Skip to content

உழவும் தொழிலும் மரவள்ளிக் கிழங்கும்!!!

 

சிப்ஸாக விற்றால் லாபம் 2 மடங்கு!

விவசாயம் சிரமத்தில் நடக்க, விளை பொருட்களை வைத்து நடக்கும் வியாபாரங்களோ உற்சாகமாக நடந்து கொண்டிருக்கிறது… அதற்குக் காரணம் விவசாயி மூலப்பொருளை உற்பத்தி செய்பவராகவும் வியாபாரி விற்பனைக்கான பொருளை அதிலிருந்து தயாரிப்பவராகவும் இருப்பதுதான். விவசாயிகளும் தங்கள் விளைபொருளை நுகர்பொருளாக்கி விற்கும் திறனை வளர்த்துக் கொண்டால் எல்லா காலத்திலும் ஒரு நிலையான வருமானத்தைப் பெறலாம்…

பணப் பயிர்களை வளர்க்கும் சிறு, குறு விவசாயிகள் சாகுபடி காலங்கள் தவிர்த்து சாதாரண நேரங்களிலும் ஒரு நியாயமான வருமானத்தைப் பெற பல வழிகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் மரவள்ளிக்கிழங்கில் இருந்து சிப்ஸ் தயாரித்து விற்பது… ஒரு டன் மரவள்ளிக்கிழங்கை அப்படியே விற்கும்பொழுது கிடைக்கும் லாபத்தைப் போல இரண்டு மடங்கு லாபத்தை அதை சிப்ஸாக செய்து விற்கும்பொழுது கிடைக்கிறது…

இதற்கு பெரிய தொழில் நுட்ப அறிவெல்லாம் தேவை இல்லை கொஞ்சம் முதலீடு… நிறைய உழைப்பு… மற்றபடி நொறுக்குத் தீனிகளுக்கான சந்தை என்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்வது… குடும்பமாக உழைத்து நிரந்தரமாக சம்பாதிக்க இந்த மரவள்ளி சிப்ஸ் மகத்தான வழி…

தேவையான ஆட்கள்:

ஒரு சிப்ஸ் மாஸ்டர், மரவள்ளியை உரிக்க 2 தொழிலாளர்கள் வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களேகூட செய்யலாம். கடைகளுக்கு சப்ளை செய்ய தகுதிக்கு ஏற்ப ஒரு மொபட் அல்லது, ஆட்டோ தேவைப்படும். ஒரு டன் கிழங்கில் சிப்ஸ் தயாரிக்க 3 நாட்கள் ஆகும். மாதம் ஒன்றுக்கு 5 டன் வரை தயாரிக்க முடியும்.

சந்தை வாய்ப்பு:

100 கிராம், 250 கிராம், ஒரு கிலோ என பேக்கிங் செய்யப்படும் சிப்ஸ் பாக்கெட்டுகளை அருகில் உள்ள சிறிய, பெரிய கடைகள், பேக்கரிகள் என உள்ளூரிலேயே எளிதில் விற்பனை செய்ய முடியும். தயாரிக்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் சிப்ஸ் வகைகளை சாப்பிட வேண்டும். அதற்கு மேல் வைத்திருந்தால் சுவை குறைந்து விடும். எனவே தயாரித்தவுடன் டெலிவரி செய்து விட வேண்டும்.

தோட்டத்தை குத்தகைக்கு எடுக்கும்பொழுது மரவள்ளி கொள்முதல் விலையில் டன் ஒன்றுக்கு ரூ.300/ வரை சேமிக்க முடியும்.

செலவினங்கள்:

ஒரு டன் மரவள்ளிக்கிழங்கு தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி ரூ.7500/- ஒரு டன் மரவள்ளிக்கிழங்கில் சுமார் 380 கிலோ சிப்ஸ் தயாரிக்கலாம். தோட்டத்திலிருந்து கடைக்குக் கொண்டுவர வண்டி வாடகை மற்றும் ஏற்று, இறக்கு கூலி என ரூ.1500/-

எரி பொருள் ரூ.3000/-,

15 கிலோ கொண்ட 2 டின் பாமாயில் ரூ.1800/-

4 கிலோ மிளகாய்த் தூள் ரூ.500/-

4 கிலோ உப்பு ரூ.20 ,

கலர்பொடி ரூ.50/-

சிப்ஸ் மாஸ்டர் சம்பளம் ரூ.400/-

சிப்ஸ் சீவுபவர்க்கு 2 நபர்களுக்கு கூலி ரூ.500/-

பேக்கிங் செய்ய தேவைப்படும் கேரி பேக் ரூ.100/-

விற்பனைக்கு கொண்டு செல்லும் போது வாடகை ரூ 750/-

என ஒரு டன் மரவள்ளிக்கிழங்கில் 380 கிலோ சிப்ஸ் தயாரிக்க ரூ.16,120/- வரை செலவாகும். இது தவிர இட வாடகை, மின் கட்டணம் தனிச் செலவு.

