம் போடும் போது மூலிகை வளர்ப்பை இணைத்து காய்கறிகள், பூமரம், பழமரம் சாகுபடி செய்வதுண்டு.

   இந்தக்கால மருத்துவத்தில் அலோபதி முறையே கொடிகட்டிப் பறக்கிறது. இன்றுள்ள அவசர உலகில் நம் உடம்பில் ஏற்படும் சிறிய சிறிய பிரச்சனைகளுக்கெல்லாம் அனுபவ அடிப்படையில் அவரவர் சுயமாக மருந்துக் கடைகளுக்குச் சென்று மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். தலைவலி, காய்ச்சல் என்றால் அந்தக் காலத்தில் கொல்லையில் உள்ள விபூதிப் பச்சிலையைக் கசக்கித் தலையில் தேய்ப்பார்கள். வீட்டில் உள்ள அஞ்சறைப்பெட்டியிலிருந்து சுக்கு, மிளகு, திப்பிலி எடுத்து நீரில் கொதிக்க வைத்து ஒரு கஷாயம் செய்து குடிப்பார்கள். அவ்வளவு சிரமம் ஏன், என்று மாறிவிட்ட மனிதர்கள் கொல்லைப்புறத்தை மறந்துவிட்டு வாசல்புரம் சென்று வீதிக்கு வீதி உள்ள இங்கிலீஷ் மருந்துக்கடைக்குச் சென்று இரண்டு பாரசிட்டமால் மாத்திரைகளை வாங்கி விழுங்கக் கற்றுக் கொண்டு விட்டார்கள். அல்லது டாக்டரிடம் சென்று ஒரு ஊசி போட்டுக் கொண்டு இருநூறு ரூபாயில் வேலையை முடித்துக் கொள்ளலாம். இன்றுள்ள அவசர உலகில், நாட்டு மருந்து சாப்பிட்டு உடலுக்கு ஓய்வு கொடுக்க முடியவில்லை. அவசர உலகில் அவசர நிவாரணமே தேடப்படுகிறது. எனினும், ஒரு சிலர் பாரம்பரியத்தைக் கைவிடுவது இல்லை. இப்படி திசைமாறிச் செல்லும் மனிதனின் அவசர உலகத்தின் அசுர வேகத்திற்கு ஒரு வேகத்தடை அவசியம்தானே!

    அவசர சிகிச்சைக்கு ஏற்பவும் சில பாட்டி வைத்தியங்கள் வீட்டில் வளர்க்கப்படும் மூலிகைகள் மூலம் நிவர்த்தி செய்ய முடியலாம். அவசரத்திற்கு இரண்டு குரோசின்/ பாரசிட்டமால் விழுங்கிய பிறகும் ஒரு முயற்சி செய்யலாமே! உதாரணமாக தொண்டைப்புண், இருமல், சற்று லேசான இளைப்பு, தொண்டைக்கட்டு என்றால் ஏலக்காய் அரிசியை மிக்சியில் பொடி செய்து உருக்கிய நெய்யில் குழைத்து ஒரு மாதம் சாப்பிடலாம். தூதுவளையில் ரசம் செய்து சாப்பிடலாம். தூதுவளைத் துவையல் இன்னும் நல்லது. ஒரு வெற்றிலையைப் பறித்து/ வாங்கி அதில் 3 உலர்ந்த திராட்சையுடன் ஒரு சிட்டிகை மிளகுத் தூளைக் கலந்து மெல்லுங்கள். சாற்றை உள்ளே இறக்கவும். துளசி, ஆடாதொடை, தூதுவளை, வெற்றிலை ஆகியவற்றில் இரண்டைத் தேர்ந்தெடுத்து நீரில் கொதிக்க வைத்துப் பனங்கற்கண்டும் மிளகுத் தூளும் போட்டு 2 வேளை குடிக்கலாம். இப்படியெல்லாம் இன்னும் சிலர் தமக்குத்தாமே வைத்தியம் செய்து கொள்வதுண்டு!

     நமது சித்தஆயுர்வேத வைத்திய முறை வாகபட்டர், அகத்தியர், தேரையர், சரகர், சுஷ்ருதர், சாரங்கதாரர் என்று பல முனிவர்களால் உருவானது. இந்திய மருத்துவம் தொடர்பான பல சுவடி இலக்கியங்களும் நம்மிடம் உண்டு. மிகவும் தவிர்க்க இயலாத அறுவை சிசிச்சையைத் தவிர மற்ற பல நோய்களுக்கு புற்றுநோய் உட்பட ஆயுர்வேத முறையில் மருந்து உண்டு. பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம். வந்தபின் காப்பது அலோபதிதான் என்றாலும், வருமுன் காப்பது, உணவே மருந்து, என்ற அடிப்படையில் ஆயுர்வேதம் உதவும். இந்திய மருத்துவ முறையில் தாவரங்கள் மட்டுமே ஆயுர்வேத முறையில் பயனாகின்றன. எனினும் அபூர்வமாக சில பாஷாணங்களுக்கு ஸ்புடம் போட்ட உலோக மருந்துகள், மண்புழுக்கள், கஸ்தூரி, புனுகு சேர்க்கப்படுவதுண்டு.

