சுரைக்காயும் பருப்பும் போட்டு குழம்பு வைத்தால் ஊரே மணக்கும். பிரியாணியைப் போல் சுரைக்காய்ச் சோறு ஆக்கிச் சாப்பிட்டால் வழக்கத்தை விட ஒரு மடங்கு சாப்பாடு உள்ளே செல்வது உறுதி. சாப்பாட்டில் எப்படி சுரைக்காய் சுகமான பதார்த்தமாக இருக்கிறதோ, அதேபோல் அதை விளைவிக்கும் விவசாயிகளுக்கும் வருமானத்தை வாரி வாரி வழங்குகிறது.
”ஒரு ஏக்கரில் சுரைக்காய் பயிரிட்டால் சீசனில் தினமும் 10 ஆயிரம் வருமானம் பார்க்கலாம். சீசன் இல்லாதபோது நிச்சயம் 5 ஆயிரம் வருமானத்திற்கு குறைவிருக்காது. தினம் 5 ஆயிரம் என்றால் மாதம் ஒண்ணரை லட்சம். செலவெல்லாம் போக ஒரு லட்சம் வீட்டுக்கு கொண்டு போகலாம். உழைப்பு குறைவு, முதலீடு குறைவு. வந்து பாருங்கள் எங்கள் தோட்டத்தை” என்று பஞ்சமாதேவி மனோகரன் சொன்னதும், கரூரை அடுத்துள்ள பஞ்மாதேவி கிராமத்திற்குச் சென்றோம்.
ஒரு ஏக்கரில் போடப்பட்டிருந்த சுரைக்காய்ச் செடியில் சுரைக்காய்களை அறுத்துக் குவித்துக்கொண்டிருந்தார் மனோகரன். அவருக்குத் துணையாக அவரது மனைவியும் சுரைக்காய்களை அறுத்துக்கொண்டிருந்தார்.
சுரைக்காயை அறுத்துக் கொண்டே பேச ஆரம்பித்தார் மனோகரன்,
“நான் சூழ்நிலைக்கேற்ப விவசாயம் செய்பவன். அதுவும் நஷ்டம் தரும் விவசாயத்தை எப்போதும் செய்ததில்லை. தன்னுடைய நிலத்தின் தன்மை, நீரின் அளவு இவற்றை அனுசரித்து விவசாயம் செய்தால் விவசாயிக்கு நிவாரணம் வாங்கும் நிலை வராது. நான் அப்படித்தான்.
ஒரு ஏக்கரில் சுரைக்காய் பயிரிட்டேன் கடந்த வாரம் தினமும் 10 ஆயிரம் வருமானம் பார்த்தேன். இந்த வாரம் தினமும் 5 ஆயிரம் வருமானம் பார்க்கிறேன். இன்னும் ஒரு மாதம் இந்தச் செடியில் காய்கள் வரத்து இருக்கும். அதன் பிறகு வேறு செடியைப் போட்டு அதிலும் தினமும் ஆயிரக்கணக்கில் வருமானம் பார்ப்பேன்” என்றவர், தொடர்ந்து பேசினார்,
“ஒரு ஏக்கர் நிலமும், 4 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சும் அளவுக்கு கிணறோ அல்லது ஒரு போரோ இருந்தால் போதும். சுரைக்காய் பயிரிடலாம்.
ஒரு ஏக்கருக்கு சுரைக்காய் விதை 750 கிராம் தேவைப்படும். 50 கிராம் விதை 300 ரூபாய், விதைக்கு 5 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். ஒரு ஏக்கர் நிலத்தை 5 டிராக்டர் குப்பை உரம் கொட்டி உழவு ஓட்டினால் போதும். இதற்கு 10 ஆயிரம் தேவைப்படும். பிறகு பாத்தி கட்டி விதை ஊன்றுவதற்கு நேராக கயிறு கட்டி விதை ஊன்ற வேண்டும். விதை ஊன்றியதும் தண்ணீர் பாய்ச்சி செடி வளரும் போது புல்களும் வளரும். இதைப் பறிப்பதற்கும் உரம் வாங்குவதற்கும் ஆட்கள் கூலி என 15 ஆயிரத்தைத் தாண்டாது. 30 ஆயிரம் செலவில் வளரும் சுரைக்காய்ச் செடியிலிருந்து 60 வது நாள் முதல் காய்களைப் பறிக்க ஆரம்பிக்கலாம். தினமும் ஆயிரம் காய்கள் பறிக்கலாம்.
முதல் 2 மாதம் ஆயிரம் காய்கள் பறித்த பின்பு அடுத்த ஒரு மாதம் 500 காய்கள் பறிக்கலாம். 3 முதல் 4 மாதம் காய்கள் விளைச்சல் அதிகமாக இருக்கும். காய்கள் குறைந்ததும் செடிகளை அழித்து விட்டு உடனடியாக 3 மாதம் சோளம் விதைத்து விடுவேன். சோளம் அறுத்ததும் அடுத்ததாக சுரைக்காய் போட்டு விடுவேன். இந்த சுரைக்காய் என் குடும்பத்தையே சுகமாக வைத்திருக்கிறது. காலை 6 மணிக்கு சுரைக்காய் பறிக்க ஆரம்பிப்பேன். ஒரே சைஸாக உள்ள காய்களாக பறிப்பேன். 2 மணிநேரத்தில் ஆயிரம் காய்கள் பறித்துவிடுவோம். இந்தக் காய்களை தண்ணீரில் கழுவ வேண்டும். இல்லையேல் காயில் இருக்கும் மணல் உரசி, உரசி, காய் கெட்டுவிடும். தண்ணீரில் கழுவிய காய்களை மூட்டையாக கட்டிக்கொண்டு கரூர் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று மொத்தமாக விற்பேன். காய் எண்ணிக்கையில் விற்பேன்.
கடந்த வாரம் காய் ஒன்றுக்கு 12 ரூபாய்க்கு போட்டேன். இந்த வாரம் 8 ரூபாய்க்கு போடுகிறேன். நல்ல விலைக்குப் போனால் நிச்சயம் வீட்டுக்கு தினம் 10 ஆயிரம் கொண்டு போகலாம். நான் கொண்டு போயிருக்கிறேன். கொஞ்சம் விலை கம்மியாகப் போனால். நிச்சயம் 5 ஆயிரம் கொண்டு போகலாம் ஐ.ஏ.எஸ் ஆபீஸர் கூட அடுத்தவருக்கு பதில் சொல்லித்தான் சம்பளம் வாங்க முடியும். விவசாயி யாருக்கும் பதில் சொல்லாமல் லட்சங்களை வீட்டுக்குக் கொண்டு செல்லலாம். சுரைக்காய் என் வாழ்க்கையை சுகமாக்கியிருக்கிறது. இதோ நான் ஜீப்பில் தான் சுரைக்காயை மார்க்கெட்டுக்கு ஹோண்டா சிட்டியில் தான் வருகிறேன். மாத்தி யோசித்தால் விவசாயம் விவசாயியை ஏமாற்றாது” என்றார்,
nalla pathipu. vivasayam vivasayiyai oru podhum yematradhu
Sir, will I get the phone number of manokaran sir