லாபம்:

கிலோ கணக்கில் விற்றால் ஒரு கிலோ ரூ.60க்கு விற்க முடியும். இதன் மூலம் 380 கிலோவிற்கு ரூ.22,800/- கிடைக்கும். 500 கிராம், 250கிராம் என்று பாக்கெட் போட்டு சில்லறையில் விற்கும் போது ரூ.2000/- வரை கூடுதலாக லாபம் ஈட்ட முடியும்.

தோட்டத்தில் இருந்து விலைக்கு வாங்கி வருவதற்கு பதில் தோட்டத்தை குத்தகைக்கு எடுக்கும்பொழுது மரவள்ளி கொள்முதல் விலையில் டன் ஒன்றுக்கு ரூ.300/- வரை சேமிக்க முடியும். மரவள்ளிக் கிழங்கிலிருந்து உரிக்கப்படும் தோலை, மாட்டுத் தீவனம் தயாரிக்க கிலோ ரூ.2/-க்கு வாங்கிக் கொள்வர். இதன் மூலம் ரூ.150 வரை கிடைக்கும் மரவள்ளிக்கிழங்கை தானே விளைவிக்கும் விவசாயிகளுக்கு லாபம் இன்னும் அதிகமாகும்.

தயாரிக்கும் முறை:

மரவள்ளிக்கிழங்கை நன்றாக கழுவி தோலை உரிக்க வேண்டும். பின்பு சிப்ஸ் சீவும் கட்டையைக் கொண்டு தேவையான சைஸ்களில் சீவலாம். வட்டமாக வேண்டுமெனில் அதற்கென உள்ள கட்டையில் சீவ வேண்டும். குச்சி சிப்ஸீக்கு வேறு கட்டை உள்ளது. சீவிய கிழங்குகளை கொதிநிலையில் எண்ணெயில் போட்டு 5 நிமிடங்களில் எடுத்து விடலாம். பேக்கிங் செய்வதற்கு முன்பாக சிறிதளவு மிளகாய்ப் பொடி, உப்பு கலந்து சிப்ஸ் மீது லேசாக தூவ வேண்டும். எண்ணெயில் பொரித்து எடுத்திருப்பதால் பொடி நன்றாக ஒட்டிக் கொள்ளும். பின்பு தேவையான அளவுகளில் பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பலாம். சுவை, தரத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

ஒரு தடவை முதலீடு:

மரவள்ளிக்கிழங்கு, கேஸ் சிலிண்டர், மிளகாய்த் தூள், உப்பு, பாமாயில், கலர் பொடி, வடை சட்டி (வாணலி) அரிகரண்டி, சாரணை, ஹீட்டர், கம்ப்யூட்டர் தராசு ஆகிய பொருட்கள் தேவை. மரவள்ளிக்கிழங்கு சீவும் கட்டை ரூ.750/- எரிபொருள் ரூ.2000/- வடைசட்டி (வாணலி) ரூ.300/- கம்ப்யூட்டர் தராசு ரூ.3000/- என மொத்தம் ரூ.10,000 முதலீடு போதும்.

குறைந்த முதலீட்டில் லாபகரமான இத்தொழிலை, தள்ளுவண்டியில் வைத்தும் செய்யலாம். நன்கு விற்பனை செய்தால் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். விவசாயத் தோடு வியாபாரத்தையும் நம் தகுதிக்கும் வசதிக்கும் ஏற்ப விரிவுபடுத்தும் பொழுது லாபம் மட்டும் அதிகரிப்பதில்லை. தொழிலும் வளர்ந்து கொண்டே செல்லும்…

கார்ப்பரேட்டுகளின் கைகளில் சிக்காத சிறு சிறு சந்தைகளை விவசாயிகள் இப்படி பயன்படுத்திக் கொள்வது, அதற்காக முயற்சிப்பது காலத்தின் தேவை!

இந்த தொழிலையும் இதுபோல் உணவு சார் தொழில்கள், பதப்படுத்துதல், நொறுக்குத் தீனி பற்றிய பல தகவல்கள், கடனுதவி, மார்க்கெட்டிங் பற்றி பல தகவல்கள் கீழுள்ள வலைதளங்களில் நிறைய உள்ளன.

www.mofpi.gov.in

www.iipt.nic.in

www.cftri.res.in

www.tnau.ac.in/agritech/ta

www.indcom.gov.in

www.tanstiafuf.org

www.msmedi.chennai.gov.in

www.siweaindia.org

www.weat.com.

www.kukintamilnadu.com

www.tanuvas.gov.in

நன்றி : மண்வாசனை

Leave a Reply

editor news

editor news