    ஆயுர்வேதம் எப்போது தோன்றியது என்று ஆராயப் புகுந்தால் புத்தர் நம் நினைவுக்கு வருகிறார். உலகத் துன்பங்களுக்குக் காரணம் என்ன? இந்தக் கேள்வியுடன் அரச போகத்தையும் கட்டிய மனைவியையும் துறந்து, காடும், மலையும் அலைந்து திரிந்து, லும்பினி என்ற இடத்தில் அரச மரங்கள் நிறைந்த ஒரு வனத்தில், தவமிருந்த புத்தன் அஷ்டாங்க மார்க்கத்தை தவப் பயனாக பெற்றான். தம்ம பதத்தில் அஷ்ட ஆரிய சத்தியங்கள்என்று குறிப்பிட்டுள்ளது. “ஆரியஎன்றால் அது, புத்தரைக் குறிக்கிறது.

அவையாவன:

  1. சம்யக் திருஷ்டி (நல்ல பார்வை)
  2. சம்யக் சங்கல் (நல்லொழுக்கம்)
  3. சம்யக் வாக்கு (வாய்மை)
  4. சம்யக் கர்மா (நல்ல செயல்)
  5. சம்யக் ஆஜிவம் (நல்ல ஜீவனம்)
  6. சம்யக் வியாமம் (தீமைக்கு இடம் கொடேல்)
  7. சம்யக் ஸ்மிருதி (மனக்கட்டுப்பாடு)
  8. சம்யக் சமாதி (பிரம்ம நிர்வாணம்)

     புத்தரைப் போல் சமகாலத்தில் உலகத் துன்பங்களுக்கு வழிதேடிய மகான்களால் வேதாந்தங்கள் என்ற உபநிடதங்களும் தோன்றின. வடக்கே புத்தமும் உபநிடதங்களும் மலர்ந்த காலகட்டத்தில் தெற்கே, அகத்தியர், திருமூலர், தேரையர் போன்ற சித்தர்களும் துன்பங்களுக்கு நிவாரணம் தேடினர். இவர்களில் திருமூலர் தனித்து நின்று உள்ளம் வெளுக்க வழிதேடும் போது ஊனை மறக்க முடியாதுஎன்று இவ்வாறு பாடியுள்ளார்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவார்

திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

திருமூலர் வாசகத்திலிருந்து நாம் அறியும் செய்தி.

மனித உடலை நோயின்றிப் பாதுகாக்க வேண்டும்….” என்பதுதான், புத்தர் ஞானஒளி பெற்று அறிவித்த அஷ்டாங்க மார்க்கம். உள்ளத்தில் ஒளி பிறக்க உருவானது, உடலில் ஒளிபெற ஆயுர்வேதக் கடவுளாயுள்ள வாகபட்டரின், அஷ்டாங்க சங்கிரா மற்றும் அஷ்டாங்க ஹ்ருதயம் போன்ற சுவடிகளில் அடங்கியுள்ள வைத்தியங்கள் போதுமானவை. எட்டு வழிப் பாதையைப் போல், “என்ன சாண் உடம்புக்கு சிரேச பிரதானம்என்று சித்தர்கள் கண்டுபிடித்தார்கள். என்னதான் ஆயிரம் வைத்தியம் செய்தாலும் மூளை நரம்பு பாதிக்கப்பட்டால் மனிதன் செயலிழப்பான் என்று இன்றைய அலோபதி கூறுவதை அன்றே சித்தர்கள் முன் மொழிந்து உடலுடன் தலையைப் பாதுகாக்கும் தவத்தில் ஈடுபட்டனர்.

