Skip to content

  வறட்சியிலும் வற்றாத மகசூல் கொடுக்கும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா!

“ஆத்துத் தண்ணி கிடைக்கல; மழையும் கிடைக்கல. அதனால நெல் விவசாயமே கேள்விக்குறியாகிடுச்சு. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் குறைஞ்சளவு தண்ணியை வெச்சே நெல் சாகுபடி பண்ணி கணிசமான மகசூல் எடுத்திருக்கேன். அதுக்குக் காரணம், இயற்கை முறை விவசாயத்துல பாரம்பர்ய நெல் ரகத்தைப் பயிர் செஞ்சதுதான்” என்று இயற்கை விவசாயத்துக்கும் பாரம்பர்ய நெல் ரகத்துக்கும் கட்டியம் கூறுகிறார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன்.

திருநெல்வேலி  மாவட்டம் பணகுடியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பதிவிரிசூரியன் கிராமத்தில் உள்ளது முருகனின் நெல் வயல், ஒரு காலை வேளையில் அறுவடைப் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்த முருகனைச் சந்தித்தோம்.

“விவசாயம்தான் குடும்பத்தொழில் ஐந்தாம் வகுப்பு வரைதான் படிச்சேன். அதுக்கப்புறம் பள்ளிக்கூடத்துக்குப் போறதை நிறுத்திட்டு அப்பாவோடு சேர்த்து விவசாயம் பாத்துக்கிட்டு இருந்தேன். பிறகு, மும்பைக்குப்போய் ஒரு கம்பெனில பத்து வருஷம் வேலை பார்த்துட்டு ஊருக்குத் திரும்பி வந்தேன். வந்தபிறகு, திரும்பவும் விவசாயத்தைப் பார்க்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல முழுக்க முழுக்க ரசாயன உரம் பயன்படுத்திதான் நெல் சாகுபடி செஞ்சுட்டு இருந்தேன். என் வயலுக்குப் பக்கத்து வயல்காரர் சமுத்திரபாண்டி மகேஷ்வரன்ங்கிறவரோடது. அவரைச் சின்ன வயசுல இருந்தே நல்லா தெரியும். அவர் இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டு வர்றார்.

தக்கைப்பூண்டு விதைப்பு, பஞ்சகவ்யா தெளிப்பு, அமுதக்கரைசல் பாசனம்னு அவர் நல்ல மகசூல் எடுக்குறதைக் கவனிச்சேன். நாலு வருஷத்துக்கு   முன்னாடி அவர்கிட்ட இயற்கை விவசாயம் பத்திப் பேசினேன். அவர்தான், ரசாயனங்களோட தீமைகள்  பத்தியும் இயற்கை விவசாயத்தோட நன்மைகள் பத்தியும் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தார். இதோட ‘பசுமைவிகடன்’ புத்தகத்தைப் பத்தியும் சொன்னார். அதுல இருந்து பசுமை விகடனைப் படிக்க ஆரம்பிச்சேன். அடுத்த போகத்துலேயே நானும் தக்கைப்பூண்டு விதைச்சு மடக்கி உழுதேன். சாகுபடிக்கு இயற்கை இடுபொருளைத் தயாரிச்சுப் பயன்படுத்த ஆரம்பிச்சேன். அதுல நல்ல பலன் தெரிஞ்சது. அப்புறம் முழு இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். மூணு வருஷமா, பாரம்பர்ய ரக நெல்லைத்தான் சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன்” என்று இயற்கை விவசாயத்துக்கு வந்த கதை சொன்ன முருகன், தொடர்ந்தார்…

“எனக்கு ரெண்டு ஏக்கர் நெல் வயல் இருக்கு. ரெண்டு ஏக்கர்லயும் சம்பா பட்டத்துல ஆத்தூர் கிச்சிலிச் சம்பாவை நடவு செஞ்சேன். இப்போதான் அறுவடையாகிருக்கு. எப்பவும் நான் வைக்கோலை விற்பனை செய்யமாட்டேன். அப்படியே மடக்கி உழுதிடுவேன். ஆனா, இந்த வருஷம் வைக்கோலுக்குப் பயங்கரத்தட்டுப்பாடு. அதனால வைக்கோலையும் விலைபேசி வித்திட்டேன். எப்பவும் நெல்லை நேரடியா விற்பனை செய்யமாட்டேன் நெல்லை அரைச்சு அரிசியாக்கிதான் விற்பனை செய்வேன்.

பணகுடி பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்துல இருக்குற நண்பரோட கடையில வெச்சு, அரிசியை விற்பனை செய்திட்டு இருக்கேன். இதுபோகத் திருநெல்வேலி, தூத்துக்குடினு வெளியூர்களுக்கும் அனுப்புறேன். நான் கைக்குத்தல் அரிசியா விற்பனை செய்றதால, நிறையபேர் விரும்பி வாங்குறாங்க. கைக்குத்தல் அரிசியை ரொம்ப நாள் வெச்சுக்க முடியாது. அதனால ஆர்டரைப் பொறுத்து அப்பப்போ நெல்லை அரைச்சு விற்பனை செய்றேன்” என்ற முருகன், வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“ரெண்டு ஏக்கர் நிலத்துல 5,420 கிலோ நெல் அறுவடையாகியிருக்கு. மொத்த நெல்லையும் அவிச்சு வெச்சுட்டேன் தேவையைப் பொறுத்து நெல்லை அரைச்சு விற்பனை செய்யலாம்னு இருக்கேன். இதைக் கைக்குத்தல் அரிசியா மாத்துனா 3,752 கிலோ கிடைக்கும். ஒரு கிலோ அரிசி 70 ரூபாய்னு விற்பனை செய்றேன்.

அந்தக் கணக்குல 3,752 கிலோ அரிசி மூலமா 2,62,640 ரூபாய் வருமானம் கிடைக்கும். ரெண்டு ஏக்கர் நிலத்துல 150 கட்டு வைக்கோல் கிடைச்சது. அதை, ஒரு கட்டு 300 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 45 ஆயிராம் ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. இதுவரை 700 கிலோ அரிசியை விற்பனை செஞ்சதுல 49 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. அரிசி முழுசா விற்பனை செஞ்சு முடிச்சுட்டா, வைக்கோல் விற்பனை செஞ்ச தொகையையும் சேர்த்து மொத்தம், 3,07,640 ரூபாய் வருமானமாக் கிடைச்சுடும். இதுல எல்லாச்செலவும் போக, 2,38,622 ரூபாய் லாபமா நிக்கும்னு எதிர்பார்க்கிறேன்” என்ற முருகன் நிறைவாக…

“இந்த வருஷம் மழை இல்லாததுனால ரசாயன உரம் போட்டுச் சாகுபடி செஞ்ச விவசாயிகள், லாரியில தண்ணீர் வாங்கிப்  பாய்ச்சினாங்க. ஆனாலும், அவங்களுக்கு மகசூல் சரியா இல்லை. நான் குறைவான தண்ணீர் கொடுத்ததிலேயே இந்தளவு மகசூல் கிடைச்சது பெரிய விஷயம். அதில்லாம, வறட்சியினால வைக்கோல் மூலமாவும் கணிசமான லாபம் கிடைச்சுடுச்சு” என்று சொல்லி விடைகொடுத்தார்.

நன்றி

-பசுமை விகடன்.

2 thoughts on “  வறட்சியிலும் வற்றாத மகசூல் கொடுக்கும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா!”

Leave a Reply

editor news

editor news