     ஆயுர்வேத வைத்திய முறையின் தோற்றத்திற்குரிய விடையை புத்தரின் தோற்ற காலத்திலிருந்து தொடங்கலாம். சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே நாடு நகரங்களை விட்டு காட்டில் தவம் புரிந்த பல முனிவர்களில் புத்தரும் ஒருவர். மனித துன்பங்களுக்குரிய தீர்வுகளை புத்தரைப் போல் மற்ற பல முனிவர்களும் வேண்டினர். உடலில் ஏற்படும் நோய்களுக்குரிய மருந்துகளை சில அபூர்வ மூலிகைகளின் மூலம் கண்டறிந்து அடையாளப் படுத்தினர். அப்படிப்பட்ட தவங்கள் மூலம் பெற்றவைதான் ஆயுர்வேதம்இதன் பொருள் நல்வாழ்வுக்குரிய நல்லறிவு“.

     வாழ்க்கை பற்றிய அறிவில் விளைந்தவைதாம் மூலிகைகளின் நோயாற்றும் குணங்களின் கண்டுபிடிப்புகள். ஆயுர்வேத சிகிச்சை முறையில் உடலுக்கு முதல் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. திருமூலர் கூற்றிலிருந்து இது புரியும். அடுத்து மனம், கண்டுபிடித்த அஷ்டாங்க ஒழுக்க முறை வழங்குகிறது. மூன்றாவதாக ஆன்மா, இதுவும் புத்தரின் பிரம்மநிர்வாணம், உபநிடதங்கள் வழங்கும் புருஷார்த்தங்கள், திருவள்ளுவர் வழங்கும் திருக்குறள் கூறும் நல்ல அறங்கள் ஆகியவை ஆன்ம சுத்திக்கு வழிகாட்டும். இந்து மதத்தின் அடிப்படைத் தத்துவமே உயிருக்கும் ஆன்மாவுக்கும் உள்ள உடனுறவுகளில் தான்துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் போன்ற சித்தாந்தங்கள் தோன்றின. ஆகவே, மனம், வாக்கு, காயம் என்பதுபோல், மனம், ஆன்மா, உடல் மூன்றையும் இணைத்த தவவாழ்வில் பழங்குடி மக்களின் பாரம்பரிய அறிவுகளையும் ஆயுர்வேதம் எழுதிய தவசிகள் உடற்கூறுகளின் நன்மைகளுக்காகத் திரட்டியிருக்க வேண்டும். நோயாற்றும் அற்புத மூலிகைகளின் திரட்டே வாழ்வின் தோட்டம். வாழ்க்கையென்னும் தோட்டத்தில் மணம் பரப்பும் மூலிகைகளைப் பகுத்துப் பார்த்து ஆராய்ந்த சித்தர்களையும் முனிவர்களையும் ஈன்றெடுத்த பாரதம், தலைமுறை தலைமுறையாகக் காப்பாற்றப் பட்டும் பயிரிடப்பட்டும் வந்துள்ள வாழ்வின் தோட்டத்தில் கண்டெடுத்த அற்புத மூலிகைகளை நாம் தொடர்ந்து கவனித்து வகைப்படுத்த வேண்டும். அவ்வாறு வகைப்படுத்தி பார்க்கும் போது நமக்கே வியப்பும் மலைப்பும் தோன்றும்.

  1. தெய்வீக மூலிகைகள்:தாமரை, துளசி, அரசமரம், ஆலமரம், வில்வம், வேம்பு, கஞ்சா, ருத்ராஷம், நாவல், தென்னை, புரிசை
  2. மருத்துவ மூலிகைகள்:பிராமி(வல்லாரை), தண்ணீர் விட்டான் கிழங்கு, அசோகம், ஆமணக்கு, ஆடாதொடை, கடுக்காய், தான்றி, நெல்லி, எருக்கு, செம்மந்தாரை, சரக்கொன்றை, அத்தி, மருதம், வாழை, ஊமத்தை, அசுவகந்தா. குக்கல் மஞ்சிஸ்தா, மூக்கரட்டை, கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி, திப்பிலி, முருங்கை, வசம்பு.
  3. நறுமண உணவு மூலிகைகள்:கறிவேப்பிலை, இஞ்சி, மிளகு, சீரகம், இலவங்கம், பட்டை, ஏலக்காய், கசகசா, சோம்பு, பெருங்காயம், ஜாதிக்காய், குங்குமப்பூ, மஞ்சள், ஓமம், கண்டந்திப்பிலி, பூண்டு, வெற்றிலை, எலுமிச்சை.
  4. உடல் பூச்சு மூலிகைகள்:சந்தனம், மஞ்சள், மருதாணி, செம்பருத்தி, சீயக்காய், சிலை, வெட்டிவேர், விளாமிச்சை, ரோஜா, கற்றாழை.
  5. வாசனை திரவம்:சந்தனம், ரோஜா, மல்லிகை, மரிக்கொழுந்து, மனோரஞ்சிதம், வெட்டிவேர்…

நன்றி : மண்வாசனை

Exit mobile version